பொன்னியின் செல்வன் பாடல் - உச்சநீதிமன்ற உத்தரவால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிக்கல் அதிகரிப்பா?

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற 'வீர ராஜ வீர' பாடலின் இசை தாகர் சகோதரர்களால் இயற்றப்பட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்குமாறு பிப்ரவரி 13 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

என்ன வழக்கு?

இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர், கடந்த 2023-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், 'மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் 'வீர ராஜ வீர' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல், எனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் வெளியிட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலின் இசையில் இருந்து நகலெடுக்கப்பட்டுள்ளது' எனக் கூறியிருந்தார்.

'இருவரும் இறந்ததை தொடர்ந்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சமரசம் மூலமாக தனக்கு காப்புரிமை வழங்கப்பட்டதாக', வசிஃபுதின் தாகர் மனுவில் தெரிவித்துள்ளார்.

'வீர ராஜ வீர' பாடல் ஒலிப்பதிவில் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை படக்குழு அளிக்கவில்லை என மனுவில் கூறியுள்ள அவர், 'படத்தைத் தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு கூறியது என்ன?

வழக்கின் விசாரணையில் வசிஃபுதின் தாகர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

'துருபத் வகையைச் சேர்ந்த பாரம்பரிய இசையாக 'சிவ ஸ்துதி' உள்ளது. 'வீர ராஜ வீர' பாடல், இந்துஸ்தானி மரபுகளைத் தாண்டி மேற்கத்திய இசையின் அடிப்படைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது' என ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

'பொதுத் தளத்தில் உள்ள கிளாசிக்கல் படைப்புகள் மீது எந்தப் பிரத்யேக உரிமையையும் யாரும் கொண்டாட முடியாது' எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதியன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதில், 'வீர ராஜ வீர' பாடல், சில மாற்றங்களுடன் 'சிவ ஸ்துதி' பாடலின் இசையை அடிப்படையாக கொண்டும், ஈர்க்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளது' என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேல் முறையீடு

"ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மனுதாரரின் உரிமைகளை மீறுகிறது" என தனது தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, 'அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்தப் பாடலுக்குள்ள கிரடிட் ஸ்லைடை (Credit slide) மாற்ற வேண்டும்' எனவும் உத்தரவிட்டார்.

அந்தவகையில், 'மறைந்த உஸ்தாத் நசீர், ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரின் சிவ ஸ்துதியை அடிப்படையாக கொண்ட இசையமைப்பு என கிரடிட் ஸ்லைடை மாற்ற வேண்டும்' என, நீதிபதி தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற பதிவாளரிடம் 2 கோடி ரூபாய்க்கான வைப்புத் தொகையை ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்த வேண்டும் எனவும் இந்தத் தொகை வழக்கின் விசாரணை முடிவுகளுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார்.

வழக்கு தொடர்ந்த வசிஃபுதின் தாகருக்கு வழக்கு செலவாக 2 லட்ச ரூபாயை வழங்குமாறு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வசிஃபுதின் தாகர் மேல்முறையீடு செய்தார்.

'ராகத்துக்கு உரிமை கோரவில்லை'

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வில் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வீர ராஜ வீர பாடல் தாகர்வாணி இசை பாரம்பரியத்தைச் சேர்ந்தது என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புக் கொண்டதாகக் கூறிய நீதிபதிகள், 'அந்தவகையில், இந்தப் பாடலை முதலில் பாடியது மனுதாரரின் முன்னோடிகள் தான் என்பதை ஒப்புக் கொள்ள முடியுமா?' என, ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சில தகவல்களைத் தெரிவித்தார்.

"1991 ஆம் ஆண்டில் குண்டேச்சாவும், 2015 ஆம் ஆண்டில் உதய் பாவல்கரும், 2017 ஆம் ஆண்டில் நிர்மலா டேவும், 2023 ஆம் ஆண்டில் கபீரி கரும் இதே இசையைப் பயன்படுத்தியபோது மனுதாரர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை," என வாதிட்டார்.

அப்போது வசிஃபுதீன் தாகர் தரப்பில், 'ராகத்துக்கு உரிமை கோரவில்லை. இசை அமைப்புக்கு மட்டுமே உரிமை கோருகிறோம்' எனத் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாக்சி, "இது நிபுணர்களுக்கு இடையிலான சண்டை அல்ல. உங்கள் மனுதாரர் தொழில்முறை இசைக் கலைஞராக இருக்கிறார். அவர்களோ பாரம்பரிய இசையை பின்பற்றுபவர்களாக உள்ளனர். அவர்கள் சற்று மரியாதை மற்றும் அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றனர்" எனக் கூறினார்.

இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் 2 கோடி ரூபாயை ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளிப்பதற்கு அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கை வரும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

காப்புரிமை சர்ச்சை தொடர்வது ஏன்?

"தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா வழக்குத் தொடர்ந்த பிறகே இதுபோன்ற விஷயங்கள் வெளியில் வருகின்றன," என சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன் முன்பு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தனது பாடல்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, இசையமைப்பாளர் இளையராஜா எடுத்து வருகிறார்.

2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதை மேற்கோள் காட்டியுள்ளார்.

'2014 ஆம் ஆண்டு முதல் எனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும். அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என இளையராஜா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தான் இசையமைத்த மூன்று பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.

'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்சள் குருவி' மற்றும் 'இளமை இதோ இதோ' ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீட்டை இளையராஜா கேட்டுள்ளார்.

காப்புரிமை தொடர்பாக முன்பு பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், "இசை தொடர்பான உரிமைகளை அறிந்தவர்கள், நீதிமன்றங்களை நாடி தங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்," எனக் கூறினார்.

இவர் இளையராஜா தொடர்ந்துள்ள காப்புரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி வருகிறார்.

"ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது இசை, பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் கொடுக்கப்படுகிறது. அந்தப் படம் வெளிவந்த பிறகு முழு படத்தையும் விற்கலாம்.

அப்போது பாடல்களுடன் சேர்த்து படத்தை வெளியிடலாம். ஆனால், பாடல்களை மட்டும் தனியாக பயன்படுத்தும்போது அதன் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. இது அவரின் இசைப் பணிக்கான உரிமை (Musical rights). இது அறிவுசார் சொத்துரிமையில் வரும்," என்கிறார் சரவணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு