அமெரிக்க போர் விமானத்தை வீழ்த்திய 'தோளில் வைத்து ஏவப்பட்ட ஏவுகணை' - பாதுகாப்பு அமைப்பை ஊடுருவியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிறிஸ் பார்ட்ரிட்ஜ், எம்மா பெங்கெல்லி மற்றும் அலெக்ஸ் முர்ரே
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பட ஆய்வுகள், அதிகாரப்பூர்வ கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி, அமெரிக்கா இந்தப் போரில் இதுவரை குறைந்தது 9 விமானங்களை இழந்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவின் எஃப் 15 ஸ்டிரைக் ஈகிள் விமானம் இரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, கண்டறிவதற்கு கடினமான, வெப்பத்தை இலக்காகக் கொண்டு தாக்கும், நடமாடும் தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணையே காரணமாக இருக்கலாம்.
திங்கள்கிழமை இரவு, அதிபர் டொனால்ட் டிரம்ப் தோளில் வைத்து ஏவக்கூடிய வெப்பத்தை இலக்காகக் கொள்ளும் ஏவுகணை இதில் சம்பந்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். மேலும் இது அவர்களுக்கு ''அதிர்ஷ்டவசமாக அமைந்தது'' என்றும் அவர் விவரித்தார்.
விமானிகள் இரண்டு வகையான ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். ஒன்று ரேடார் மூலம் வழிநடத்தப்படுபவை, மற்றொன்று அகச்சிவப்பு கதிர்கள் (வெப்பம்) மூலம் இலக்கைத் தொடர்பவை.
முதலாவது வகை ஏவுகணையால் ஒரு போர் விமானம் குறிவைக்கப்பட்டால், அந்த ரேடார் கதிர்வீச்சை விமானத்தில் உள்ள மின்னணு அமைப்புகள் கண்டறிந்துவிடும். இது குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலியெழுப்பியும், திரையில் அதன் இருப்பிடத்தைக் காட்டியும் எச்சரிக்கும்.
இதற்கான ஆரம்பகால அமைப்பு TEWS (Tactical Electronic Warfare Suite) என்று அழைக்கப்பட்டது, இது பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
ஆனால் வெப்பத்தை இலக்காகக் கொள்ளும் ஏவுகணைகள் ரேடார் சிக்னல்களை வெளியிடுவதில்லை.
இதனால் விமானிகள் தங்கள் சொந்தக் கண்களால் பார்ப்பதைத் தவிர, இந்த ஏவுகணைகளைக் கண்டறிவது மிகவும் கடினம்.
குறிப்பாக அகச்சிவப்பு கதிர்கள் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணைகளின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, கடந்த ஆண்டு அமெரிக்க விமானப்படை தனது எஃப் 15 விமானங்களின் பாதுகாப்பு அமைப்பை புதிய வசதிகளுடன் மேம்படுத்தும் பணியைத் தொடங்கியது.
பிரிட்டனின் லேகன்ஹீத் விமானப்படை தளத்தில் உள்ள விமானங்கள் இதனை முதலில் பெற்றன.
எஃப்-35 போன்ற ஐந்தாம் தலைமுறை விமானங்கள், அகச்சிவப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஏவுகணை நெருக்க எச்சரிக்கை அமைப்பைக் கொண்டுள்ளன.
எஃப் 15 சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது, இரான் வான்வெளியில் அமெரிக்காவுக்கு பெரும் பலம் இருக்கிறது என்பதால் அங்கு அச்சுறுத்தல்களே இல்லை என்று அர்த்தமல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


பட மூலாதாரம், Social media
போரில் அமெரிக்கா இழந்த விமானங்கள் எவை?
இரானில் விழுந்த அமெரிக்க வீரரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த எஃப் 15 விமானத்திற்கு உதவ அனுப்பப்பட்ட இரண்டு போக்குவரத்து விமானங்கள், இரானின் தொலைதூரத் தளம் ஒன்றிலிருந்து புறப்பட முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிபிஎஸ் நியூஸ் ஏப்ரல் 5 அன்று தெரிவித்தது.
அந்த விமானங்கள் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருக்க அழிக்கப்பட்டதாக அந்த செய்தி கூறியது.
உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மத்திய இரானில் ஒரு விமானத்தின் சிதைந்த பாகங்கள் புகைந்து கொண்டிருப்பதைக் காட்டின. அந்த பாகங்களை ஆய்வு செய்து, அது எந்த வகை விமானம் என்பதைக் கண்டறிய பிபிசி வெரிஃபை நிபுணர்களிடம் கேட்டுள்ளது.
ஏப்ரல் 3 அன்று, மத்திய இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள சிதைந்த பாகங்கள் அமெரிக்காவின் எஃப் 15 ஸ்டிரைக் ஈகிள் விமானத்தைச் சேர்ந்தவை என்று ஒரு நிபுணர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.
அதே நாளில், ஏ-10 வார்த்ஹாக் விமானம் ஒன்று வளைகுடா பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அதன் விமானி விமானத்திலிருந்து குதித்துத் தப்பியதாகவும் பின்னர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், EPA
செளதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில், இரான் நடத்திய தாக்குதல் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, இ3 சென்ட்ரி என்ற கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் இரண்டாகப் பிளந்து கிடப்பதை மார்ச் 29 அன்று பிபிசி உறுதிப்படுத்திய படங்கள் காட்டின.
மார்ச் 12 அன்று, மேற்கு இராக் பகுதியில் அமெரிக்காவின் கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் ஆறு பணியாளர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்த விசாரணைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் ''எதிரிகளின் தாக்குதல் அல்லது தவறுதலான நட்பு நாட்டுத் தாக்குதல்'' ஆகியவற்றை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
மேலும் மார்ச் 2 அன்று, குவைத்திற்கு மேலே மூன்று அமெரிக்க எஃப் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதை "நட்பு நாட்டுத் தாக்குதல் சம்பவம்" என்று அமெரிக்க ராணுவம் விவரித்தது.
அதில் இருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாக அது கூறியது.
குவைத் நகருக்கு மேற்கே ஒரு எஃப் 15 விமானம் தரையை நோக்கிச் சுழன்று விழுவதையும், பயன்படுத்தப்பட்ட ஒரு பாராசூட்டுக்கு அருகில் ஒரு பணியாளர் இருப்பதையும் காட்டும் வீடியோவை பிபிசி வெரிஃபை உறுதி செய்தது.

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































