You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தோனி நிராகரித்த திட்டத்தை செயல்படுத்தும் சிஎஸ்கே' - ஹாட்ரிக் தோல்வி பற்றி அலசும் முன்னாள் வீரர்கள்
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
இந்த ஐபிஎல் சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 3 போட்டிகளிலும் தோற்று மோசமான தொடக்கம் கண்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது சிஎஸ்கே. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியை 250 ரன்கள் அடிக்க விட்டனர் சூப்பர் கிங்ஸ் பௌலர்கள்.
இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பெரிதாக சோபிக்கவில்லை. விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்தே 10 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தியிருக்கிறது சிஎஸ்கே.
பெங்களூருவில் நடந்த போட்டியில் பவர்பிளேவில் ஓரளவு நன்றாகப் பந்துவீசியிருந்தாலும், அதன்பிறகு அவர்களால் பெரிதாக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் சிஎஸ்கே பந்துவீச்சு மோசமாக இருந்தது. 16 முதல் 20 வரையிலான 5 ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்தது அந்த அணி.
சீசன் தொடங்குவதற்கு முன்பிருந்தே சிஎஸ்கே அணியின் டெத் பௌலிங் மீது நிறைய கேள்விகள் இருந்தன. 'டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்' பௌலர்கள் என்று யாரும் இல்லை என்ற விமர்சனங்கள் அதிகமாகவே எழுந்தன. அவர்களின் தடுமாற்றம் எதிர்பார்த்தது தான் என்றாலும், ஆர்சிபி ஆட்டத்தில் அவர்கள் பந்துவீசிய விதம் இன்னும் அதிகமான விமர்சனங்களையே பெற்றது.
சிஎஸ்கே-வின் முன்னாள் வீரர்கள் சிலர் அந்த அணி மாற்று திட்டமே இல்லாமல் ஒரே மாதிரி பந்துவீசியது என்பதை சுட்டிக்காட்டினார்கள். உலகின் மற்ற டி20 லீக்குகளில் ஆடும் சூப்பர் கிங்ஸ் குழுமத்தின் மற்ற நிறுவனங்களுமே அதே திட்டத்தைக் கடைபிடிப்பதாகவும், இதற்கு முன்பு அதை ஐபிஎல் தொடரில் மஹேந்திர சிங் தோனி பயன்படுத்த மறுத்ததாகவும் தெரிவித்தனர்.
அது என்ன திட்டம்? அது ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது? அதை தோனி மறுத்தது ஏன்? அலசுவோம்.
ஒரே மாதிரி பந்துவீசிய சிஎஸ்கே
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் 15 ஓவர்கள் முடிவில் 153/3 என்ற நிலையில் இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 5 ஓவர்களில் ஆர்சிபி பேட்டர்கள் சிக்ஸர் மழையாகப் பொழிந்தனர்.
- கலீல் அஹமது வீசிய 16வது ஓவரில்: 19 ரன்கள் - 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்
- நூர் அஹமது வீசிய 17வது ஓவரில்: 21 ரன்கள் - 3 சிக்ஸர்கள்
- அன்ஷுல் கம்போஜ் வீசிய 18வது ஓவரில்: 14 ரன்கள் - 1 பவுண்டரி, 1 சிக்ஸர்
- ஜேமி ஓவர்டன் வீசிய 19வது ஓவரில்: 30 ரன்கள் - 1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்
- அன்ஷுல் கம்போஜ் வீசிய 20வது ஓவரில்: 13 ரன்கள் - 1 பவுண்டரி, 1 சிக்ஸர்
இப்படியாக ரஜத் பட்டிதார், டிம் டேவிட் இருவரும் 4 பவுண்டரிகளும், 11 சிக்ஸர்களும் விளாசினார்கள்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் இதுபற்றிப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, "பவுண்டரி போன பிறகு அடுத்த பந்துகளை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் சரியாக வீசவில்லை. நல்ல டெத் பௌலர்கள் பவுண்டரிக்குப் பிறகான பந்தை சிறப்பாக வீசுவார்கள். அந்த இடத்தில் சிஎஸ்கே முன்னேற்றம் காணவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
டெத் ஓவர்களில் வீசிய அனுபவம் இல்லை என்பதைவிட, டி20 கிரிக்கெட்டில் பந்துவீசுவதற்குத் தேவையான அடிப்படையான விஷயங்களையுமே சிஎஸ்கே பௌலர்கள் செய்யத் தவறினார்கள்.
அனைத்து பௌலர்களும் பெரும்பாலான பந்துகளை 'ஸ்லாட்டில்' வீசினர். தொடர்ச்சியாக வேகமான பந்துகளையே வீசினார்கள். லென்த்திலேயோ, வேகத்திலேயோ அவர்கள் பெரிதாக மாற்றங்கள் செய்யவே இல்லை. போட்டியின்போது வர்ணனையில் இருந்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் முன்னாள் வீரர் ஃபாஃப் டுப்ளெஸி, சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சாளர்கள் ஸ்லோயர் பாலே வீசவில்லை என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
ஒருபக்கம் வேரியேஷன்கள் இல்லை என்ற பிரச்னை என்றால், இன்னொருபக்கம் ஒரே மாதிரியான பந்தைத் தொடர்ச்சியாக போட்டது ஒரு பிரச்னை.
இந்த ஓவர்களில் சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் 'அரௌண்ட் தி ஸ்டம்ப்' சென்று வைட் யார்க்கர்களாகப் பந்துவீசினார்கள். பட்டிதார் கவர் மற்றும் எக்ஸ்டிரா கவர் திசையில் தொடர்ச்சியாக அடித்தபோதும், டிம் டேவிட் சற்று உள்ளே நகர்ந்து லெக் சைட் அந்தப் பந்துகளை விளாசியபோதும் சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் தங்கள் திட்டத்தை மாற்றவே இல்லை. அவர்கள் தொடர்ச்சியாக அதையே செய்ய, ஆர்சிபி பேட்டர்கள் அதை அடித்தாட எளிதாக அமைந்துவிட்டது.
அனைத்து சூப்பர் கிங்ஸ் அணிகளிலும் அதே திட்டம்தான்
சூப்பர் கிங்ஸ் குழுமத்துக்கு மொத்தம் 3 அணிகள் இருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் போக, தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) அணியும், அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (டிஎஸ்கே) அணியும் அவர்களுடையது தான். இந்த அணிகளுக்கும் ஸ்டீஃபன் பிளெமிங் தான் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார். இந்த அணிகளிலும் இதே 'அரௌண்ட் தி ஸ்டம்ப் வைட் யார்க்கர்' திட்டம் செயல்படுத்தப்படுவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய கிரிக்கெட் அனலிஸ்ட் கௌரவ் சுந்தரராமன், "இந்தப் போட்டிக்கு முன்பாக ஜேமி ஓவர்டன் தன் கரியரிலேயே மொத்தம் 1.3 ஓவர்கள் தான் டெத் ஓவர்களில் அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து பந்துவீசியிருக்கிறார். அப்படி அதில் பழக்கம் இல்லாத ஒருவரை சின்னசாமி மைதானத்தில் டெத் ஓவர்களில் அப்படி வீசச் சொல்வது சிக்கலானது" என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், "இதை ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளிலும் கடந்த 2-3 ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்தி வருவதைப் பார்த்துவருகிறார். ஸ்பெஷலிஸ்ட் பௌலர்கள் அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து வைட் யார்க்கர்கள் வீசுவார்கள். அது ஆரம்பத்தில் அவர்களுக்குப் பலன் கொடுத்தது. ஆனால், போகப்போக பேட்டர்கள் அதற்குத் தயாராகிவிட்டார்கள்" என்று கூறினார்.
இதே விஷயத்தைப் பற்றி தன் யூ டியூப் சேனலில் விவாதித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திர அஷ்வின், சூப்பர் கிங்ஸின் யுக்தியை கடுமையாக சாடினார்.
"(ஜேஎஸ்கே அணிக்காக) வியான் முல்டர், அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து வைட் யார்க்கர் வீசுகிறார். நாந்த்ரே பர்கர், அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து வைட் யார்க்கர் வீசுகிறார். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸியை போட்டு வந்து அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து வைட் யார்க்கர் வீசுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸியைப் போட்டு வந்தும் அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து வைட் யார்க்கர்களையே வீசுகிறார்கள். அப்படி வீசுவது ஜேமி ஓவர்டன்! அனைத்து கேள்விக்கும் ஒரே பதிலா" என்று கேட்டார் அஷ்வின்.
தொடர்ந்து பேசிய அவர், "டிம் டேவிட் வந்தவுடன் (மிடில் ஓவர்களில்) 3 பந்துகள் வீசினார் ஓவர்டன். அதை டேவிட்டால் அடிக்க முடியவில்லை. ஓவர்டன் 2 ஓவர்களில் 12 ரன் கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். அவர் 'ஹார்ட் லென்த்தில்' வீசிய பந்துகள் டேவிட் பேட்டைத் தூக்குவதற்குள் வேகமாகச் சென்றன. அவரை ஏன் அரௌண்ட் தி ஸ்டம்ப் போடவைக்கிறீர்கள்?" என்றும் கேள்வியெழுப்பினார்.
'இந்தத் திட்டத்தை தோனி ஏற்கவில்லை'
சிஎஸ்கே-வின் இந்த 'அரௌண்ட் தி ஸ்டம்ப் வைட் யார்க்கர்' திட்டம் பற்றிய இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ விவாதத்தின்போது பேசிய அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, "இந்த திட்டம் சூப்பர் கிங்ஸின் பயிற்சிகளின்போதும் நிறைய பயிற்சி செய்யப்பட்டது. ஆனால், தோனி இதை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று கூறினார்.
பேட்டர்கள் அந்தப் பந்துகளின் கோணத்தை எளிதாகக் கணித்துவிடக்கூடும் என்பதால் தோனி அதை வேண்டாம் என்று சொன்னதாக ராயுடு குறிப்பிட்டார்.
"பயிற்சியின்போது பேட்டர்கள் நாங்களுமே அதை மிகவும் எளிதாகக் கையாண்டோம். கிரீஸில் ஒரு அரை அடி வெளியே தள்ளி நிற்கும்போது அந்த கோணத்தை நம்மால் எளிதாக சமாளித்துவிடமுடியும்" என்று கூறினார்.
ராயுடுவின் கருத்தை ஆமோதித்து அதே நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச், டிம் டேவிட் போன்ற உயரமான வீரர்கள், அந்தக் கோணத்தைக் கையாள்வது எளிதாக மாறிவிடும் என்று குறிப்பிட்டார். "டேவிட் உயரமாக இருப்பதாலும், அவர் கைகளால் நீண்ட தூரத்தை எட்ட முடியும் என்பதாலும் வைட் யார்க்கர்களை அவர்களால் தங்கள் வசதிக்கு ஏற்ப அடிக்க முடியும். எல்லா வீரர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் தீட்டுவதும் செல்லுபடியாகாது" என்று குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை போட்டியிலும் அதுதான் நடந்தது. 18வது ஓவர் முதல் பந்தை கம்போஜ் அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து வைட் யார்க்கராக வீச முயற்சித்தார். பந்து ஃபுல் டாஸாக சென்றாலும் மிகவும் வெளியே சென்றது. ஆனால், அதை நின்ற இடத்தில் இருந்தே எக்ஸ்டிரா கவர் திசையில் எளிதாக பவுண்டரியாக்கினார் டேவிட். அந்த ஓவரின் ஐந்தாவது பந்திலும் கம்போஜ் அதே மாதிரி தான் வீசினார். யார்க்கர் தவறி வைட் ஃபுல் டாஸாக மாறியது. இங்கே ராயுடு சொன்னதுபோல் சற்று ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்ந்திருந்த டேவிட் அந்தப் பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் ஆக்கினார். ஃபின்ச் சொன்னதுபோல் அவருடைய உயரம் அதை சாத்தியப்படுத்தியது.
அடுத்து ஓவர்டன் வீசிய 19வது ஓவரின் நான்காவது பந்தில் அதேதான் நடந்தது. இம்முறை பந்து ஃபுல் டாஸ் ஆகாமல் மாறாக சற்று முன்னர் பிட்ச் ஆனது. அதையும் அதேபோல் லாங் ஆன் திசையிலேயே சிக்ஸராக்கினார் டேவிட். அடுத்த பந்திலும் அதேதான்... பந்து யார்க்கர் லென்த்தில் இருந்தும் தவறியது, லைனும் ரொம்ப வெளியே செல்லத் தவறியது. ஆனால், டேவிட்டின் அடி தவறவில்லை. மீண்டும் ஒரு சிக்ஸர்.
இதையே பட்டிதார் இன்னும் சற்றே நளினமாகச் செய்தார். கடைசி ஓவரின் முதல் பந்து... கம்போஜ் வைட் யார்க்கரை மிகச் சரியாக அரங்கேற்றினார். ஆனால் அதை எதிர்பார்த்து காத்திருந்த பட்டிதார், தன் மணிக்கட்டை சிறப்பாகச் சுழற்றி டீப் பாயின்ட் திசையில் சிக்ஸராக்கினார்.
சூப்பர் கிங்ஸுக்கு டெத் ஓவர்களில் இருக்கும் பிரச்னை இதுதான்: அனைத்து விதமான பேட்டர்களுக்கும் ஒரேயொரு திட்டம் வைத்திருக்கிறார்கள்; பேட்டர்கள் அதை எதிர்பார்த்து காத்திருக்கும் போதும் அந்தத் திட்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்; டெத் ஓவர்களில் அனுபவம் இல்லாத பௌலர்களையும் அதையே செய்யவைக்கிறார்கள்.
வீரர்களின் பலமே அணியின் பலம்
முன்பெல்லாம் டெத் ஓவர் என்பது சூப்பர் கிங்ஸின் வேட்டைக்களமாக இருந்தது. டுவைன் பிராவோ, மதீஷா பதிரானா போன்ற வீரர்கள் இந்த இடங்களில் சோபித்துள்ளனர். சோபித்தது மட்டுமல்ல, சூப்பர் கிங்ஸ் கோப்பை வெல்வதற்கும் காரணமாக அமைந்திருக்கிறார்கள். பிராவோ ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த டெத் பௌலர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர்.
இந்த பௌலர்கள் டெத் ஓவர்களில் சோபித்ததற்குக் காரணம் அவர்களிடம் இருந்த துல்லியம் மற்றும் வேரியேஷன்கள். பிராவோ தன் வேகத்திலேயே பெரும் மாற்றம் காட்டுவார். அதேசமயம், ஒருசில போட்டிகளில் வெறுமனே ஸ்லோயர் பந்துகளை மட்டுமே பயன்படுத்தினாலும் தன் லென்த் மற்றும் லைனை தொடர்ச்சியாக மாற்றி பேட்டர்களை ஏமாற்றுவார். ஏதோவொரு வகையில் அவர் தன் பந்துகளை மாற்றங்களைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
பதிரானா யார்க்கர்கள், பௌன்சர்கள் இரண்டையும் தன் ஆயுதமாகக் கையாண்டார். 2023 சீசனில் அவரை எதிர்கொள்ள பேட்டர்கள் பெருமளவு தடுமாறினார்கள். ஆனால், அப்போதும்கூட ஒருசில வல்லுநர்கள் பதிரானா தன் வேகத்திலும் வெரியேஷன் காட்டவேண்டும் என்றும், அப்போதுதான் அவரால் மலிங்கா போல ஒரு முழுமையான ஆயுதமாக மாறமுடியும் என்றும் கூறினார்கள்.
அப்படி டெத் ஸ்பெஷலிஸ்ட்கள் இருந்த அணி இன்று மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரியாக பந்துவீசிக் கொண்டிருக்கிறது.
முன்னாள் வீரர்களும் வல்லுநர்களும் சொல்வதுபோல் சூப்பர் கிங்ஸ் இந்தத் திட்டத்தை நிச்சயம் மாற்றவேண்டும். பேட்டர்கள் இதை கணித்துவிட்டார்கள். அதற்கு தாங்களும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். அதனால், இனி டெத் ஓவர்களில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமெனில் சூப்பர் கிங்ஸ் தங்கள் திட்டத்திலிருந்து மாறவேண்டும்.
டெத் ஸ்பெஷலிஸ்ட்கள் இல்லாவிட்டாலும், அந்த இடத்தில் பந்துவீசும் பௌலர்கள் தங்கள் பலம் என்னவோ அதற்கு ஏற்ப பந்துவீசும்போது நிச்சயம் அவர்களால் சோபிக்க முடியும்.
உதாரணமாக அஷ்வின் சொன்ன விஷயத்தையே எடுத்துக்கொள்ளலாம். 15வது ஓவரில் களமிறங்கிய டிம் டேவிட், ஓவர்டன் பந்துவீச்சில் ரன் எடுக்க சற்றுத் தடுமாறவே செய்தார். மணிக்கு சுமார் 145-150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிக்கொண்டிருந்த ஓவர்டன், சரியான லென்த்தில் பிட்ச் செய்து டேவிட்டுக்கு சவால் கொடுத்தார். அந்த ஓவரில் 4 பந்துகளை சந்தித்த டேவிட் எடுத்தது 1 ரன் மட்டுமே.
ஆனால், டெத் ஓவரில் அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து யார்க்கர் வீச முயன்ற ஓவர்டனுக்கு எதிராக 6 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார் டேவிட். வித்தியாசம் இதுதான்.
அதேபோல் அன்ஷுல் கம்போஜ் கூட கடைசி கட்டத்தில் வீசிய 2 ஓவர்களை ஓரளவு நன்றாகவே வீசினார். அவர் யார்க்கர்களை ஸ்டம்ப் லைனிலோ, நான்காவது ஸ்டம்ப் லைனிலோ முயற்சி செய்யும்போது அது சரியாக விழுந்தது. அப்படியொரு பந்தில் தான் அவர் டிம் டேவிட்டை போல்டாக்கினார். ஆனால், அது நோ பாலாக முடிந்தது. அதேசமயம் வைட் யார்க்கர் முயற்சி செய்தபோது பெரும்பாலான பந்துகள் யார்க்கர்களாகவும் மாறின. சரியாக வீசப்பட்ட ஒரு வைட் யார்க்கரும் கூட சிக்ஸரானது.
பௌலர்கள் தங்கள் பலத்துக்கு ஆடும்போது ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்கள். பிரச்னை பெரிதானது சூப்பர் கிங்ஸின் அந்த மாறாத திட்டத்தால்தான் என்று அம்பத்தி ராயுடு, அஸ்வின் போன்ற முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு