'2012-ஆம் ஆண்டுக்கு பிறகு' - கேகேஆர் தொடர் தோல்விக்கு வித்திட்டவர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் 2026 தொடரின் ஆறாவது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
இவ்விரு அணிகளுமே தங்களின் முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், இந்தப் போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தங்கள் புள்ளிக் கணக்கைத் தொடங்கியது.
2012ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு சீசனின் முதலிரு போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைவது இதுவே முதல் முறை.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் 226 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய கேகேஆர் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பட மூலாதாரம், Getty Images
பவர்பிளேவில் அதிரடி காட்டிய அபிஷேக் & ஹெட்
வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் சன்ரைசர்ஸ் ஓப்பனர்கள் அபிஷேக் ஷர்மா & டிராவிஸ் ஹெட் ஆகியோர் நிதானமாக ஆடினார்கள். அதனால் அந்த ஓவரில் 6 ரன்கள் வந்தது.
ஆனால், முசர்பானி வீசிய இரண்டாவது ஓவரில் இருந்து தங்கள் வழக்கமான அதிரடியை அவர்கள் தொடங்கினார்கள். முசர்பானியின் அந்த ஓவரில் ஹெட் 2 பவுண்டரிகளும், அபிஷேக் 1 சிக்ஸரும் அடித்தனர். வைபவ் அரோரா வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்தார் ஹெட்.
3 ஓவர்களில் 43 ரன்கள் வந்துவிட, நான்காவது ஓவரில் நரைனைப் பந்துவீசச் செய்தார் ரஹானே.
அந்த ஓவரில் பொறுமையாக ஆடிய சன்ரைசர்ஸ் ஓப்பனர்கள் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சுழலுக்கு எதிராக அவர்கள் மெதுவாக ஆடியதால், அடுத்த ஓவரை வருணுக்குக் கொடுத்தார் நரைன். அதன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அபிஷேக், அந்த ஓவரில் மேலும் 1 சிக்ஸரும் 3 பவுண்டரிகளும் அடித்தார். அந்த ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டது.
ஆறாவது ஓவரை கார்த்திக் தியாகி வீசினார். அதில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்த ஹெட் அதே ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.
இந்த இருவரின் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவர்பிளேவில் 1 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்தது.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்
பவர்பிளே முடிந்த அடுத்த இரு ஓவர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் கேப்டன் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடி காட்டினார்கள். ஆனால், அவர்கள் இருவருமே பிளெஸிங் முசர்பானி வீசிய ஒன்பதாவது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருடைய கேட்ச்சை பவுண்டரி எல்லையில் டைவ் அடித்து சிறப்பாகப் பிடித்தார் வருண் சக்கரவர்த்தி.
அனுகூல் ராய் வீசிய பத்தாவது ஓவரில் அனிகேத் வெர்மாவும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது.
அணியை மீட்ட கிளாசன் - நித்திஷ் கூட்டணி

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நெருக்கடிக்கு உள்ளானது. அப்போது ஜோடி சேர்ந்த ஜெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் இருவரும் அணியை அதிலிருந்து மீட்டார்கள்.
அவர்கள் சற்று நிதானமாக விளையாடினாலும் சரியான இடைவெளியில் பவுண்டரிகளும் அடித்தார்கள். முடிந்த வரை அனைத்து பந்துகளிலும் சிங்கிள், டபுள் எடுத்தார்கள். அப்படி அடித்துவிட்டு இடையே ஓரிரு பவுண்டரிகள் வந்ததால், எப்படியும் ஓவருக்கு 8,9 ரன்களுக்கும் குறையாமல் வந்தது. அதனால் ரன்ரேட் வெகுவாகக் குறையவில்லை. இந்த ஜோடி 34 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.
39 ரன்கள் எடுத்திருந்த நித்திஷ் ரெட்டி வைபவ் அரோராவின் பந்துவீச்சில் 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சலில் அரோரா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் ஹர்ஷ் துபே, கிளாசன் இருவரும் அதிரடி காட்டியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.
கிளாசன் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் முசர்பானி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கேகேஆர் பவர்பிளே - 'ரன்கள் + விக்கெட்டுகள்'
பெரிய இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணியின் பவர்பிளேவில் நிறைய ரன்கள் வந்தது. அதே சமயம் அவர்கள் 3 விக்கெட்டுகளையும் இழந்தார்கள்.
டேவிட் பெய்ன் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசினார் ஃபின் ஆலன். ஆனால், ஹர்ஷ் துபே வீசிய இரண்டாவது ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆனதும் களமிறங்கிய அங்ரிஷ் ரகுவன்ஷி அந்த அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
2-4 ஓவர்களில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தினார் சன்ரைசர்ஸ் கேப்டன் இஷான் கிஷன். அது நைட் ரைடர்ஸ் கேப்டன் ரஹானேவுக்கு சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது ரன் வேகம் இந்த ஓவர்களில் குறைந்த நிலையில், அது அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தியது. அதனால், ஐந்தாவது ஓவரில் உனத்கட் பந்தை அடிக்க முயன்று அவர் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் ரகுவன்ஷியோ தொடர்ந்து அதிரடி காட்டினார். அபிஷேக் ஷர்மா ஓவரில் 2 சிக்ஸர்கள், உனத்கட் ஓவரில் 2 பவுண்டரிகள் என அவர் தொடர்ந்து விளாச, கேகேஆர் ரன்ரேட் சீராக சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக பவர்பிளேவின் கடைசிப் பந்தில் கேமரூன் கிரீன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
பவர்பிளே முடிவில் நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து சரிந்து விக்கெட்டுகள்
மும்பைக்கு எதிரான முந்தைய போட்டியில் அரைசதம் அடித்த ரகுவன்ஷி, இந்தப் போட்டியிலும் தன் ஃபார்மைத் தொடர்ந்தார். வேகப்பந்துவீச்சு, ஸ்பின் அனைத்தையும் பதம் பார்த்த அவர், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்குத் தொடர்ச்சியாக நெருக்கடி ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரகுவன்ஷி 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இந்த ஐபிஎல் 2026 தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். தற்போது அவரது வசம் தான் ஆரஞ்ச் கேப் இருக்கிறது.
ஒருமுறை ரன் அவுட்டில் இருந்து தப்பிய ரகுவன்ஷி, 52 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் மூலமே ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர் அவுட் ஆன பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. ரிங்கு சிங் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 35 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கேகேஆர்.
இதன்மூலம் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அந்த அணியின் பௌலர்களில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முந்தைய போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியிருந்த உனத்கட் தற்போது பர்ப்பிள் கேப்பை தன்வசப்படுத்தினார்.
39 ரன்கள் எடுத்ததோடு 2 விக்கெட்டுகளும் கைப்பற்றிய நித்திஷ் குமார் ரெட்டி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பட மூலாதாரம், Getty Images
முடிவுகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































