You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலில் மூழ்கிய கப்பலில் எடுத்த தங்கப் புதையலின் ஒரு பகுதி எங்கே? 10 ஆண்டு சிறைப்பட்டும் வாய் திறக்காத அமெரிக்கர்
- எழுதியவர், கிரேஸ் எலைஸா குட்வின்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஒரு புகழ்பெற்ற கப்பல் மூழ்கிய இடத்தில் இருந்த தங்க நாணயங்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்த மறுத்த அமெரிக்க ஆழ்கடல் பொக்கிஷ வேட்டையாளர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இன்னும் 500 தங்க நாணயங்கள் கணக்கில் வரவில்லை.
73 வயதான டாமி தாம்ப்சன், 1988ஆம் ஆண்டு தெற்கு கரோலினா கடற்கரைக்கு அருகே 1857ஆம் ஆண்டு மூழ்கிய எஸ்எஸ் சென்ட்ரல் அமெரிக்கா (SS Central America) என்ற கப்பலிலிருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள புதையலைக் கண்டுபிடித்தார். இது "தங்கக் கப்பல்" (Ship of Gold) என்றும் அழைக்கப்படுகிறது.
தாம்ப்சனின் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி செயல்படாமல் அவர் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினர். பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தாம்ப்சன், 2015ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
1857ஆம் ஆண்டு கப்பல் மூழ்கிய போது, சான் பிரான்சிஸ்கோவில் புதிதாக தயாரிக்கப்பட்ட 30,000 பவுண்டு தங்கக் கட்டிகளை அது எடுத்துச் சென்றுகொண்டிருந்தது.
அது வங்கிகளுக்கான தங்கச் சேமிப்பாக பயன்படுத்தப்படவிருந்தது. ஆனால் 1857ஆம் ஆண்டு கப்பல் மூழ்கியபோது, அந்த பொக்கிஷம் 7,000 அடி ஆழத்தில் கடலுக்கடியில் சென்றது. இந்த விபத்தில் 425 பயணிகளும் கப்பல் பணியாளர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் 1857ஆம் ஆண்டின் பெரிய நிதி நெருக்கடிக்குக் காரணமாக அமைந்தது.
மொத்தம் 161 முதலீட்டாளர்கள், கப்பலை கண்டுபிடித்து பொக்கிஷத்தை மீட்பதற்காக டாமி தாம்ப்சனுக்கு 12.7 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கினர். முதலீட்டுக்கு லாபம் கிடைக்கும் என்ற புரிதலில்தான் அவர்கள் இந்தப் பணத்தை முதலீடு செய்தனர்.
அப்போது ஒஹாயோ மாகாணத்தின் கொலம்பஸ் நகரில் உள்ள பெடல் மெமோரியல் இன்ஸ்டிட்யூட்டில் கடல் பொறியாளராக இருந்த தாம்ப்சனும் அவரது குழுவினரும், 1988ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தங்க கட்டிகளையும் தங்க நாணயங்களையும் கடலில் இருந்து மீட்டனர். அவற்றில் பெரும்பாலானவை 2000ஆம் ஆண்டு ஒரு தங்க விற்பனை குழுவிற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டன.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தியின்படி, அந்த தங்க நாணயங்கள் பெலீஸில் உள்ள ஒரு அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், முதல் கட்டமாக விற்கப்பட்ட தங்கத்திலிருந்து கிடைத்த பெரும்பாலான பணம் சட்டச் செலவுகள் மற்றும் வங்கி கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டதாகவும் தாம்ப்சன் கூறினார்.
2005ஆம் ஆண்டு முதலீட்டாளர்கள் தாம்ப்சனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். பொக்கிஷத்தை விற்ற பணத்தில் இருந்து தங்களுக்கு இன்னும் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். தாம்ப்சன் கடலில் இருந்து மீட்ட தங்க கட்டிகளும் நாணயங்களும் சேர்த்து சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையவை என்று பின்னர் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
2012ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை எதிர்கொண்ட நிலையில் டாமி தாம்ப்சன் திடீரென காணாமல் போனார். தப்பி தலைமறைவாக இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு புளோரிடா மாகாணத்தின் போகா ராட்டன் நகரில் தாம்ப்சனும் அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். அறைக்கான பணத்தை போலியான பெயரில் பணமாக செலுத்தி, போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க டாக்ஸிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
காணாமல் போன சுமார் 500 தங்க நாணயங்களின் இருப்பிடத்தை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்ததால், தாம்ப்சன் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 2015ஆம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு 24 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனைக்கு பொதுவாக ஒரு நிரந்தர காலவரையறை இருக்காது. நீதிமன்ற உத்தரவை அந்த நபர் கடைபிடிக்கும் வரை, இங்கு காணாமல் போன நாணயங்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தும் வரை, தண்டனை நீட்டிக்கப்படலாம்.
தாம்ப்சன் இனிமேலும் பதில் அளிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கருதிய நீதிபதி கடந்த ஆண்டு, அவரது சிவில் அவமதிப்பு தண்டனையை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக்கொண்டதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு