கென்யா: ஆறுகளின் மரணத்திற்குக் காரணமாகும் மணல் தேவை

மணல் இல்லாமல் காங்கிரீட் இல்லை. கட்டுமானத் துறையின் பெரும்பசிக்கு தீனிபோடுவதற்காக ஆஃப்ரிக்காவில் உள்ள நதிப்படுகைகள் தோண்டப்படுகின்றன. நதிகளும், ஆரோக்கியமாக இருந்தால் தான் அதை சார்ந்திருப்பவர்களும் வாழமுடியும். இதுபற்றி கென்யாவைச் சேர்ந்த ஹரியெட் கான்ஸ்டபிள் அலசுகிறார்.

மணல்… இந்த வார்த்தை விடுமுறை கால நினைவுகளுடன் தொடர்புடையது. மணலில் வீடு கட்டுவதும், அதில் பதற்றமான நண்டுகள் ஊறிச் செல்வதும், நண்டு உருவாக்கும் பெரிய வளைகள், வளையில் மறைந்திருக்கும் நண்டு என பால்ய காலம் பற்றிய நீங்கா நினைவலைகளை மணல் பற்றிய எண்ணம் எழுப்புகிறது.

கடலுக்கு அழகூட்டும் கடற்கரைப் பகுதிகளை மின்னச் செய்கிறது மணல். லட்சக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வண்ணமயமான, எண்ணிலடங்கா துகள்களை ஜொலிக்கும் மணலாக உருவாக்குகிறது இயற்கை. எண்ணிக்கைக்குள் அடக்கமுடியாத மணலின் தேவையும் கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

படக்குறிப்பு, மணல் அள்ளப்படுவதால் உருக்குலைந்து காணப்படும் கென்யாவின் டிவி கடற்கரை. இது கடல் ஆமைகள் இளைப்பாறும் இடம்

சிந்தித்துப் பார்த்தால் தெளிவாக புரியும். கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கிய பொருட்களான காங்க்ரீட், செங்கல், கண்ணாடி அனைத்திற்கும் மணல் தேவைப்படுகிறது. அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கமும், கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேவையும் உலகின் மிக முக்கிய இயற்கை பொருட்களின் தேவைப் பட்டியலில் நீருக்கு அடுத்த இடத்தை மணல் இடம்பெற்றுவிட்டது. பில்லியன் கணக்கான டன்கள் அளவிலான மணல் உல்கம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

முரண்பாடு: அரேபியர்களுக்கு விற்கப்படும் ஒரு விலையுயர்ந்த பண்டமாக மணல் மாறிவிட்டது

'2012ம் ஆண்டில் மட்டும் பயன்படுத்தப்பட்ட மணலைக் கொண்டு பூமத்திய ரேகையை சுற்றி 27 மீட்டர் உயரம், 27 மீட்டர் அகலத்தில் ஒரு கான்கிரீட் சுவரை எழுப்ப முடியும்' என்று ஐ.நா அறிக்கை ஒன்றில் கணிப்பு வெளியிட்டுள்ளது.

மணலால் சூழப்பட்டுள்ள கடற்கரையைத் தேடி நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மணல் நம் நகரங்களில் வானளாவ உயர்ந்திருக்கும் கட்டிடங்களாக மாறுவேடம் பூண்டுவிட்டது.

படக்குறிப்பு, டிவியில் மணல் அள்ளும் படகு

டிவியில் படகுகள் மூலம் கடலில் இருந்து பெருமளவிலான மணல் தோண்டியெடுக்கப்படுவதால், பவளம், மீன்வளம், கடல்புல்லை வளரச் செய்யும் மண் ஆகியவை உருவாவது தடுக்கப்படுகிறது. இந்தக் கடல் புல்தான் கடல் ஆமைகளின் உணவாகிறது.

ஆற்றுப்படுகைகள் மற்றும் கடலில் இருந்தே கட்டுமானத்திற்குத் தேவையான மணல் எடுக்கப்படுகிறது. பாலைவன மணல் மென்மையாக இருப்பதால் கட்டுமானத்திற்கு தேவையான கலவையை உருவாக்குவதற்கு பயன்படுவதில்லை.

பிரம்மாண்டமான கட்டுமானத் திட்டங்களால் துபாயின் கடல் மணல் வெகு விரைவாக கபாளீகரம் செய்யப்பட்டுவிட்டது. எனவே தற்போது அங்கு கட்டுமானத்திற்கு தேவைப்படும் மணல் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

பார்ப்பதற்கு சாதாரணமானதாக தெரிந்தாலும், மணலுக்கு இருக்கும் மகத்தான தட்டுப்பாட்டினால், வாழ்வாதரம், இயற்கை சூழலமைப்பு பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்தியாவில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டு கள்ளச்சந்தையில் மணல் மாஃபியாக்களால் விற்கப்படுகிறது. சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான போயாங் ஏரியில் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டு வறண்டு போய்விட்டது. இதனால் இந்த ஏரியின் மீன்வளத்தை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட்தோடு, மில்லியன் கணக்கான புலம்பெயரும் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கென்யாவில், மக்குணி போன்ற ஏழை கிராமங்களின் ஆற்றுப்படுகைகளில் மணல் சுரண்டப்படுவதால் சில இடங்களில் தண்ணீரே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

படக்குறிப்பு, மணலின் வழியாக பூமிக்கடியில் சேரும் மழை நீர், வறட்சியான காலத்தில் சிறிய கிணறுகளை தோண்டி வெளியே எடுத்து பயன்படுத்தப்படும்

அடுத்த 40 ஆண்டுகளில் கென்யாவின் மக்கள்தொகை இரட்டிப்பாகலாம் என்று நம்பப்படும் சூழலில், கென்யாவின் நியூ ஸ்டேண்டர்ட் கேஜ் ரயில்வே (new Standard Gauge Railway) போன்ற பெரிய அளவிலான திட்டங்களும் அவசியமானதே. ஆனால் அதற்கு தேவைப்படும் மில்லியன்கணக்கான டன்கள் அளவிலான மணல் எங்கிருந்து கிடைக்கும்?

அண்மை ஆண்டுகளில் கென்யாவின் கடற்கரை மற்றும் உள்ளூர் நதிகள் அனைத்தும் தேவைக்கு அதிகமாக சுரண்டப்பட்டுவிட்டன. இதனால், மக்குணி மிகவும் தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

படக்குறிப்பு, மொம்பசாவிலிருந்து நைரோபி வரை 609 கிமீ தொலைவுக்கான கென்யாவின் நியூ ஸ்டேண்டர்ட் கேஜ் ரயில்வே கட்டுமானத்திற்கு மில்லியன் கணக்கான டன் மணல் தேவை

மக்குணியில் ஆண்டு முழுவதுமே 35C (95F) க்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. பருவகாலத்தில் ஆறுகள் வறண்டுபோய் மணல்பாங்காய் காட்சியளிக்கும். மழைக்காலத்தில் பொழியும் மழை நீர் மணல் துகள்களின் வழியாக நிலத்திற்கு கீழே சென்று சேரும். வறட்சி காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மணலில் கிணறுகளை தோண்டப்படுகிறது.

இருந்தபோதிலும், தற்போது நிலைமை மாறிவிட்டது. அளவுக்கு அதிகமான மணல் தோண்டப்பட்டு, பாறைப்படுகைகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மழை நீர் தேக்கப்படும் வாய்ப்பு அரிதாகிவிட்டது.

படக்குறிப்பு, "மரணித்த" நதி கிலோமி இகொல்யாவின் எச்சத்தை செங்குத்தான பாறைகளில் நின்று பார்க்கும் ஆண்டனி முவா கிமீயு

நாடு முழுவதிலும் உள்ள மணம் எடுக்கும் பல்வேறு இடங்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் நான் பயணம் மேற்கொண்டேன். 'இந்த நதியை இறந்துபோன ஆறு என்று சொல்கிறோம்' என்கிறார் உள்ளூர்வாசியான ஆண்டனி.

