இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக முடிந்தது
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

ஆங்காங்காகே சிற்சில தேர்தல் விதிமுறை மீறல்கள் இடம்பெற்றுள்ளன, இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. பின்னர் ஏனைய வாக்குகள் எண்ணப்படும்.
அஞ்சல் வாக்குகள் குறித்த முதலாவது முடிவு நள்ளிரவு சமயத்தில் எதிர்பார்க்கலாம் என மேலதிகத் தேர்தல் ஆணையாளர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
முந்தையச் செய்தி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

பெருமளவு அமைதியாக நடந்துவருவதாக கூறப்படும் இன்றைய வாக்குப்பதிவில் வாக்களிப்பதற்காக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஹபக்ஷ இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் தன்னுடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதவியை இழந்த ராஜபக்ஷ, தற்போதையத் தேர்தலில் தனது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக பிரதமர் பதவியைக் கைப்பற்ற முயல்கிறார்.

அதேசமயம், மகிந்த கட்சியைச் சேர்ந்தவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன, தனது கட்சி வெற்றி பெற்றால் மகிந்த பிரதமராவதை தான் தடுப்பேன் என்று எச்சரித்திருக்கிறார்.
ஒரு மாதகாலம் நீடித்த தேர்தல் பிரச்சாரத்தில் நிகழ்ந்த வன்முறைகளில் நான்குபேர் கொல்லப்பட்டனர். அதேசமயம், முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்தத்தேர்தலில் வன்முறைகள் குறைவாக இருந்ததாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகள் திங்களன்று இரவு முதலே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை செவ்வாய்க்கிழமை முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிடும்.
வடக்கில் அமைதியான வாக்குப்பதிவு
இலங்கையின் வடபகுதியில் அமைதியான முறையில் காலை முதல் வாக்களிப்பில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலைப் போலல்லாமல் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் பதட்டமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்து வருவதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வவுனியாவில் பிற்பகல் 2 மணிவரையில் 54 வீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் 45 வீதமும், கிளிநொச்சியில் 51 வீதமும் முல்லைத்தீவில் 52 வீதமும் மன்னாரில் 56 வீதமும் வாக்குகள் பதிவாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடபகுதியில் யாழ்ப்பாணத்திலேயே வாக்களிப்பு ஒப்பீட்டளவில் மந்தமாகக் காணப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வவுனியாவில் சில வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு முன்னதாக சிலர் வாக்களிப்பதற்காகச் சென்று காத்திருந்ததைக் காண முடிந்தது. சில வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசையில் வாக்களிப்பதற்காகக் காத்திருந்தனர்.

ஒரு சிலர் தமது குழந்தைகளுடன் குடும்பமாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
வயோதிபர்களும் வாக்களிப்பதில் ஆரவத்துடன் ஈடுபட்டிருந்தனர்.
மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்போது பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கு காவல்துறையினர் விசேட ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.
வடபகுதி நகரங்களின் முக்கியச் சந்திகள் அனைத்திலும் காவல்துறையினர் வீதித்தடைகளை அமைப்பதற்கான ஏற்பாட்டுடன் தயார் நிலையில் உள்ளனர். காவல்துறையினரின் வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைககளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
தேர்தல்: சில புள்ளிவிவரங்கள்
இன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நாடெங்கிலும் 12ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக இந்தத் தேர்தலில் 6 ஆயிரத்து 124 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார்கள். 29 பேர் தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகிறார்கள்.

தேர்தல் செயலகத்தின் தகவல்களின்படி 1 இலட்சத்து 95 ஆயிரம் அரச பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 75 ஆயிரம் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறைத் தலைமையகம் கூறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் , காமன்வெல்த் நாடுகள் அமைப்பு , தெற்காசியத் தேர்தல் மேற்பார்வை ஒன்றியம் உட்பட சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இந்தத் தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தவிர கஃபே, பெஃப்ரல் உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கனவே தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
































