தெலங்கானா: காதல் மனைவியின் கண் முன்னே தலித் கணவர் வெட்டிக் கொலை

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தெலங்கானா மாநிலத்தில் தலித் வகுப்பை சேர்ந்த பெருமாள பிரனாய், சாதியை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவி அம்ருதாவின் கண்முன்னே வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், AMRUTHA.PRANAY.3 / FACEBOOK

தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த பெருமாள பிரனாய், கர்ப்பிணியான தனது மனைவி அம்ருதாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்று திரும்பிய நேரத்தில் வெள்ளிக்கிழமை மதியம் கழுத்தில் வெட்டப்பட்டார். சம்பவ இடத்திலே அவரது உயிர் பிரிந்துள்ளது.

மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்தான் 24 வயதான பெருமாள பிரனாய்.

10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

பட மூலாதாரம், AMRUTHA.PRANAY.3 / FACEBOOK

ஆனால், பெருமாள பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்ப்பை மீறி ஹைதராபாத் சென்ற பெருமாள பிரனாயும், அம்ருதாவும், அங்குள்ள ஆரிய சமாஜில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் செய்துள்ளனர்.

இதனால் கோபம் கொண்ட மாருதி ராவ், பெருமாள பிரனாயை மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு பிரனாயும், அவரது தாயும் அழைத்து சென்றுள்ளனர்.

பட மூலாதாரம், AMRUTHA PRANAY / FB

பரிசோதனை முடிந்து வெளியே வந்தபோது, மருத்துவமனையின் வாயிலுக்கருகில் பிரனாய் ராவை கழுத்தில் இருமுறை வெட்டி கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்கியவர் அந்த ஆயுதத்தை அங்கேயே விட்டு சென்றுள்ளார்.

இதற்கு முன்னரும் சில நேரங்களில் பிரனாயை தாக்க முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

நல்கொண்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரெங்கநாத் தெரிவிக்கையில், "இதுவொரு ஆணவக்கொலை. குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, பிரனாய் மற்றும் அம்ருதாவை ஆயுதத்தோடு பின்தொடரும் தாக்குதலாளி.

அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷிவானும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை நடத்தியிருக்கலாம் என்று காவல் துறை சந்தேகப்படுகிறது.

"மாருதி ராவ் கோடீஸ்வரர். அவர் தொந்தரவு அளிக்கலாம். எனவே, இருவக்கும் திருமணமானவுடன், வேறிடத்திற்கு சென்றுவிட மகனையும், மருமகளையும் வற்புறுத்தினேன். தனது தந்தையின் கோபத்தை தானே தணித்து விடுவேன் என்றும் அம்ருதா கூறிவிட்டார்" என்று பிரனாயின் தந்தை பாலசாமி பிபிசியிடம் தெரிவித்தார்,

"திருமணத்திற்கு பிறகு அவர்கள் எனது மகனை கொல்ல திட்டமிட்டிருந்தனர். பிரானயும் எச்சரிக்கையுடன்தான் இருந்தார். ஆனாலும், இந்த கொடிய சம்பவம் நடத்துவிட்டது" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், AMRUTHA.PRANAY.3 / FACEBOOK

படக்குறிப்பு, அம்ருதா மற்றும் அவரது தந்தை மாருதி ராவ்

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறை ஐ.ஜியிடம் இந்த ஜோடி முன்னதாக கேட்டுள்ளது.

இந்த விடயத்தில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவை அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுரைக்கு கீழ்படிவதாக மாருதி ராவ் வாக்குறுதியும் அளித்துள்ளார்.

பின்னர், அம்ருதாவின் பெற்றோர் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். இவ்வாறு தாங்களின் கோபம் சற்று தணிவடைந்து விட்டதுபோல் காட்டி இந்த கொலையை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

பட மூலாதாரம், NALGONDA POLICE / FB

படக்குறிப்பு, மாருதி ராவின் தம்பி ஷிவான்

இது தொடர்பான வழக்கில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் முதல் குற்றவாளியாகவும், அவரது தம்பி ஷிவான் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மாருதி ராவ், ஷிவான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலித் அமைப்புகள் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :