You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவண்ணாமலை மலை உச்சிக்கு சென்றது ஏன்? ரீல்ஸ் சர்ச்சை, அபராதம் பற்றி சீரியல் நடிகை அர்ச்சனா விளக்கம்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"மலை உச்சிக்கு செல்வது குறித்து முன்கூட்டியே என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை. அது தடை செய்யப்பட்ட பகுதி எனத் தெரிந்திருந்தால் ஏறியிருக்க மாட்டேன். இது தற்செயலாக நடந்த தவறு தான்" என்கிறார் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்.
திருவண்ணாமலை மலை உச்சிக்கு வனத்துறை தடையை மீறி சென்றது தொடர்பான சர்ச்சை காணொளி குறித்து பேசிய போது இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
தடையை மீறிய குற்றத்துக்காக நடிகை அர்ச்சனா, அவருடன் பயணித்த அருண் பிரசாத் ஆகியோருக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தை வனத்துறை விதித்துள்ளது.
மலையேற்ற சர்ச்சை குறித்து அர்ச்சனா ரவிச்சந்திரன் கூறுவது என்ன? பாதுகாப்பாக மலையேறுவதற்கான வழிகள் என்ன?
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சூழ்ந்துள்ள மலையானது சுமார் 2,600 அடி உயரமும் 14 கி.மீ சுற்றளவும் கொண்டதாக உள்ளது.
ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இங்கு பக்தர்கள் கிரிவலம் வருவது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 26 ஆம் தேதி மலையின் உச்சியில் வனத்துறையின் தடையை மீறி நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் சென்றதாக சர்ச்சை எழுந்தது.
இவர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி மலை உச்சியில் ஏறும் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா ரவிச்சந்திரன் பதிவிட்டிருந்தார்.
'தடையை மீறி மலையேற்றம்'
அதில், அவருடன் அருண் பிரசாத் என்பவரும் மலையின் உச்சிக்கு சென்று வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் காணொளி இணையத்தில் வேகமாக பரவியது.
வனத்துறையின் தடையை மீறி இவ்வாறு மலையேற்றப் பயணம் மேற்கொண்டதாக, திருவண்ணாமலை மாவட்ட வனத்துறைக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் பொதுமக்களில் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பிரசாத் ஆகியோரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முடிவில் இருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
மலையேற்றம் தொடர்பான சர்ச்சைக்கு ஜனவரி 29 ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை அர்ச்சனா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
அதில், 'பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களுக்காக மலையின் சில பகுதிகளில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
'அங்கு எந்த அறிவிப்பு பலகையும் என்னுடைய கண்ணில் தென்படவில்லை.' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தற்செயலாக நேர்ந்த தவறாக இருந்தாலும் முக்கியமான பாடமாக இருந்ததாகக் கூறியுள்ள அர்ச்சனா ரவிச்சந்திரன், 'துணிச்சலுக்கு எல்லை தேவை. இனிமேல் விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.
'ரீல்ஸ் வெளியிட்ட பிறகே தெரியும்' - அர்ச்சனா
பிபிசி தமிழிடம் பேசிய அர்ச்சனா, "என்னுடைய ரீல்ஸ் வெளியே வந்த பிறகு தான் மலையேறுவதற்கு தடை என்ற ஒன்று இருப்பதே தெரியவந்தது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் வரை மலையின் மீது நாங்கள் ஏறியது குறித்து யாரும் எதுவும் கூறவில்லை" என்கிறார்.
திருவண்ணாமலை மலையின் உச்சிக்கு சென்றது தொடர்பான மேலதிக தகவல்களை அவர் விவரித்தார். "ஜனவரி 26 ஆம் தேதி ரமணாஸ்ரமம் சென்றோம். அது மூடப்பட்டிருந்தது. 'மீண்டும் திறப்பதற்கு 45 நிமிடங்கள் ஆகும்' என அங்கிருந்தவர்கள் கூறினர்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "உள்ளூர் மக்களிடம் பேசியபோது, அக்னி லிங்கம் அருகில் உள்ள படிக்கட்டுகள் வழியாக கந்தாஸ்ரமம் செல்லலாம் எனக் கூறினர். அவர்கள் கூறியதாலேயே அந்த வழியாக சென்றோம். கந்தாஸ்ரமம் சென்றுவிட்டு கீழே இறங்குவது என முடிவு செய்தோம்" எனக் கூறுகிறார்.
'இருட்டியதால் பயம் ஏற்பட்டது'
மலையின் உச்சிக்கு செல்வதற்கு சுமார் மூன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டதாகக் கூறும் அர்ச்சனா ரவிச்சந்திரன், "மலையில் இருந்து இறங்கும்போது இருட்டிவிட்டதால் சற்று பயம் ஏற்பட்டது" என்கிறார்.
"அது தடை செய்யப்பட்ட பகுதி எனத் தெரிந்திருந்தால் மலையின் மீது ஏறியிருக்க மாட்டேன்" எனக் கூறும் அவர், "அவ்வளவு பொறுப்பற்ற நபராக நாங்கள் இல்லை. இதுதொடர்பான செய்தி பரவியதால் வனத்துறை அதிகாரிகளை நாங்களே நேரில் சென்று சந்தித்தோம்" என்கிறார்.
இது தற்செயலாக நேர்ந்த தவறு என்பதை வனத்துறை அதிகாரிகள் புரிந்து கொண்டதாகவும் அர்ச்சனா ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
'ரீல்ஸ் எடுப்பதற்காக செல்லவில்லை'
"ஆனால், 'மலையின் உச்சிக்கு ரீல்ஸ் எடுப்பதற்காக நாங்கள் சென்றோம்' என சிலர் கமென்ட் செய்வதைப் பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. திருவண்ணாமலை மலை உச்சியில் ஏறுவது தொடர்பாக யூடியூபில் ஏராளமான காணொளிகள் உள்ளன" என்கிறார் அவர்.
தடையை மீறி வனப்பகுதிக்குள் சென்றதற்காக நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பிரசாத் ஆகியோருக்கு தமிழ்நாடு வனத்துறை சட்டப்படி தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையை செலுத்திவிட்டதாக பிபிசி தமிழிடம் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் கூறினார்.
"தமிழ்நாடு வனச்சட்டம் பிரிவு 21ன்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் ஒருவர் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சென்றால் வனச் சட்டத்தின்படி தண்டிக்கப்படும் குற்றமாக பார்க்கப்படுகிறது" எனக் கூறுகிறார், வனத்துறை உயர் அதிகாரி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "வனப்பகுதிக்குள் கோவில் அமைந்திருந்தால் அங்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்டிருந்தால் உள்ளே நுழையக் கூடாது" என்கிறார்.
வன உயிரினங்கள் வசிக்கும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் இந்திய வனஉயிரின சட்டத்தின்படி தண்டிக்கக் கூடிய குற்றமாக பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"அதையும் மீறி உள்ளே வீடியோ, புகைப்படம் எடுத்து வெளியிடுவதன் மூலம் தானாக முன்வந்து வனத்துறைக்கு ஆதாரம் கொடுப்பதாகவே பார்க்கப்படும்" எனக் கூறும் அவர், "இதுபோன்ற செயல்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது" என்கிறார்.
மலையேற்றத்துக்கு உதவும் 'ட்ரெக் தமிழ்நாடு'
தமிழ்நாட்டில் பாதுகாப்பாக மலையேற்றம் செல்வதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வனத்துறையின் 'ட்ரெக் தமிழ்நாடு' திட்டம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வன அனுபவக் கழகத்தில் (Tamil Nadu Wilderness Experiences Corporation) சூழல் சுற்றுலாவின் ஓர் அங்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
"திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை மலையேற்றம் செல்வதற்கு 35 வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம். அதில் விருப்பப்படும் இடத்தை பொதுமக்கள் தேர்வு செய்து பயணிக்கலாம்" எனக் கூறுகிறார், 'ட்ரெக் தமிழ்நாடு' திட்ட அலுவலர் சந்திரகாந்த்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மலையேற்றம் செல்வதற்கு ஒருவர் விரும்பினால் முந்தைய நாள் மாலை நான்கு மணிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்" என்கிறார் அவர்.
'ட்ரெக் தமிழ்நாடு' இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது பயண தொலைவு, மலையின் உயரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. "இதனைப் பார்க்கும்போதே ஒருவரால் மலையேற முடியுமா என்பது தெரிந்துவிடும்" எனக் கூறுகிறார் சந்திரகாந்த்.
மலையேற்றம் செல்வதற்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "ஆன்லைனில் பதிவு செய்யும்போது மலையேறும் நபர்களுக்கு காப்பீடு வசதி செய்து தரப்படுகிறது" என்கிறார் அவர்.
மலையேற்றம் செல்வதற்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டால், தொடர்புடைய மாவட்ட வனஅலுவலரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. 'அந்த இடம் மலையேற்றத்துக்கு தகுதியானதாக உள்ளதா?' என அவர் சான்று கொடுத்த பிறகு தலைமை வனப் பாதுகாவலரின் ஒப்புதல் பெறப்படுகிறது.
கவனிக்க வேண்டியது என்ன?
அவ்வாறு ஒருவருக்கு அனுமதி கொடுத்தாலும் மலையேற்றத்துக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை 'ட்ரெக் தமிழ்நாடு' விதித்துள்ளது. அதனை பிபிசி தமிழிடம் அதன் திட்ட அலுவலர் சந்திரகாந்த் பட்டியலிட்டார்.
- மலையேறும் நபர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்
- வாசனை திரவியங்களைப் பயன்படுத்தக் கூடாது
- அடர் நிறத்தில் ஆடைகள் அணியக் கூடாது
- காலநிலைக்கு ஏற்ப ஆடைகளைக் கொண்டு வரவேண்டும்
- மது, சிகரெட் போன்ற போதைப் பொருள்களைக் கொண்டு வருவதற்கு தடை
- எளிதில் எரியும் பொருட்களுக்கு அனுமதி இல்லை
- குடிநீர் கொண்டு வரவேண்டும்
- காட்டில் உள்ள செடி, இலைகளைப் பறிக்கக் கூடாது
- வனஉயிரினங்களுக்கு உணவளிக்கக் கூடாது
- பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
"மலையேற்றத்தில் உதவும் பணியில் அங்குள்ள பழங்குடி மக்களைப் ஈடுபடுத்துகிறோம். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கூறும் வழியில் தான் சென்று வரவேண்டும்" எனக் கூறும் சந்திரகாந்த், "இதனை மீறும் நபர்கள் மீது வனத்துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு