சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர் இறந்தது எப்படி? நடந்தது என்ன?

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?

மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 பேர் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வேலை வாங்கி தருவதாகக் ஏஜெண்ட் ஒருவர் கூறியுள்ளார். ஒரு நாளுக்கு ரூ.300 சம்பளத்துக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னை வந்த அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

இவர்களில் ஐந்து பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

பிபிசியிடம் பேசிய சென்னை மாநகர சுகாதார அலுவலர் ஜெகதீசன், “இரண்டு வாரங்களுக்கு முன், புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்தனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை காப்பாற்றியுள்ளனர். ஐந்து பேரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார்” என்றார்.

கடந்த திங்கட்கிழமை உயிரிழந்த 35 வயதான சமர் கான், மருத்துவமனைக்கு வரும் போது செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையில் வந்தார் என்று மருத்துவமனை தெரிவிக்கிறது.

“அவருக்கு செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. அவரது யுரியா, கிரியாடினின், அதிக அளவில் இருந்தது. இதன் காரணமாக uremic encephalopathy எனும் தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏழு முறை டயாலிசிஸ் செய்யப்பட்டது.

உடல்நலம் தேறியதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் அவரது நிலைமை மோசமாகியது. நுரையீரலில் நீர் கோர்த்துக் கொண்டது. இதனால் அவரது உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. பின்னர் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை இயக்குனர் தேரணிராஜன் பிபிசியிடம் தெரிவித்தார்.

'உண்ட பின் நஞ்சாக மாறிய உணவு'

இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் சிகிச்சையில் இருந்த போது ஐந்து பேரில் மூன்று பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றொருவர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு சுயநினைவு இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சசுவாசம் தேவைப்படவில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை இயக்குனர் தேரணிராஜன், “அவர்கள் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த உணவு உண்ட பின் நஞ்சாக மாறியுள்ளது. ஐந்து பேரில் ஒருவர் சுயநினைவை இழந்துவிட்டார். அருகில் இருந்த தனியார் கிளினிக்கில் சுவாசக் குழாயில் செயற்கை சுவாசத்துக்கான கருவி பொருத்தப்பட்டது. அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் இருந்தன. பரிசோதித்து பார்த்ததில் அவர்களுக்கு காலரா நோய் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

உணவு நஞ்சாக மாறியது எதனால் ஏற்பட்டது என்று தெரிந்துக் கொள்ள வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்கிறார் அவர்.

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொழிலாளர்கள்

ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவர்களை காப்பாற்றிய பிறகு, ஏழு பேர் சென்னை மாநகராட்சி தங்குமிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

“அவர்கள் வேலை தேடி இங்கு வந்துள்ளனர். வேலை கிடைக்காததால் மீண்டும் ஊருக்கு செல்ல முடிவு எடுத்து ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். ஆனால் ரயிலை தவறவிட்டதால் அங்கேயே தங்கியுள்ளனர். அப்போது அங்கு சாப்பிட்டுள்ளனர்” என்றார் சென்னை மாநகர சுகாதார அலுவலர் ஜெகதீசன்.

மற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது மேற்கு வங்கத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இறந்தவரது உடலும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஜெகதீசன் கூறினார்.

அவர்கள் சென்னை வந்து வேலை தேடிய நாட்களில், தொடர்ந்து ஐந்து, ஆறு நாட்கள் உணவு கிடைக்காமல் இருந்ததாகவும் மிகவும் சோர்வடைந்து இருந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

'தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள்'

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 34,87,974 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“பிஹார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த நிலையில், தற்போது மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் சில நேரங்களில் அசாம் மாநிலத்திலிருந்தும் தமிழ்நாட்டில் வேலை தேடி வருகின்றனர்” என்கிறார், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் குமார்.

“கட்டுமானத் தொழில், தொழிற்சாலைகள், பனியன் தொழிற்சாலை, நூற்பாலை, கோழிப்பண்ணை, உணவகங்கள், சலூன்கள் என எல்லா இடங்களிலும் அவர்கள் பணிபுரிகின்றனர். ஏஜெண்டுகள் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிடுகின்றனர், சில நேரங்களில் மிக குறைந்த ஊதியத்துக்கு வேலையில் அமர்த்திவிடுகின்றனர். தொழிலாளர் நலத்துறை இவர்கள் அனைவரையும் பதிவு செய்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)