சட்டமன்ற 'தேர்தல் புறக்கணிப்பை' அறிவித்த வேங்கைவயல் மக்கள் - என்ன நடக்கிறது?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் தரப்பில் வேங்கைவயல் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் தேர்தல் புறக்கணிப்பு என்பது தங்களின் இறுதியான முடிவு என்கிறார்.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என வேங்கைவயல் மக்கள் கோரி தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ''திமுக துரோகங்களை பட்டியலின மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அன்புமணி ராமதாஸ் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறும் திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தேர்தல் நேரத்தில் அரசியல் நோக்கங்களுக்காக இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைப்பதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டும் திமுகவின் பதிலும்

தேர்தல் புறக்கணிப்பு செய்தி தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில், "தங்களுக்கு நீதி கிடைக்காததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக திமுக அரசு சித்தரிப்பதைக் கண்டித்தும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அங்குள்ள பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர்.

பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது," எனத் தெரிவித்துள்ளார். அதன்பிறகாவது அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு நீதி வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், X/Saravanan Annadurai

படக்குறிப்பு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சரவணன், "காவல்துறை அறிவியல்பூர்வமான முறையில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தவறான வாதத்தை முன்வைக்கும் அவர் அரசியல் பிரச்னையாக தற்போது இதை பரப்புகிறார்." எனத் தெரிவித்தார்.

எஸ்சி/எஸ்டி மக்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது எனக் கூறும் சரவணன், அன்புமணி ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்றும் கூறினார்.

"காவல்துறை விசாரணை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர் எதன் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் எனக் கூற வேண்டும். அவரிடம் ஆதாரம் இருந்தால் அதனை வெளியிட வேண்டும்," என்றும் தெரிவித்தார்.

"தேர்தல் புறக்கணிப்பு எங்களின் இறுதி முடிவு"

ஊர் மக்களின் முடிவில் மாற்றம் இருக்கப்போவதில்லை என்கிறார் வேங்கைவயலைச் சேர்ந்த முருகன், "எங்கள் ஊர் மக்கள் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது அரசுக்குத்தான் தெரியும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்," என்றார்.

2024 நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருந்த நிலையில் தங்களுக்குப் 'பொய்யான வாக்குறுதிகள்' வழங்கப்பட்டதாக கூறுகிறார் முருகன்.

"போன முறை பேச்சுவார்த்தை நடத்தி வேலை மற்றும் வழக்கு விசாரணை தொடர்பாக பல்வேறு உத்தரவாதங்களை வழங்கினர். வாக்குப்பதிவு நாளன்று கூட மாலை வரை நாங்கள் வாக்களிக்கவில்லை. அன்றைய தினமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் நாங்கள் வாக்களித்தோம். ஆனால் எந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்." என்று அவர் தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி வேங்கைவயல் கிராமத்தில் 35 குடும்பங்களும், சுமார் 100 வாக்காளர்கள் உள்ளனர்.

காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து வேங்கைவயல் கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஊர் மக்களை மறுபரிசீலனை செய்யக் கூறியுள்ளோம் என அரசு அதிகாரிகள் கூறும் நிலையில் தேர்தல் புறக்கணிப்பு என்கிற தங்களின் முடிவு இறுதியானது என்கிறார் முருகன்.

"அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள், ஆனால் நாங்கள் செல்லவில்லை. அதன் பிறகு எங்கள் ஊருக்கே வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தான் எங்களின் இறுதி முடிவு எனக் கூறிவிட்டோம். விசாரணை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. முறையாக விசாரித்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அரசு அதிகாரிகளும் உறுதிபடுத்துகின்றனர். அதே வேளையில் தேர்தல் சமயம் என்பதால் தங்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என்றும் கோரினர்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளோம் - அரசு அதிகாரிகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வேங்கைவயல் மக்களிடம் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரியதாக வருவாய் துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு முறை நேரில் சென்று பேசியுள்ளோம். வேங்கைவயலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளோம். எங்களின் கோரிக்கையை கருத்தில் கொள்வதாகக் கூறியுள்ளனர். மக்கள் முடிவை மாற்றுவார்கள் என நம்புகிறோம். வேறு எந்த விஷயமும் இல்லை. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்த உள்ளோம். விழிப்புணர்வும் மேற்கொண்டு வருகிறோம்." என்றார்.

"தேர்தலில் மக்கள் வாக்களிப்பபதை உறுதி செய்வது எங்களின் கடமையாக உள்ளது. மாவட்ட காவல்துறைக்கும் இந்த வழக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை. சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஊர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சட்ட ரீதியான நிவாரணங்களைப் பெறும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளோம். அடுத்த சில நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்," என்றார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் .

வேங்கைவயல் வழக்கு கடந்த வந்த பாதை

2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பஞ்சாயத்தில் குழந்தைகள் உட்பட ஊர் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் சென்று பார்க்கையில் அந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருது தெரியவந்தது. இந்தச் சம்பவம் பெரிய அளவில் விவாதப் பொருளானது. இந்த வழக்கை முறையாக விசாரித்து அதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்தன.

பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவம் சட்டமன்றத்திலும் விவாதப் பொருளானது. பல்வேறு கட்சிகளும் இது தொடர்பாக குரல் எழுப்பிய நிலையில் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு நபர் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், சிபிசிஐடி விசாரணையில் தாமதமான முன்னேற்றமே இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்தின் இயக்குநர் வேங்கைவயலுக்குச் விசாரணை நடத்தினார்.

சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிக்கையில், பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை சிறப்பு எஸ்சி/எஸ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்று பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கில் தாக்கல் செய்ய குற்றப்பத்திரிகையின் நகல் வேண்டும் என சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்ட 3 பேரும் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதே வேளையில், இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 3 பேரும் அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் பொருந்தாது என்றும் விசாரணையை புதுக்கோட்டை நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த வழக்கு புதுக்கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மார்ச் மாதம் 3 பேருக்கும் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு