ஆட்டு ஈரல் சாப்பிடுவதால், உங்களின் கல்லீரல் பாதிப்புகள் சரியாகுமா? - மருத்துவர்களின் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"ஆட்டின் ஈரலைச் சாப்பிட்டால் அது நம்முடைய ஈரலுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமன் செய்துவிடும்"

இது ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக சொல்லப்படும் வசனம்.

இதில் ஏதும் உண்மை உள்ளதா? கோழி அல்லது ஆட்டின் ஈரல் சாப்பிடுவது மனிதர்களின் ஈரலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்குமா?

ஈரல் எனும்போது அது கோழி அல்லது ஆடு மட்டுமல்லாது, மாடு, பன்றி ஆகியவற்றின் ஈரலிலும் வைட்டமின்கள், இரும்பு, புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

அதேசமயம், கர்ப்பிணிப் பெண்கள் ஈரலைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏனெனில் அவற்றில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ, கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

ஈரலை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

"நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய கோழி அல்லது ஆட்டின் ஈரலில் அதிகளவு சத்துக்கள் உள்ளன. உதாரணத்திற்கு நமது உடல் எளிதில் எடுத்துக்கொள்ளும் ஹீம் (Heme) இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளது. இது உடலின் ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, ரத்த சோகையைத் தடுக்கிறது" என்கிறார் மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் பிரசாந்த் அருண்.

ஈரலில் இருக்கும் வைட்டமின் பி 12 சிவப்பு ரத்த அணுக்களின் உருவாக்கம், நரம்புகளின் ஆரோக்கியம், மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

"விலங்குகளின் ஈரலில் உயர்தர புரதம் அதிகம் உள்ளது. தசைகளை சரிசெய்வதற்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் இது முக்கியம். உடல்நலக் குறைபாட்டிற்கு பின் குணமடைவதற்கும் இந்தப் புரதம் உதவுகிறது" என்றும் பிரசாந்த் அருண் குறிப்பிடுகிறார்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின்படி, ஈரலில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.

நோய் மற்றும் தொற்றுக்கு எதிரான உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாகச் செயல்பட இந்த வைட்டமின் ஏ உதவுகிறது.

அதுமட்டுமல்லாது கண் பார்வைக்கும், சரும நலனுக்கும், மூக்கு போன்ற உடலின் சில பாகங்களின் சவ்வுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் வைட்டமின் ஏ உதவுகிறது.

பால், சீஸ், முட்டைகள், மற்றும் சால்மன், மத்தி போன்ற கொழுப்புள்ள மீன்கள் போன்றவற்றில் வைட்டமின் ஏ காணப்பட்டாலும், விலங்குகளின் ஈரலில் மிக அதிக அளவில் உள்ளது என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விலங்குகளின் ஈரலில் உயர்தர புரதம் அதிகம் உள்ளது.

குழந்தைகளுக்கு ஈரல் கொடுக்கலாமா?

"பொதுவாக அசைவ உணவுகளில் இருக்கும் 'ஹீம் இரும்புச்சத்து' ஈரலில் அதிகம் உள்ளது, எனவே 5 முதல் 10 வயது குழந்தைகளுக்கு 50 கிராம் வரை வாரம் ஒருமுறையும், 10 முதல் 15 வயது குழந்தைகளுக்கு 50 முதல் 100 கிராம் வாரம் ஒருமுறையும் சமைத்துக் கொடுக்கலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

இதில் இருக்கும் வைட்டமின் பி 12, குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்றாலும், குழந்தைகளுக்கு அளவாகவே கொடுப்பது தான் நல்லது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால், குழந்தைகளுக்கு இதை எண்ணெயில் வறுத்துக் கொடுக்கக்கூடாது என்று கூறும் தாரிணி கிருஷ்ணன், "வறுக்கும்போது இதிலுள்ள வைட்டமின் பி 12 அழிந்துவிடும். எனவே கிரேவி அல்லது குழம்பு போல சமைப்பது தான் சிறந்தது" என்கிறார்.

அதேபோல, பெரியவர்கள் வாரம் ஒருமுறை 100 முதல் 200 கிராம் வரை ஈரல் சாப்பிடுவது போதுமானது என்றும் தாரிணி கிருஷ்ணன் கூறுகிறார்.

படக்குறிப்பு, மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் பிரசாந்த் அருண்.

யாரெல்லாம் ஈரல் சாப்பிடக்கூடாது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஈரலில் அதிகளவில் வைட்டமின் ஏ இருப்பதால், அதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அதிகப்படியான வைட்டமின் ஏ கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது.

வைட்டமின் ஏ பொறுத்தவரை, 19 முதல் 64 வயது வரையிலான பெரியவர்களுக்குத் தேவைப்படும் அளவு என்பது, ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 700 மைக்ரோ கிராம்கள், பெண்களுக்கு ஒரு நாளைக்கு 600 மைக்ரோ கிராம்கள்.

பல ஆண்டுகளாக ஒரு நாளைக்கு சராசரியாக 1,500 மைக்ரோகிராமிற்கும் அதிகமான வைட்டமின் ஏ-வை உட்கொள்வது எலும்புகளைப் பாதிக்கக்கூடும் என்றும், இதனால் வயதாகும்போது அவற்றில் எளிதில் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எலும்புகளை பலவீனப்படுத்தும் ஒரு நோயான ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) அபாயம் ஏற்கெனவே அதிகமாக உள்ள முதியோர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, இது மிகவும் முக்கியமானது.

"உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் உடையவர்கள் ஈரலை தவிர்ப்பது சிறந்தது. அதேபோல 2 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமை உள்ளவர்களும் அதைத் தவிர்ப்பது நல்லது" என்கிறார் மருத்துவர் பிரசாந்த் அருண்.

கோழியின் ஈரல் அல்லது ஆட்டின் ஈரல்- எது சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

"பொதுவாகவே விலங்குகளின் ஈரல்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை தான். எது எளிதில் கிடைக்கிறதோ, அதை அளவாக எடுத்துக்கொள்வது சிறந்தது" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

அதேநேரம், கோழி மற்றும் ஆட்டின் ஈரலில் சமமான அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார்.

"தலா 100 கிராம் கோழி மற்றும் ஆட்டு ஈரலில், 160 முதல் 170 கலோரிகளும், 20 முதல் 25 கிராம் புரதமும், 5 கிராம் கொழுப்பும், 400 முதல் 500 மில்லிகிராம் கொலஸ்ட்ராலும் உள்ளது" என மருத்துவர் அருண்குமார் கூறுகிறார்.

ஆட்டு ஈரலில் உள்ள வைட்டமின் ஏ குறித்துப் பேசிய அவர், "100 கிராம் ஆட்டு ஈரலில் 6000 யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. இது ஒரு நாளைக்கு நமக்கு தேவையான 5000 யூனிட் வைட்டமின் ஏ என்ற அளவை விட அதிகம்" என்றார்.

ஆனால், கோழியின் ஈரலில் 16,000 யூனிட் வைட்டமின் ஏ உள்ளது எனக் கூறிய அவர், "இது ஒருநாளைக்கு தேவையானதை விட மூன்று மடங்கு அதிகம்" என்றார்.

"அதிகளவிலான வைட்டமின் ஏ அல்லது ஈரல் எடுத்துக்கொள்வது 'ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ' போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் அல்லது மனித கல்லீரலில் இந்த உபரி ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் குவிந்து கல்லீரல் பாதிப்பு கூட வரலாம்" என்றும் அவர் எச்சரிக்கிறார்.

"எனவே குழந்தைகளுக்கு கோழி ஈரலை விட ஆட்டு ஈரலுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். அதிலும் வாரம் ஒருமுறை 50 கிராமுக்கு மேல் எடுக்க வேண்டாம்" என்று கூறுகிறார் அருண்குமார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகப்படியான விலங்கு ஈரல் நுகர்வு, மனித கல்லீரலுக்கு அழுத்தத்தையே தரும்.

மனித ஈரலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விலங்கு ஈரல் சரிசெய்யுமா?

"நிச்சயமாக, மனித ஈரலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விலங்கு ஈரல் சரிசெய்யாது. அது பலரிடம் காணப்படும் அறிவியல் ஆதாரம் இல்லாத நம்பிக்கை" என்கிறார் மருத்துவர் பிரசாந்த் அருண்.

"டீ-டாக்சிஃபை (Detoxify) என்ற பெயரில் இந்த விஷயத்தை அணுகக்கூடாது. காரணம், கல்லீரல் என்பதே உடலைச் சுத்தப்படுத்தக்கூடிய ஒன்று தான். அதுவே தன்னை தானே சுத்தப்படுத்திக்கொள்ளும். அப்படி இருக்க தனியாக விலங்கு ஈரல் தேவையில்லை" என்கிறார் அவர்.

"சமச்சீரான, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் இவை தான் கல்லீரலை பாதுகாக்கும்" என்று கூறுகிறார் பிரசாந்த் அருண்.

எனவே விலங்கு கல்லீரலுக்கும் மனித கல்லீரலுக்கும் இருக்கும் ஒரு முக்கிய தொடர்பு, அதிகளவில் விலங்கு கல்லீரல் எடுத்துக்கொண்டால், அதில் இருக்கும் அதிக 'வைட்டமின் ஏ' நிச்சயமாக மனித கல்லீரலுக்கு அழுத்தம் தரலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு