இந்தோனீசிய காட்டுத் தீ: பரவும் புகைமூட்டம், மூச்சுத் திணறும் மக்கள் - அமேசான் காடும், மலேசியா நாடும்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
    • பதவி, கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆண்டுதோறும் வரக்கூடிய பண்டிகைகளைப் போன்று வருடம் தவறாமல் மலேசியாவும் காட்டுத்தீயால் ஏற்படும் புகைமூட்டத்தால் பாதிக்கப்படுகிறது.

அண்டை நாடான இந்தோனீசியாவில் உருவாகும் இந்தப் புகைமூட்டமானது 'அழையா விருந்தாளி'யாக மலேசியாவுக்குள் நுழைகிறது.

இந்த ஆண்டும் மலேசியாவின் பல்வேறு பகுதிகள் இந்த புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் புகையால் ஏற்பட்டுள்ள காற்றுத் தூய்மைக்கேடு, பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிகக் கடுமையாக உள்ளது.

மலேசியாவின் ஐந்து மாநிலங்களில் பாதிப்பு

போதிய மழைப்பொழிவு இல்லாதது, வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காட்டுத் தீ மூள்கிறது. மேலும் காட்டுப்பகுதியை விளைநிலங்களாக மாற்றும் பொருட்டு சிலர் அப்பகுதிகளுக்கு தீ வைக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்தோனீசியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஏற்படக் கூடிய புகை மூட்டம், காற்றின் வேகத்தில் அண்டை நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனீசிய காட்டுத்தீயால் மலேசியா, சிங்கப்பூர், புரூனே உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவைப் பொறுத்தவரை சிலாங்கூர், சரவாக், பகாங், ஜொகூர் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரைச் (கூட்டரசுப் பிரதேசம்) சேர்ந்த, 21 பகுதிகள் காற்றுத் தூய்மைக் கேடால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images

பாதிப்பைக் கணக்கிட உதவும் காற்று மாசுபாடு குறியீடு

புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பின் அளவை, காற்று மாசுபாடு குறியீட்டைக் (Air Pollution Index -API) கொண்டு கணக்கிடுகிறார்கள்.

பொதுவாகக் காற்று மாசுபாடு குறியீடானது (API), ஒன்று முதல் ஐம்பது புள்ளிகள் வரை இருப்பின் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது எனக் கருதப்படுகிறது. ஐம்பது முதல் நூறு புள்ளிகள் வரை இருப்பின் அது மிதமான பாதிப்பாகவும், 150 முதல் 200 புள்ளிகள் வரை இருப்பின் அது உடல்நலத்தைப் பாதிக்கும் என்றும், 200 புள்ளிகளைக் கடந்துவிட்டால் அது மிக ஆபத்தானது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

300 புள்ளிகள் என்பது உயிருக்கே உலை வைத்துவிடக் கூடிய அளவு.

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக நுரையீரல் மற்றும் இதயப் பிரச்சினை உள்ளவர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்குமான காற்று மாசுபாடு குறியீட்ட அளவுகளை மலேசிய அரசு தினமும் இணையதளம் வழி அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

நடப்பு நெருக்கடிக்கான பிறப்பிடம் எது?

இந்த ஆண்டு இந்தோனிசியாவின் சுமத்ரா மற்றும் காலிமந்தான் ஆகிய இரு பகுதிகளில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ மூண்டுள்ளது. மேலும் சில இடங்களில் தீ மூள்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீயை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அது தொடர்ந்து பரவி வருவதால் அந்நாட்டிற்கு மட்டுமல்லாமல், மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அண்மைய சில தினங்களாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், அதற்கு அடுத்துள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளைப் புகை மூட்டம் சூழ்ந்திருக்கிறது.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் உள்ளிட்ட மலேசியாவின் முக்கியமான கட்டடங்கள் புகை மூட்டத்துக்கு நடுவே மாயாஜாலக் காட்சி போல் மங்கலாகக் காட்சி தருகின்றன. வாகனமோட்டிகள் கண் எரிச்சல், வாந்தி போன்ற உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம், சாலைகளில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது சிலாங்கூர் மாநில அரசு.

எனினும் பணி நிமித்தமாகவும், இதர தேவைகளுக்காகவும் வெளியே செல்ல வேண்டியிருப்பதால் மக்களால் வீடுகளுக்குள் முடங்க இயலவில்லை என்பதே கள நிலவரம்.

இரு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன

இந்நிலையில், சரவாக் மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள எட்டு மாவட்டங்களில் காற்று தூய்மைக்கேடு அபாய அளவை எட்டியுள்ளது. இதே போல் ஜொகூர் மாநிலத்திலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் மாலை 6மணிக்குக் காற்றுத் தூய்மைக் கேடுக் குறியீடு ஆராயப்பட்டு, அதன் அடிப்படையில் மறுநாள் பள்ளிகளைத் திறப்பதா, மூடுவதா என்று முடிவெடுக்கப்படும் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு சரவாக் மாநிலத்திற்கு 50 லட்சம் முகமூடி (Face Mask) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளிலும் கூட மாணவர்கள் அதை அணிந்தபடியே தான் பாடத்தைக் கவனிக்கின்றனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

சுட்டிக்காட்டிய மலேசியா: ஏற்க மறுத்த இந்தோனீசியா

இந்தோனீசியா அரசு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தவறியதால் தான், நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்நாட்டு அரசு இக்கூற்றை ஏற்க மறுத்துள்ளது.

செயற்கைக்கோள் படங்கள், தரவுகள் மூலம் இந்தோனீசியாவில் தான் காட்டுத்தீ அதிகளவில் மூண்டுள்ளதாகத் தெரிய வந்த போதிலும், அந்நாட்டு அரசு இது தவறான தகவல் என தொடர்ந்து மறுத்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக இந்தோனீசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையை அரசுத்தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

சுமத்ரா பகுதியில் மூண்ட காட்டுத்தீயானது எல்லை கடந்து தீபகற்ப மலேசியாவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்ற கூற்றுத் தவறானது என அம்மையத்தின் துணைத் தலைவர் முலியோனா ஆர். பிரபாவோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"கடந்த 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, தென் கிழக்கு ஆசியாவில் காட்டுத்தீ மூண்ட அல்லது மூள்வதற்கு வாய்ப்புள்ள 2510 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்தோனீசியா, மலேசியா, ஃபிலிப்பின்ஸ், பப்புவா நியூ கினியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ளன. எனவே மலேசியாவில் காணப்படும் புகை மண்டலமானது தாய்லாந்தின் சுமத்ரா பகுதியிலிருந்து எல்லை கடந்து அங்குப் பரவவில்லை," என முலியோனா ஆர். பிரபாவோ கூறியுள்ளார்.

புகைமூட்டம் நீடிக்கும் எனக் கணிப்பு

இந்நிலையில் புகைமூட்டம் அடுத்து வரும் நாட்களிலும் நீடிக்கும் என ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தோனீசியாவின் மேலும் சில பகுதிகளில் காட்டுத்தீ மூள்வதற்கு வாய்ப்புள்ளதாக அம்மையம் சுட்டிக்காட்டி உள்ளது.

நடப்பு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியன்று அந்நாட்டில் காட்டுத்தீ மூள்வதற்கு வாய்ப்புள்ள 52 பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையானது தற்போது 206 பகுதிகளாக அதிகரித்துள்ளது என ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மலேசிய மக்கள் மத்தியில் கவலையும், 'இன்னும் தீர்வு கிடைக்கவில்லையா?' எனும் சலிப்பும் நிலவுகிறது.

மழை பெய்ய வேண்டியும் பிரார்த்தனை

இந்நிலையில், செயற்கை மழைப்பொழிவின் மூலம் புகையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே செயற்கை மழை பொழிவிற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் போது மலேசிய அரசு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

அண்மைய ஆய்வின்படி, செப்டம்பர் 12ஆம் தேதி சரவாக்கில் செயற்கை மழைக்கு ஏற்ற சூழ்நிலை அமையும் எனத் தெரிய வந்துள்ளது.

மலேசிய அரசு ஒரு பக்கம் செயற்கை மழை பொழிவுக்குத் திட்டமிட்டு வரும் நிலையில், மறுபக்கம் இயற்கையாக மழை பெய்ய வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மலேசியாவின் இஸ்லாமிய வளர்ச்சித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையகம் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இஸ்லாமிய வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே செப்டம்பர் மாத இறுதியில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாக மலேசியா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இயோ பி இன் கூறியுள்ளார்.

அதற்கும் முன்னதாக காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்தோனீசிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு அரசுக்கு அனைத்து வகையிலும் உதவத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :