You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் பிபிசி செயல்படும் முறையில் மாற்றம்; கலெக்டிவ் நியூஸ்ரூம் பணியைத் தொடங்கியது
இந்தியாவில் பிபிசி செயல்படும் தன்மை மாறுகிறது; இன்று முதல் 'கலெக்டிவ் நியூஸ்ரூம்' ஒரு சுதந்திரமான ஊடக நிறுவனமாக செயல்படத் தொடங்கியிருக்கிறது.
இது முற்றிலும் இந்திய நிறுவனம். நான்கு மூத்த பிபிசி பத்திரிகையாளர்கள் ராஜினாமா செய்துவிட்டு, கலெக்டிவ் நியூஸ்ரூம் நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.
டிஜிட்டல் மீடியா துறையில் அன்னிய முதலீட்டு விதிகளின்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டின் கீழ், கலெக்டிவ் நியூஸ்ரூம் இந்தியாவில் பிபிசிக்கான உள்ளடக்கங்களை உருவாக்கி வெளியிடும்.
ஆக்கப்பூர்வமான இதழியல் மூலம் இந்திய வாசகர்களுக்கு செய்திகளை வழங்குவதே இதன் நோக்கம்.
பத்திரிகை நெறிகளைக் கடைபிடிப்பதிலும், இந்தியாவில் இதழியலின் உயர் தரத்தை உருவாக்குவதிலும் கலெக்டிவ் நியூஸ் ரூம் உறுதியாக இருக்கிறது.
புதிய நிறுவனம் தற்போது பிபிசிக்கான உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிடும், ஆயினும் எதிர்காலத்தில் ஒரு சுதந்திரமான ஊடக நிறுவனமாக பிற நிறுவனங்களுக்கும் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்க விரும்புகிறது.
“மிக நம்பகமான, படைப்பாற்றல் மற்றும் துணிச்சலான இதழியலை உருவாக்குவதற்கான தெளிவான, லட்சிய நோக்கத்துடன் அனுபவம் மற்றும் திறமை மிகுந்த பத்திரிகையாளர்களுடன் கலெக்டிவ் நியூஸ்ரூம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்", என்று கலெக்டிவ் நியூஸ்ரூம் தலைமை செயல் அதிகாரி ரூபா ஜா தெரிவித்தார்
"பல்வேறு தரப்பினரின் குரல்கள், மாறுபட்ட கண்ணோட்டங்களுடன், உண்மையை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் நலனுக்காக செயல்படும் சுதந்திரமான செய்தி நிறுவனமாக கலெக்டிவ் நியூஸ்ரூம் விரைவில் நேயர்களால் அறியப்படும் ’’ என்றும் அவர் கூறினார்.
ரூபா ஜாவுடன் சக இயக்குநர்களாக முகேஷ் ஷர்மா, சஞ்சய் மஜும்தார் மற்றும் சாரா ஹசன் ஆகியோர் செயல்படுவார்கள். அவர்கள் அனைவருமே செய்தி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பில் விரிவான அனுபவத்தை கொண்டுள்ளனர்.
கலெக்டிவ் நியூஸ்ரூமின் முதல் வாடிக்கையாளரான பிபிசி, தனது ஒப்பந்தத்தில், அதிக நேயர்களைக் கொண்ட பிபிசி மொழி சேவையான பிபிசி ஹிந்திக்கான செய்தி தயாரிப்பையும் உள்ளடக்கியிருக்கிறது. 2023-ஆம் ஆண்டில் அனைத்து தளங்களிலும் இச் சேவையின் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கை 27 சதம் அதிகரித்துள்ளது.
பிபிசி நியூஸ் தமிழ், பிபிசி நியூஸ் தெலுங்கு, பிபிசி நியூஸ் ஹிந்தி, பிபிசி நியூஸ் மராத்தி, பிபிசி நியூஸ் குஜராத்தி, பிபிசி நியூஸ் பஞ்சாபி ஆகிய 6 இந்திய மொழிகளுடன் பிபிசி ஆங்கிலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் யூடியூபில் இந்திய நேயர்களுக்கான செய்திகளை கலெக்டிவ் நியூஸ்ரூம் தயாரித்து வெளியிடும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)