சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு: பென்னிக்சின் சகோதரி கூறியது என்ன? இன்னும் எஞ்சி நிற்கும் கேள்விகள்

படக்குறிப்பு, ஜெயராஜ் - பென்னிக்ஸ்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு கடந்துவந்த பாதை மிகச் சவாலானதாகவே இருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்டவர்கள், வழக்கிற்காகப் போராடியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

9 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஜூன் 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமிதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பால்துரை 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மீதமிருந்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது.

மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் மார்ச் 23-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி மாலையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனையும் கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டிருக்கின்றன.

பென்னிக்சின் மூத்த சகோதரி கூறியது என்ன?

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, பென்னிக்சின் தாய் மற்றும் சகோதரி

இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதும் வழக்கு மெதுவாகவே நகர்ந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதிகளும் மாற்றப்பட்டுவந்தனர். இவையெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தின. இவையெல்லாவற்றையும் தாண்டி தற்போது இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிமன்றம் தீர்ப்பை அளித்திருக்கிறது.

கொல்லப்பட்ட ஜெயராஜின் மகளும் பென்னிக்சின் மூத்த சகோதரியுமான பெர்சிஸ், தங்களுக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் நீதிமன்றத்தை மட்டுமே நம்பியிருந்தாம். அவர்கள் நீதி வழங்கியிருக்கிறார்கள். நடுவில் இந்த வழக்கில் நீதிபதி யாரும் நியமிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டபோது, மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. ஆனால், சி.பி.ஐயின் வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர், எங்கள் வழக்கறிஞர்கள் என எல்லோருமே மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இப்படி எல்லோருமே மிக ஆதரவாக இருந்ததால் கடுமையான அந்தச் சூழலைக் கடந்துவந்தோம். இவர்கள் எங்கள் குடும்பத்தையே அழித்துவிட்டார்கள். இதுபோல இனிமேல் யாருக்கும் நடக்கக்கூடாது," என்கிறார் பெர்சிஸ்.

'இதுதான் நீதி'

படக்குறிப்பு, ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணித்துவந்த மதுரையிலிருந்து செயல்படும் மனித உரிமை ஆர்வலரான மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது தனக்கு ஏற்புடையதல்ல என்றாலும் இந்த வழக்கின் தீர்ப்பு மிக மிக முக்கியமானது என்கிறார்.

"தூக்குத் தண்டனைகளின் காரணமாக குற்றங்கள் குறையும், குற்றவாளிகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், காவல்நிலைய சித்ரவதையை கணக்கில் கொண்டு, ஒரு விரிவான தீர்ப்பை விசாரணை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது என்பதுதான் இந்த வழக்கின் முக்கியமான அம்சம். சாதாரண மனிதர்கள் குற்றம் இழைத்தால் சாதாரண தண்டனையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றம் செய்தால் கூடுதல் தண்டனையும் விதிக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது."

"இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவர்கள் செய்த குற்றத்தின் அளவைக் கணக்கில்கொள்ளாமல் சமமான தண்டனை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு, எல்லோருக்கும் ஒரே மாதிரியான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அடுத்ததாக, இதுபோன்ற வழக்குகள் அரிதினும் அரிதாகத்தான் இறுதிவரை வருகின்றன என்பதையும் குறிப்பிட்டு தண்டனை வழங்கியிருக்கிறார்கள்."

"இவையெல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அதாவது ஜெயராஜின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து தீர்ப்பை முழுமையாகக் கேட்டார்கள். இதுதான் நீதி. இதுபோல நடப்பது மிக மிக அரிதான விஷயம்." என்கிறார் ஹென்றி திஃபேன்.

ஆனால், இதுபோல தண்டனைகள் வழங்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல என்கிறார் ஹென்றி. "இந்த வழக்கை ஆரம்ப கட்டத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்த போது, காவல்துறையினரின் மனநல மேம்பாட்டுத் திட்டத்திற்கு அரசு நிதி வழங்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே, காவல்துறையினரின் மனநலனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியிருக்கலாம். அவர்கள் சிறையில் இருக்கும் காலத்தில் அவர்களது மனநல மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கலாம்." என்கிறார் அவர்.

'மேல் முறையீட்டில் தண்டனை குறையலாம்'

படக்குறிப்பு, தண்டனை அறிவிக்கப்பட்ட அன்று நீதிமன்றம் வந்திருந்த குற்றவாளிகளில் ஒருவர்

இந்த வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை மிக அதிகமானது என்கிறார் காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளரும் தமிழ்நாடு போலீஸ் அகாதெமியின் முன்னாள் முதல்வருமான சித்தண்ணன்.

"இது ஒரு ஜனரஞ்சகமான தீர்ப்பு (Popular Judgement). அதாவது, ஒரு குற்றத்தையொட்டி சமூகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டால், அது நீதித் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தத் தருணத்தில் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டுவிடும். இதுபோன்ற கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் குற்றங்கள் குறையுமெனச் சொல்ல முடியாது.

ஒரு கொலை நடந்தால் அதற்குப் பின்னணியில் எதாவது நோக்கம் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஏதாவது கோபத்தில் அடித்து, ஒருவர் இறந்துவிட்டால், அதனை 'கொலையாகாத குற்றமுறு மரணம்' என்பார்கள். அதற்கு அதிகபட்சம் 10 வருடங்கள் தண்டனை விதிக்கலாம். இந்த வழக்கில் அபராதமும் மிக அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்பட்டிருப்பது அரிதிலும் அரிதான நிகழ்வு.

இந்த வழக்கில் நீதிபதி, வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது என்று கூறி, குறைவான தண்டனை அளிக்க விரும்பவில்லை எனக் கூறியிருக்கிறார். எங்களுக்குக் கொலை செய்யும் நோக்கமில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனால், அதிகபட்ச தண்டனையை அளித்திருக்கிறார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 5 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறையில் இருந்திருக்கிறார்கள். ஜாமீனே வழங்கப்படவில்லை. மிகக் கொடும் குற்றவாளிகளுக்குக்கூட ஓரிரண்டு ஆண்டுகளில் ஜாமீன் வழங்கப்பட்டுவிடும். ஆனால், இவர்கள் கைதுசெய்யப்பட்டதிலிருந்து சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் மேல் முறையீடு செய்யும்போது இவர்களுக்கான தண்டனை குறையுமென்றுதான் கருதுகிறேன்.

ஆனால், விதிக்கப்பட்ட தண்டனை பத்தாண்டுகளுக்கு மேலே இருந்தால், ஜாமீன் மறுக்கப்படும். மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் மேல் முறையீட்டில் விசாரணை துவங்கும். அதுவரை இவர்கள் சிறையில்தான் இருந்தாக வேண்டும்." என்கிறார் சித்தண்ணன்.

இன்னும் எஞ்சி நிற்கும் கேள்விகள்

பட மூலாதாரம், UGC

ஆனால், இந்த வழக்கில் இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன என்கிறார் ஹென்றி திஃபேன். "முதலாவதாக, கொடுங்காயங்களோடு வந்த ஜெயராஜையும் பென்னிக்சையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதித்துறை நடுவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. மிகக் கடுமையான காயங்களோடு வந்த ஜெயராஜையும் பென்னிக்சையும் எப்படி ரிமாண்ட் செய்ய அவர் அனுமதித்தார்? அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தால், அவர்கள் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்கள். அந்த நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பிய புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

அடுத்தாக, இவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் அளித்த மருத்துவர். அவரும் இன்னமும் சேவையில் இருக்கிறார். அடுத்தபடியாக, கோவில்பட்டி கிளைச் சிறையின் கண்காணிப்பாளர். அவர் எப்படி இவ்வளவு காயத்துடன் வந்தவர்களை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார் என்பது புரியவில்லை. இவ்வளவு காயத்துடன் வருபவர்களை ஏற்க முடியாது என்று கூறி, உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் அவர்கள் பிழைத்திருப்பார்கள். இப்படியாக, மிக மோசமாக காயம்பட்டு வந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிக் காப்பாற்றும் வாய்ப்புகளை எல்லோருமே வீணடித்தார்கள்.

இந்தத் தருணத்தில் சாத்தான்குளத்தின் டிஎஸ்பியாக இருந்தவர் குறித்தும் கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி, இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதற்காக, நீதித் துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குச் சென்றபோது அவரை இரண்டு காவல்துறை அதிகாரிகள் மிரட்டினார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், இதைப் பற்றியெல்லாம் நாங்கள் வழக்கு நடந்தபோது கேள்வியெழுப்பவில்லை. காரணம், அதனை முன்வைத்து இந்த வழக்கின் விசாரணை நின்றுவிடக்கூடாது எனக் கருதினோம்." என்கிறார் ஹென்றி திஃபேன்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பாதிரியார் ஆறுதல் கூறிய போது எடுக்கப்பட்ட படம் (ஜூன் 20, 2020)

'காவல் நிலையங்களில் திடீர் சோதனை அவசியம்'

இதுபோன்ற காவல் நிலைய மரணங்களை தடுக்க வேண்டுமானால், வேறு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் சித்தண்ணன். "காவல்துறையினருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில்தான் இதுபோல நடக்கிறது. 9 தருணங்களில்தான் குற்றவாளிகள் மீது குறைந்த அளவில் பலப்பிரயோகம் செய்யலாம் என்கின்றன விதிகள். ஆனால், இது 80 சதவீத காவலர்களுக்குத் தெரியாது."

"உயர் அதிகாரிகளின் கண்காணிப்பும் மிகக் குறைவாக இருக்கிறது. முன்பெல்லாம் உயரதிகாரிகள் தொடர்ந்து காவல் நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்வார்கள். கைதிகள் ஏன் அங்கே இருக்கிறார்கள், நீதிமன்றத்தில் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை என கேள்வியெழுப்புவார்கள். இப்போது அந்தக் கண்காணிப்பு குறைந்துவிட்டது. அதுவும் ஒரு காரணம்," என்கிறார் அவர்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

மதுரை எஸ்எஸ் காலனி வழக்கில் என்ன நடந்தது?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்தாலும் சில மரணங்கள் தொடர்பாகவே வழக்குகள் நடைபெற்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வழக்காக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் 2019-இல் நிகழ்ந்த ஒரு காவல் மரணம் தொடர்பான வழக்கைக் குறிப்பிடலாம். இந்த வழக்கில் நான்கு காவலர்கள் தண்டிக்கப்பட்டனர்.

2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் 17 வயதான சிறுவன், நகை திருட்டு தொடர்பான விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மூன்று நாட்கள் நடந்த காவல் சித்ரவதைக்குப் பிறகு அவர் கொடும் காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இருந்தபோதும் அவரது உடல் பிரேதப் பரிசோதனை ஏதும் செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கையடுத்து சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிபி-சிஐடி விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் ஆய்வாளர் எஸ். அலெக்ஸ்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர். ரவிச்சந்திரன், தலைமைக் காவலர் எஸ். ரவிச்சந்திரன், காவலர் சி. சதீஷ்குமார் ஆகியோருக்கு 11 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆதாரங்களை அழிக்க உதவியதற்காக, அப்போதைய ஆய்வாளர் எம். அருணாச்சலம், ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர்கள் பி. கண்ணன், கே. பிரேம் சந்திரன் ஆகிய மேலும் மூன்று காவல்துறை அதிகாரிகளையும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக, அருணாச்சலத்தை இடைநீக்கம் செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இது தவிர, இளைஞரின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர் எஸ். ஜெயக்குமார் மீதும், பிரேதப் பரிசோதனை நடத்தாமல் உடலைக் காவல்துறையிடம் ஒப்படைத்ததற்காக அப்போதைய உள்ளுறை மருத்துவ அதிகாரியான ஏ. ஸ்ரீலதா மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் காவல்துறை, சிறார் நீதிக் குழுமம், மருத்துவத் துறை ஆகியவை தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு