வேலைவாய்ப்பு: வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு உதவும் தமிழ்நாடு அரசு - பதிவு செய்வது எப்படி?

    • எழுதியவர், ஹேமா ராகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு வழிகாட்டுகிறது தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். அதில் பலர் சரியான முகவர்கள் மூலம் சரியான வேலைக்குச் சென்று பத்திரமாக வீடு திரும்புகிறார்கள். ஆனால், சிலரோ போலி முகவர்களை நம்பிச் சென்று தவறான இடத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இதனால் பல துன்புறுத்தல்களுக்கும்கூட ஆளாகிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசின் இந்த நிறுவனத்தின் மூலமாக சரியான மற்றும் பாதுகாப்பான பணிகளுக்கு தமிழ் மக்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின் சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து தருகின்றனர். மேலும் அதற்கான பயிற்சிகளும்கூட வழங்குகின்றனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டால் பின் சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், இந்நிறுவனம் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது.

மேலும் அதற்கான பயிற்சிகளும்கூட வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் எப்படி இயங்குகிறது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற எப்படிப் பதிவு செய்ய வேண்டும், எங்கு பதிவு செய்ய வேண்டும் என்பன பற்றிய பல தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் & நிர்வாக இயக்குநரான டாக்டர். சி.என். மகேஸ்வரன்.

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் என்னென்ன ?

வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் அந்நாட்டு அரசாங்கம் ,பதிவு செய்யப்பட்ட அதிகார பூர்வமான வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் தான் ஆட்களை தேர்வு செய்வார்கள்.

அப்படி பதிவு செய்யப்பட்ட 3700 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 130 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன.

"வெளிநாட்டு வேலைக்கு மக்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வமான நிறுவனம் தான் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம். இது 1978 இல் தொடங்கப்பட்டது. இப்போது நாங்கள் குறிப்பிட்ட நாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இட்டுள்ளதால், அந்நாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எங்களுக்கு Demand Letter அனுப்புவார்கள். நாங்கள் அதற்கு தகுந்தாற் போல் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வோம்." என்கிறார் மகேஸ்வரன்.

அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் என்னென்ன வேலைக்கு செல்லலாம்?

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் மருத்துவர், பொறியாளர், செவிலியர், வீட்டு வேலைக்கு செல்லும் நபர்கள், மேஸ்திரி, திறன் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அவ்வப்போது அயல்நாட்டு நிறுவனங்களின் பணித்தேவைகளை பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

யாரெல்லாம் இந்நிறுவனத்தில் பதிவு செய்யலாம் ?

இந்நிறுவனத்தில் 4 பிரிவுகளின் கீழ் அயல்நாட்டு வேலைக்காக மக்கள் பதிவு செய்யலாம்.

  • திறன்பெறாத தொழிலாளர்கள், பகுதி திறன் கொண்ட தொழிலாளர்கள், திறமையான தொழிலாளர்கள்
  • டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டதாரிகள் (கலை/அறிவியல்/கணிதம்)
  • செவிலியர்கள் மற்றும் பிற துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் தொழில்முறை/முதுகலை பட்டதாரிகள்
  • MBBS டாக்டர்கள்/முதுகலை பட்டதாரிகள் (சிறப்பு மற்றும் ஆலோசகர் டாக்டர்கள்) ஆகியோர் பதிவு செய்யலாம்.

எங்கு, எப்படி பதிவு செய்யலாம்?

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு 'SIGN UP' என்பதை அழுத்தி தங்களுடைய விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்யும் போது உபயோகத்தில் இருக்கும் தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை பயன்படுத்த வேண்டும்.

விவரங்களை பதிவு செய்தவுடன், உங்களுடைய மின்னஞ்சலுக்கு Activate Account என்ற link கிடைக்கும். அதன் பின்னர் User name மற்றும் Password பூர்த்தி செய்தவுடன் விண்ணப்படிவம் வரும். அதில் விவரங்களை பதிவு செய்து Submit கொடுத்தால் விண்ணப்பம் பதிவாகிவிடும்.

விண்ணப்பங்களை பதிவு செய்ய கட்டணம் உண்டா?

  • ஆம் கட்டணம் உண்டு. இப்போது பத்தாம் வகுப்பு முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை படித்து விட்டு உங்களுக்கு ஏற்கெனவே வேலை பார்த்த அனுபவம் இருந்தால் விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். அதுவே இறுதி ஆண்டு மாணவராக இருந்தால் ரூ.150 செலுத்தினால் போதுமானது.
  • முதுநிலை பட்டப்படிப்பு, பொறியாளர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த டெக்னீசியன் படிப்பு வரை படித்து விட்டு உங்களுக்கு ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் இருந்தால் விண்ணப்ப கட்டணமாக ரூ.1200 செலுத்த வேண்டும். அதுவே இறுதி ஆண்டு மாணவராக இருந்தால் ரூ.400 செலுத்தினால் போதுமானது.
  • மருத்துவர்கள் அதாவது BDS,MDS,MBBS அதற்கும் மேல் படித்திருந்து உங்களுக்கு ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் இருந்தால் விண்ணப்ப கட்டணமாக ரூ.2000 செலுத்த வேண்டும். அதுவே இறுதி ஆண்டு மாணவராக இருந்தால் ரூ.500 செலுத்தினால் போதுமானது.
  • நீங்கள் விண்ணப்பங்களை உறுதி செய்து பதிவு செய்ததும், பணம் செலுத்துவதற்கு ஏதுவாக Net Banking, Credit card, Debit card போன்றவற்றை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
  • நீங்கள் பணம் செலுத்திவிட்டால் உங்கள் இமெயிலுக்கு Acknowledgment தகவல் வந்து சேரும். ஒரு முறை நீங்கள் பதிவு செய்தால் அது 4 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கைப்பேசியில் பயன்படுத்தும் வண்ணம் நாங்கள் OMCL மொபைல் ஆப் உருவாக்கியிருக்கிறோம்.

அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்பதை எப்படி மக்களுக்கு தெரியப்படுத்துவீர்கள்?

எங்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவுசெய்த பிறகு, பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர் விவரங்கள் omcl தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். OMCL குழு விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, காலியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் பொருத்தமான வேலைகளுக்கு உங்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும். நீங்கள் தகுதியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு கடிதம் அனுப்பப்படும்.

இது ஒரு அரசு நிறுவனம் என்பதால் முதலிலேயே நாங்கள் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு தான் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றோம்.

அதே போல் அனைத்து தரவுகளையும் 2 பக்கமுமே நாங்கள் சரிபார்க்கிறோம். நிறுவனத்திறகு தனுந்த ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு , அவர்கள் வேலைக்கு போகும் பட்சத்தில் நாங்களே வெளிநாட்டு வேலைக்குரிய பயிற்சிகளை வழங்குகிறோம்.

விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்களோ அதன் அடிப்படையில் அந்நாட்டு கலாச்சாரம், மொழி, தகவல் தொடர்பு திறன் போன்றவை குறித்து நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். வெளியாட்டு வேலைக்கு விண்ணப்பதார்களை அனுப்ப எங்கள் நிறுவனத்தின் ஆரம்ப கட்டணம் India Immigration Act படி 35000 மட்டுமே வசூலிக்கிறோம். மறைவு கட்டணம் எதுவும் கிடையாது. செவிலியர் பணிக்கு சற்று கூடுதல் கட்டணம் உண்டு.

விண்ணப்பதார்கள் வேலைக்கு சென்ற பிறகு அவர்களுடைய பாதுகாப்பை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அசாதாரண சூழல் வரும் போது, எங்கள் மூலம் சென்ற பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்து கொடுப்போம்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?

  • வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புவர்கள் ஒரு வருடத்திற்கு மேல் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருத்தல் வேண்டும்.
  • 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தில் வேலைக்குரிய படிப்பு மற்றும் அனுபவம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
  • வேலைக்கான விசாவில் மட்டும்தான் வெளிநாட்டு வேலையில் சேர வேண்டும்
  • விசிட்டர் விசா, பிசினஸ் விசா போன்றவற்றின் அடிப்படையில் வெளிநாடு செல்லக்கூடாது.
  • பதிவு பெறாத முகவர்களிடம் வேலைக்காக அசல் கல்வி அனுபவ சான்றிதழ் பாஸ்போர்ட் மற்றும் பணம் ஆகியவற்றை அளித்தல் கூடாது.
  • பதிவு செய்த முகவர்களிடம் வேலை நிமித்தம் பணம் பாஸ்போர்ட் கல்வி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் கொடுத்தால் கண்டிப்பாக அதற்கான அத்தாட்சி ரசீது என்னை பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அயல்நாட்டு வேலைக்கு அனுப்பும் ஆட்களை அனுப்பும் பதிவு பெற்ற முகவர்கள் வேலை நிமித்தம் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை தீர்வு செய்யும் முறைகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டங்கள் போன்றவற்றை அறிய emigrate.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)