You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 உலகக் கோப்பை: "இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம்" என பாகிஸ்தான் அறிவிப்பு
பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது.
இதனிடையே பாகிஸ்தான் அரசு விடுத்துள்ள செய்தி ஒன்றில், "பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்ட போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமிறங்காது" என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடாமல் இருக்க பரிசீலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் இந்த அறிக்கை அதனை உறுதி செய்துள்ளது.
கடந்த வாரம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உடனான சந்திப்புக்குப் பிறகு, "அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தீர்வு காண பிரதமர் உத்தரவிட்டுள்ளார்" என்று கூறினார்.
வங்கதேசத்தை ஆதரித்த பாகிஸ்தான்
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டது, இதனால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து தொடரில் சேர்க்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி ஐசிசியின் முடிவை "தவறானது" என்று கூறி அதை இரட்டை நிலைப்பாடு என்று விவரித்தார்.
"வேறு எந்த நாட்டைப் போலவே வங்கதேசத்துக்கும் அதே விதிகள் பொருந்தும். பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாடு வேறொரு நாட்டில் விளையாட மறுத்தால், வங்கதேசத்துக்கும் அந்த உரிமை இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இந்த சூழ்நிலையில், "வங்கதேசம் நியாயமாக நடத்தப்படாவிட்டால், உலகக் கோப்பைக்காக இலங்கைக்கு அணியை அனுப்புவது குறித்து அரசாங்கம் (பாகிஸ்தான்) இப்போது முடிவு செய்யும். ஐசிசி விரும்பினால் 22வது அணியைச் சேர்க்கலாம்" என்று அவர் கூறினார்.
'இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்தால்'
பாகிஸ்தானின் அறிவிப்பைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ஏராளமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"பாகிஸ்தான் உலகக் கோப்பைக்குச் சென்றாலும் இந்தியாவுடன் விளையாடவில்லை என்றால், ICC-யின் எதிர்வினையைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சட்ட நிலைமை எனக்குத் தெரியாது, கடந்த கால முன்னுதாரணங்களின் அடிப்படையில் இந்த விஷயம் எவ்வாறு கையாளப்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒளிபரப்பாளரின் வருவாய் இழப்பை பாகிஸ்தானின் ஐசிசி வருவாய்ப் பங்கிலிருந்து ஈடு செய்யக் கேட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இறுதிப் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டியாக இருந்தால் என்ன செய்வது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் அரசு முடிவை அறிவித்ததது ஏன்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அறிவிப்பதற்கு முன்பாக பாகிஸ்தான் அரசு இந்த முடிவை வெளியிட்டது ஏன் என மூத்த விளையாட்டு செய்தியாளர் ஜிஎஸ் விவேக் கேள்வி எழுப்பியுள்ளார்.
"1996-இல் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் செய்ததைப் போலவும் 2003-இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து செய்ததைப் போலவும் பகுதியளவு புறக்கணிப்புகளை இதற்கு முன்பாக ஐசிசி அனுமதித்துள்ளது," என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு முடிவை அறிவித்ததற்கான காரணத்தை விளக்கிய அவர், "கடந்த காலங்களில் அந்த நான்கு அணிகளும் அவர்களின் வருவாய் பகிர்வைப் பெற்றுள்ளன. அந்தந்த நாட்டு அரசுகளின் உத்தரவின் பேரில் அந்த முடிவு எடுக்கப்பட்டதால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. அதனால் தான் அரசு உத்தரவுக்குப் பின்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறைந்து கொள்ளலாம் என்பதற்காக பிசிபிக்கு முன்பாக பாகிஸ்தான் அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலின்படி, இந்தியாவும் - பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மட்டுமே விளையாட முடியும். ஆனால் அதுவும் கடினமாகவே தெரிகிறது." என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவால் பாகிஸ்தான் அரசும் கிரிக்கெட் வாரியமும் தங்களின் கிரிக்கெட்டை அழிக்கிறார்கள் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு