ரூ.100 கோதுமை திருடியதாக 45 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் ஒருவர் கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Saleem's family
- எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"ஐயா, சிறுவயதில் இருந்தபோது நான் என்ன தவறு செய்தேன் என்பது கூட எனக்கு நினைவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமையைத் திருடியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட தகவல் தெரிந்திருந்தால், நானே போலீசிடம் சென்றிருப்பேன்."
தொலைபேசியில் பேசிய சலீம் மேவதி, பிப்ரவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை தன்னை கைது செய்ய மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்ட போலீசார் வந்ததாகக் கூறினார்.
இந்த வழக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு கார்கோன் மாவட்டத்தின் பல்க்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்சமுந்த் காகட் கிராமத்தில் 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமை திருட்டு போனது தொடர்பானது.
65 வயதான சலீம், 1980-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஆறு நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு வெவ்வேறு பண்ணைகளில் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மாணிக்சந்த் படேல் மற்றும் லால்சந்த் படேல் ஆகியோர் 1980-ல் புகார் அளித்தனர்.
கார்கோன் மாவட்டத்தில் பணியாற்றும் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி (மண்டலேஷ்வர்) ஸ்வேதா சுக்லா, சலீம் மீதான வழக்கு 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமையைத் திருடியதற்காகத் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து தொலைபேசியில் பேசிய அவர், "எங்களிடம் உள்ள தகவல்களின்படி, 1980-ல் சலீமுக்கும் மற்ற ஆறு பேருக்கும் 19-20 வயது இருக்கும். அந்த நேரத்தில், அவர்கள் பால்சமந்த் காகட் பகுதியில் உள்ள வயல்களில் இருந்து கோதுமையைத் திருடியுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன. இது இரண்டு வயல்களில் நடந்த திருட்டு வழக்கு," என்று பிபிசியிடம் கூறினார்.
காவல்துறை ஆவணங்களின்படி, இந்தச் சம்பவம் நடந்தபோது சலீமுக்கு 19-20 வயது இருக்கும், ஆனால் சலீம் 1967-ல் பிறந்தார் என்றும் சம்பவம் நடந்தபோது அவர் சிறுவனாக இருந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
45 ஆண்டுக்குப் பிறகு காவல்துறை சலீமை அடைந்தது எப்படி ?

பட மூலாதாரம், Ashif Khan
சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்தியப் பிரதேசம் பழைய வழக்குகளை டிஜிட்டல்மயமாக்கியது, இந்த வழக்கும் அவற்றில் ஒன்று.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியைத் தேடும் பணியைத் தொடங்கிய கல்டாகா புறக்காவல் நிலையப் பொறுப்பாளர் மிதுன் சவுகான், அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரின் குடும்பத்தினரிடமிருந்து தற்செயலாக சலீம் பற்றிய தகவல் கிடைத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஏழு பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அவர்களில் இருவர் இறந்துவிட்டனர், நான்கு பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர், சலீம் கடைசி நபர்.
"இந்த வழக்கில் யாருக்கெல்லாம் நிரந்தர வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதோ அவர்களைத் தேடிக் கொண்டிருந்தோம். இவர்களில் ஒருவரின் முகவரி தேவாஸ் மாவட்டத்தில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. அந்த உரையாடலின் போது, சலீம் பற்றிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அவரைத் தொடர்பு கொண்ட பிறகு, சலீமின் வீட்டிற்குச் சென்றோம், பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது," என்று மிதுன் சவுகான் கூறினார்.
இது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று சலீமின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
சலீமின் மருமகள் ஆயிஷா பிபிசியிடம் கூறுகையில், "நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. போலீசார் வந்து என் மாமனாரைக் கைது செய்வதாகக் கூறினார்கள். 45 ஆண்டுகளுக்கு முன்பு, என் மாமனார் 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமையைத் திருடியதாக எங்களிடம் கூறப்பட்டது," என்றார்.
சலீமின் மனைவி தஸ்லீம், இந்தச் சம்பவம் தனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
தஸ்லீம் கூறுகையில், "திடீரென்று போலீசார் வந்து மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனின் தந்தை மற்றும் பேரக்குழந்தைகளின் தாத்தாவைத் திருடன் என்று சொல்லி காரில் அழைத்துச் செல்கிறார்கள். எங்களால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து காவல் நிலையத்திற்குச் சென்றோம்," என்றார்.
"காவல் நிலையத்தில் தான், இந்தச் சம்பவம் எனது திருமணத்திற்கு முன்பே, அவர் சிறுவயதில் இருந்தபோதே நடந்தது என்று எனக்குத் தெரியவந்தது," என்றும் தஸ்லீம் குறிப்பிட்டார்.
'கௌரவம் பாதிக்கப்பட்டது'

பட மூலாதாரம், Khargone police
கார்கோன் மாவட்டத்தில் உள்ள பால்சமுந்த் கான்கட் கிராமத்தைச் சேர்ந்தவர் சலீம். திருமணத்திற்குப் பிறகு, தார் மாவட்டத்தில் உள்ள பாக் கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். சலீமின் மற்ற உறவினர்கள் இப்போதும் பால்சமுந்த் கான்கட் கிராமத்தில் தான் வசிக்கின்றனர்.
தனது கணவர் சலீமுடன் பால்சமந்த் கன்கட் கிராமத்திற்குச் சென்ற தஸ்லீம், இத்தனை ஆண்டுகளாக போலீசாரும் நிர்வாகமும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று தனக்குப் புரியவில்லை எனக் கூறினார்.
"பால்சமந்த் கன்கட்டில் இவர்கள் சிறுபிள்ளைத்தனமான குறும்புத்தனத்தால் ஏதாவது செய்திருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். திருமணமான காலத்திலிருந்தே அந்த கிராமத்திலிருந்து வெறும் 70-80 கிலோமீட்டர் தொலைவில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். சலீம் ஜியின் ஒட்டுமொத்த குடும்பமும் இன்னும் பால்சமந்திலேயே வசிக்கிறார்கள். போலீசார் எப்போதாவது முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால், எங்கள் குடும்பத்திற்கு சம்மன் வந்திருக்கும் அல்லது இன்னும் பால்சமந்திலேயே வசிக்கும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்திருப்பார்கள்"என்கிறார் தஸ்லீம்.
இந்த வழக்கில் சலீம் தலைமறைவாக இருந்ததாகவும், சட்டத்திடமிருந்து ஒளிந்து கொண்டிருந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் சித்தரித்த விதம் தவறானது என்றும், இது குடும்பத்திற்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சலீமின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
தஸ்லீம் பிபிசியிடம் கூறுகையில், "நாங்கள் எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை. என் கணவர் குழந்தையாக இருந்தபோது என்ன செய்தார் என்பது கூட நினைவில் இல்லை. அப்போது அவருக்கு 13 அல்லது 14 வயதுதான் இருந்திருக்கும். ஆனால் போலீஸ் நடவடிக்கையும், ஊடகங்களில் இந்த வழக்கு சித்தரிக்கப்பட்ட விதமும் என் கணவர் சலீம் ஏதோ ஒரு மோசமான குற்றவாளி என்பது போலத் தோன்றச் செய்கிறது. உண்மையில், அவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஒரு சாதாரண மனிதர்"என்று பகிர்ந்து கொண்டார்.

பட மூலாதாரம், Ashif Khan
சலீம் பிப்ரவரி 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த விவகாரத்தில் தனக்கும் புகார் அளித்த தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக சலீம் பிபிசியிடம் தெரிவித்தார்.
"எனக்கு வயதாகிவிட்டது. நான் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் பேரக்குழந்தைகள் இப்போது வளர்ந்துவிட்டார்கள். வழக்குத் தொடர்ந்தவர்களுக்கும் வயதாகிவிட்டது. இது மிகவும் பழைய வழக்கு, அதைத் தொடர்ந்து நடத்தும் சக்தி இரு தரப்பிலும் யாருக்கும் இல்லை. அதனால்தான் நாங்கள் சமரசம் செய்துகொண்டோம்."
சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, திருட்டு போன்ற வழக்குகளில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் வழக்கு தொடர்பான தரப்பினருக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.
இந்த வழக்கின் புகார்தாரர்களில் ஒருவரான மாணிக்சந்த் படேலின் குடும்ப உறுப்பினர்களிடம் நாங்கள் பேசியபோது, அவர்களும் சமரசம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினர்.
மாணிக்சந்த் படேலின் மகன் ராஜேந்திர படேல் தொலைபேசியில் கூறுகையில், "என் தந்தைக்கு இப்போது கிட்டத்தட்ட 80 வயதாகிறது. இந்த வழக்கும் 45 ஆண்டுகள் பழமையானது. அந்த நேரத்தில் அந்தத் தொகை பெரியதாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று அது ஒரு சிறிய விஷயம். இரு தரப்பினருமே முதியவர்கள், அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு சமரசத்திற்கு வந்தனர். இதன் மூலம் வழக்கு முடிவுக்கு வந்தது" என்றார்.
இந்த 45 ஆண்டு காலப் பழமையான சம்பவமும், சலீமின் கைதும், பல ஆண்டுகள் பழமையான வழக்குகளில் காவல்துறையின் பொறுப்பு என்பது நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் முடிகிறதா அல்லது சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவதும் அதே நடைமுறையின் ஒரு பகுதியா என்ற விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































