இரான்-இராக் நிலநடுக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம்

பட மூலாதாரம், Getty Images

இரான்-இராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

நிலநடுக்கத்தை மதிப்பிடும் கருவியில் இது 7.3-ஆகப் பதிவாகி உள்ளது.

வீடிழந்த மக்கள் கடும் குளிரில் வெட்டவெளியில் இரவைக் கழிக்கவேண்டியிருந்தது.

இரானை சேர்ந்த உதவி நிறுவனம் ஒன்று, 70,000 மக்களுக்கு தங்குமிடம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், ALIREZA

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்டடங்களில் ஒன்று.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரான் மேற்கு மாகாணமான கெர்மான்ஷா பகுதியை சேர்ந்தவர்கள்.

அந்தப் பகுதியில் மட்டும் 6,603 பேர் காயமடைந்துள்ளார்கள்.

இராக் தலைநகரம் பாக்தாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஈராக்கில் இறந்தவர்கள் ஏழு பேர்.

இந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் தொடர்ந்து தொழுகைகளை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பி வருகின்றன.

பட மூலாதாரம், KHOSROW

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாக்தாத்தில் வசிக்கும், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான மஜிதா அமீர், "நான் என் குழந்தைகளுடன் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அந்தச் சமயத்தில், எங்களுடைய கட்டடம் ஆடத் தொடங்கியது" என்கிறார்.

பட மூலாதாரம், Reuters/Tasnim News Agency

மேலும், "நான் முதலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு காரணமாக கட்டடம் ஆடுகிறது என்று நினைத்தேன். ஆனால், சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் 'நிலநடுக்கம்' என்று கத்துவதை கேட்டேன்." என்று அப்போது நடந்த காட்சிகளை விளக்குகிறார் அவர்.

அவசரகால அதிகாரி ஒருவர், ஈரானில் மட்டும் 3,950 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்ததாக இர்னா செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் எல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் சர்பொல்-ஏ-ஜகாப் நகரத்தில்தான் பலர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, இரான் அவசரகால சேவையகத்தின் அதிகாரி பிர் ஹுசைன் கோலிவண்ட் கூறியதாக இரானிய அரசு தொலைக்காட்சி நிறுவனமான இரின்னில் செய்தி வெளியிட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்திற்கு மத்தியிலும் செய்தி வழங்கிய குர்திஷ் தொலைக்காட்சி.

நகரத்தின் முக்கிய மருத்துவமனை, இந்த நிலநடுக்கத்தால் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனால், காயமடைந்த பல நூறு பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனை சிரமப்படுவதாக, ஈரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

ஒரு நிமிடத்திற்கு மேலாக:

இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்ததாக, இர்பில்லில் வசிக்கும் பிபிசியின் செய்தியாளர் ரமி ருஹாயெம் கூறுகிறார்.

"முதல் சில நொடிகளுக்கு எங்களால் இது என்ன என்று உணரமுடியவில்லை. இது மிதமான நிலநடுக்கம்தானா அல்லது கனவா...? என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், சிறிது நேரத்தில் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக ஆடத் தொடங்கியது." என்கிறார்.

துருக்கி, இஸ்ரேல், குவைத் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :