இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை

பட மூலாதாரம், Facebook
- எழுதியவர், எம்மா பெங்கெல்லி ,ஷயான் சர்தாரிசாதே மற்றும் ஜேக் ஹார்டன்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.
அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. அந்த புகைப்படங்களில் ஈ-3 (E-3) சென்ட்ரி (E-3 Sentry) விமானம் இரண்டாகப் பிளந்து காணப்படுகிறது.
சௌதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். புகைப்படங்களில் காணப்படும் மின்கம்பங்கள், சேமிப்பு அலகுகள் மற்றும் நடைபாதை அடையாளங்கள் ஆகியவை செயற்கைக்கோள் படங்களுடன் ஒத்துப்போகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை மையம் இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிபிசி விளக்கம் கேட்டுள்ளது.
விமானப்படை தளத்தின் மீது இரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
குறைந்தது இரண்டு அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்ததாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, இரானின் ஐ.ஆர்.ஜி.சி அமைப்புடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஒரு ஷாஹெட் டிரோன் மூலமாக ஈ-3 விமானம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
மார்ச் 11 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்திலும் இதே இடத்தில் ஒரு ஈ-3 உளவு விமானம் இருப்பதை பிபிசி வெரிஃபை பார்த்துள்ளது. ஆனால் இவை இரண்டும் ஒரே விமானம் தானா என்று எங்களால் கூற முடியாது.
சரிபார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில் அந்த விமானத்தின் வால் பகுதி எண் தெரிகிறது. இதை வைத்து பிளைட்ரேடார்24 என்ற விமானப் பயணக் கண்காணிப்புத் தளத்தில் சோதித்தபோது, அந்த விமானம் மார்ச் 18 அன்று தளத்திற்கு அருகில் பறந்துகொண்டிருந்தது தெரியவந்தது.
வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் படம், ஈ-3 விமானம் இருக்கும் இடத்திற்கு கிழக்கே சுமார் 1,600 மீட்டர் (5,200 அடி) தொலைவில் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் தீப்பிடித்திருப்பதைக் காட்டுகிறது.
இந்த புகைப்படங்களில் காணப்படும் விமானம் சேதமடைந்த அதே தாக்குதலின் ஒரு பகுதியா இது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
போயிங் ஈ-3 அவாக்ஸ் என்பதன் விரிவாக்கம் 'வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு' (AWACS - Airborne Warning and Control System) என்பதாகும்.
இது போயிங் 707 ரக விமானத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் உடற்பகுதியின் பின்புறத்தில் ஒரு தனித்துவமான சுழலும் ரேடார் தட்டைக் கொண்டுள்ளது.
இந்த ரேடார், இலக்குகளை நீண்ட தூரத்திலேயே கண்டறியவும் கண்காணிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் போர் நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்க முடிகிறது.
அமெரிக்க விமானப்படை வலைத்தளத்தின் படி, அந்த விமானம் "வான்வழிப் போரின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் வான்வழி நடவடிக்கைகளின் தளபதிகளுக்குத் தகவல்களை வழங்குகிறது".
இந்த வகை விமானங்களில் முதலாவது 1977 ஆம் ஆண்டு சேவையில் இணைந்தது.
ஈ-3 ரக விமானங்கள் 2035 ஆம் ஆண்டு வரை அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