மக்குனியில் சிவப்பு கலந்த பழுப்பு நிற செங்குத்தான பாறையின் உச்சியில் நின்றுகொண்டு தரிசாய்போன 'கிலோமே இகொல்யா' நதிப்படுகையை ஏக்கத்துடன் பார்க்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சமதளத்தில் சென்று கொண்டிருந்த இந்த நதி தற்போது கரையின் மேல் பகுதியில் இருந்து படுகை வரை 10 மீட்டர் கீழே போய்விட்டது. நதி இருந்த இடம் வறண்டுபோய் பாறைகளும், அதிலிருந்து மரத்தின் வேர்களும் வெளியே தெரிவது பார்ப்பதற்கே அலங்கோலமாக இருக்கிறது.

வளைந்து நெளிந்து நளினமாக சென்ற நதி, வறண்டு, நிலத்தின் அடியில் பாறைப்படுகைகளில் குச்சிகள் தெரிவதும், அங்கு சூரிய ஒளி பிரகாசிப்பதையும் பார்க்கமுடிகிறது. "இங்கிருந்து இனிமேல் யாருமே நீர் எடுக்கமுடியாது" என்கிறார் ஆண்டனி.

படக்குறிப்பு, இங்கிருந்து இனிமேல் யாருமே நீர் எடுக்கமுடியாது என்கிறார் விவசாயி ஆண்டனி

மணல் என்பது சிலருக்கு வாழ்க்கை, பலருக்கு பணம். வேலைவாய்ப்புகள் அரிதாக இருக்கும் வறுமையான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாக மணல் மாறிவிட்டது.

மக்குணியில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்படுவதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்ட உள்ளூர் காவல்துறை அதிகாரி ஜியோஃபெரி கஸ்யோகி அங்குள்ளவர்களிடம் பிரபலமானவர். 2011 பிப்ரவரியில் பட்டப்பகல் நேரத்தில் கஸ்யோகி மீது விஷம் தோய்ந்த அம்புகளை எய்தும், அவர் தலையை சிதைத்தும் அவரை இளைஞர் கூட்டம் ஒன்று கொன்றுவிட்டது.

படக்குறிப்பு, மணல் மாஃபியாவால் கொல்லப்பட்ட கணவர் ஜியோஃபரேயின் புகைப்படத்துடன் மனைவி இர்னே நடுகு கஸ்யோகி

"எங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்காதீர்கள்" என்ற மிரட்டலை விடுத்திருக்கிறார்கள் மணல் மாஃபியாக்கள் என்று தமது கணவரின் கல்லறை அருகே நின்றுகொண்டு சொல்கிறார் ஜியோஃபரேயின் மனைவி இர்னே நடுகு கஸ்யோகி.

அங்கிருந்து ஆண்டனியும் நானும் நடந்துவந்தபோது, பகல் நேரத்திலேயே பட்டவர்த்தனமாக மணல் அள்ளி குவிக்கப்பட்டு, கொண்டு செல்வதற்கான டிரக்குக்காக காத்துக்கொண்டிருந்ததை பார்த்தோம்.

படக்குறிப்பு, நிதாங்கே நதியில் இருந்து அன்றாடம் மணல் அள்ளப்படுகிறது

வறண்ட நதியையும், குவிக்கப்படும் மணலையும் பார்க்கும்போது, சிறுவயது நினைவுகளில் மட்டுமே இனிமேல் மணலை பார்க்க முடியுமோ என்று அச்சம் எழுகிறது. இருந்த தடமே மறைந்து போகும் அளவு சுரண்டப்படும் மணல் இல்லாமல், இங்கு வசிப்பவர்கள் சந்தித்துவரும், சந்திக்கப்போகும் பிரச்சனைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

அங்கு வசிப்பவர்கள் சாப்பிடுவதா, பட்டினி கிடப்பதா என்பதை இந்தப் பிரச்சினை தீர்மானிக்கும். குடிநீர் கிடைக்குமா கிடைக்காதா? தங்கள் அன்புக்கு உரியவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்க முடியுமா முடியாதா என்ற கேள்விகளும் இந்த 'இறக்கும் ஆறுகள்' ஏற்படுத்தும் மீளாத்துயர்.

மணல் இல்லாமல் போனால் மரிப்பது நதிகள் மட்டுமல்ல, மனிதர்களும், உயிரினங்களும்தான். அவர்களோடு மணலை கொள்ளையடிக்கும் மனிதர்களும் மறைந்து போவார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :