ஓட்ஸி: 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதன் கடைசியாகப் பயணித்த பாதையை, அவரை சுற்றி பனியில் உறைந்திருந்த தாவரங்களின் மூலம் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கு வழியான மலைத்தொடரில் பனி மனிதர் ஓட்ஸி ஏறியுள்ளார் என்ற முடிவுக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து 3,210 மீட்டர் உயரத்தில் பனிப்பாறைகளுக்கு நடுவில் 1991ம் ஆண்டு இந்த பனிமனிதனின் உடல் மலையேறுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதயத்தில் இருந்து தூய ரத்தத்தை உடலின் பிற பாகங்களுக்குக் கொண்டு செல்லும் முக்கியமான தமனி ஒன்றில் அம்பு தாக்கியதில், அதிக ரத்தம் வெளியேறி அவர் சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என்பது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1991ம் ஆண்டு மலையேறுபவர்கள் பனியில் உறைந்திருந்த ஓட்ஸியின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

அவரது சடலம் பனிக்குள் புதைந்து, பாதுகாப்பாக இருந்தது. உலகில் பழமையான மற்றும் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட உடல்களில் (மம்மி) ஒன்றாக ஓட்ஸியின் உடல் கருதப்படுகிறது.

1991ம் ஆண்டு வரை இந்த பனிமனிதனின் உடல் உறைந்த நிலையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் உயரமான இடத்திலேயே இருந்துள்ளது. அந்த உடலுக்கு அருகில் அதிக அளவிலான தாவரங்களும், பாசிகளும் உறைந்த நிலையில் இருந்துள்ளன.

அவரது குடல் மற்றும் ஆடைகளில் பாதுகாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பாசிகளும், ஈரப்பதமான பகுதிகளில் வாழும் சிறிய தாவரங்களையும் விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர். குறைந்து 75 உயிரினங்களை சேர்ந்த இந்த பாசிகளிலும், தாவரங்களிலும் 30 சதவீதமே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் காணப்படுகின்றன.

பிற 70 சதவீத பாசிகளும், தாவரங்களும் இன்றைய தென் டைரோலில் இனம் காணப்படலாம்.

பட மூலாதாரம், SOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY/EURAC/SAMADELL

படக்குறிப்பு, பனி மனிதனை ஆய்வு செய்ததில் ஆட்டுக் கொழுப்பு, மான் கறி, பழங்கால கோதுமை மற்றும் புதர்களில் விளையும் சில தாவரங்களை அவர் கடைசியாக உண்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பற்றி கருத்து தெரிவித்த கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பல்லுயிரின பெருக்க மையத்தைச் சேர்ந்த ஜிம் டிக்சன் "இந்தப் பாசிகளையும், சிறிய மற்றும் விதையில்லா பசுமை தாவரங்களையும் பற்றி பெரும்பாலான பொதுமக்களுக்கு தெரியவில்லை," என்று தெரிவித்தார்.

"இருப்பினும், பனி மனிதர் என அழைக்கப்படும் ஓட்ஸி பனியில் இருந்து அகற்றப்பட்டபோது கிடைத்த 75 சதவீதத்திற்கு குறையாத உயிரினங்களால் ஆய்வுக்கான முக்கிய துப்புகள் கிடைத்தன" என்று அவர் கூறுகிறார்.

"பனி மனிதன் ஓட்ஸியை சுற்றியிருந்த பனிக்கட்டியிலும், அவரது ஆடையிலும், அவர் வைத்திருந்த கோலிலும் இருந்து பெரும்பாலும் சிறிய துண்டுகளாக இவை மீட்கப்பட்டுள்ளன" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், SOUTH TYROL MUSEUM OF ARCHAEOLO

படக்குறிப்பு, டச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள்

பனி மனிதன் கடைசியாக பயணம் மேற்கொண்ட பாதையை தெளிவாக கண்டறிய கிடைத்திருக்கிற சில பாசிகள் மிகவும் முக்கியமானவை என்று அவர் கூறியுள்ளார்.

இனம் காணப்பட்டுள்ள பல பாசி வகைகள் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கில் இன்று செழித்து வளருகின்றன.

ஃபிலட் நெக்கெரா என்று அழைக்கப்படும் காட்டில் வளரும் முக்கியமான விதையில்லாத தாவரம், பனி மனிதரின் ஆடையில் அதிக அளவிலும், அவரது குடலில் நுண்ணிய துகள்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

செப்புக் காலத்தைச் சேர்ந்த பனி மனிதன் அருகிலுள்ள மற்ற பள்ளத்தாக்குகளில் ஏறி சென்றிருக்கலாம் என்பதை விட, தெற்கிலிருந்து வடக்காக ஷ்னால்ஸ்டாலுக்கு ஏறி சென்றிருக்கலாம் என்பதை காட்டுவதற்கு இந்த கண்டுபிடிப்பும், கீழுள்ளது முதல் மிதமான உயரத்தில் காணப்படும் ஒரே மாதிரியான பாசிகளும் சான்றுகளாக உள்ளன.

இன்று பிரபலமான பனி சறுக்கு விளையாட்டு தலமாக விளங்குகின்ற அந்த பள்ளத்தாக்கை, இந்த பனிமனிதன் சென்றிருக்கும் பாதையாக உறுதிப்படுத்தியுள்ள முந்தைய மகரந்தங்கள் கிடைக்கும் இடங்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவை இந்த கண்டுபிடிப்பின் முடிவு வலுப்படுத்துகிறது.

பட மூலாதாரம், SOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY

சுமார் 157 சென்டிமீட்டர் உயரம் இருந்ததாக கருதப்படும் பனிமனிதன் ஓட்ஸி, 50 கிலோஎடை உடையுடையவராக இருந்திருப்பார் என்று நம்பப்படுகிறது.

கறுத்த, நீண்ட முடியையும், பழுப்பு நிறக் கண்களை கொண்டிருந்த அவர் தாடி வைத்திருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பனிமனிதன் ஓட்ஸி இறந்தபோது அவருக்கு வயது 45 ஆக இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :