'மீன்களை கையில் ஏந்தியபடி பிரசாரம்' – மேற்கு வங்க தேர்தலில் மீன் முக்கிய இடம் பெற்றது ஏன்?

 மீனை அடையாளச் சின்னமாக வைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.
படக்குறிப்பு, கொல்கத்தாவில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீனை அடையாளச் சின்னமாக வைத்து பிரசாரம் செய்கின்றனர்.
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்தியச் செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கொல்கத்தாவில் ஒரு காலைப் பொழுதில் கௌஸ்தவ் பாக்சி கையில் மீனுடன் வீடு வீடாகச் செல்கிறார்.

அவருக்குப் பின்னால் மேளங்கள் அதிர, ஆதரவாளர்கள் அவரது பெயரை முழங்குகின்றனர். வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாக்சி, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பாரக்பூர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

வாக்காளர்களைக் கவரும் ஒரு கருவியாக அவர் இந்த மீனைப் பயன்படுத்துகிறார். கொள்கைகளைப் பற்றிய உரைகள் எதுவும் அங்கு இல்லை. "நான் உங்களில் ஒருவன்" என்பதை உணர்த்தும் ஒரு காட்சி அடையாளம் மட்டுமே அங்கு உள்ளது.

சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தாவின் துறைமுகப் பகுதியில், மற்றொரு பாஜக வேட்பாளரான ராகேஷ் சிங் இதே போன்ற ஒரு காட்சியினை அரங்கேற்றுகிறார்.

கட்சித் தொண்டர்கள் புடைசூழ வரும் அவர், அதிகாலைக் கூட்டத்தின் வழியே செல்லும்போது மீனை உயர்த்திப் பிடிக்கிறார். கொல்கத்தா மேயர் பிர்ஹாத் ஹக்கீமை அவர் எதிர்கொள்கிறார்.

வங்கத்தில் மீன் என்பது வெறும் உணவு மட்டுமல்ல. அது அந்தப் பகுதி சமையலின் உயிர்நாடி.

நினைவுகள், சடங்குகள் மற்றும் அன்றாட வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டு, அடையாள சின்னமாகவும் மீன் விளங்குகிறது.

மேற்கு வங்கம் முழுவதும், அந்த உணர்வுப்பூர்வமான தொடர்பு இப்போது ஓர் அரசியல் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அச்சத்தைப் போக்குவதற்காக வேட்பாளர்கள் மீன்களை ஏந்திச் செல்கின்றனர்.

உணவுப் பழக்கவழக்கங்கள், ஆழ்ந்த அரசியல் தன்மை கொண்டிருக்கக்கூடிய ஒரு நாட்டில், பாஜக பெரும்பாலும் சைவ உணவுப் பழக்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

இந்தியா பெருமளவில் அசைவ உணவைப் பின்பற்றும் நாடாக இருந்தபோதிலும், பாஜக ஆளும் சில மாநிலங்களில் அவ்வப்போது இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், பசு பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் அந்த எண்ணத்தை வலுப்படுத்த உதவியுள்ளன.

இந்த மேற்கு வங்கத் தேர்தலில், மீன் தட்டிலிருந்து நழுவி பிரசாரத்தின் மையப்பகுதிக்கு வந்துள்ளது. இது கலாசார பற்றுறுதியின் சான்றாகவும், உணவு வழக்கத்தில் வெளி ஆட்கள் தலையிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கான மறுப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பாஜகவின் ராகேஷ் சிங்
படக்குறிப்பு, பாஜகவின் ராகேஷ் சிங் தனது பிரச்சாரத்தின் போது ஒரு மீனை உயர்த்திக் காட்டுகிறார்.

மீன் எப்படி விவாதமானது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தொடர்ந்து நான்காவது முறையாகப் ஆட்சியை பிடிக்க போட்டியிடும் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மமதா பானர்ஜி, பிரதான எதிர்க்கட்சியான பாஜக "வங்கத்தின் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலாக" இருப்பதாக எச்சரித்துள்ளார்.

மேலும், மீன் மற்றும் அரிசி ஆகியவற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"பாஜக உங்களை மீன் சாப்பிட அனுமதிக்காது. அதேபோல் அவர்கள் உங்களை இறைச்சி அல்லது முட்டை சாப்பிடவும் அனுமதிக்க மாட்டார்கள்" என்று அவர் சமீபத்தில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறினார்.

மற்றொரு கூட்டத்தில் பேசிய 71 வயதான மமதா பானர்ஜி, "வங்க மக்கள் மீனையும் அரிசியையும் நம்பியே வாழ்கிறார்கள். நீங்கள் வங்க மக்களிடம் உங்களால் மீன் சாப்பிட முடியாது, இறைச்சி சாப்பிட முடியாது, முட்டை சாப்பிட முடியாது என்று சொல்கிறீர்கள். பிறகு அவர்கள் எதைத்தான் உண்பார்கள்?"என்று பாஜகவைச் சாடினார்.

இந்தக் குற்றச்சாட்டை முறியடிக்கும் அதே வேளையில், பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக செயல்பட தொடங்கியது

வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் ஸ்மிருதி இரானி, இந்தக் கூற்று "ஒரு பொய்" என்று கூறியதோடு, "வங்கமும், மீன் மற்றும் சோறும் அதன் கலாசாரத்தின் ஒரு பகுதி. அது ஒருபோதும் முடிவுக்கு வராது" என்று வலியுறுத்தினார்.

கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியின் அக்கட்சி வேட்பாளரான ஸ்வபன் தாஸ்குப்தா, பானர்ஜியின் குற்றச்சாட்டு கவனத்தைத் திசைதிருப்பும் செயல் என்றார்.

"நாங்கள் மீன் நுகர்வைத் தடை செய்வோம் என்ற இந்தப் பொய்யான கதையைக் கூறி, தங்களின் ஊழலில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அவர்கள் முயல்கின்றனர். இது முட்டாள்தனமானது"என்றார் ஸ்வபன் தாஸ்குப்தா.

தேர்தல் பிரசார பயணத்தில், பிரதமர் மோதியே மீனை ஓர் அரசியல் பேசுபொருளாக மாற்றியுள்ளார். அதனை நிர்வாகத் தோல்வியின் அடையாளமாக அவர் முன்வைக்கிறார்.

சைவ உணவுப் பழக்கம் கொண்ட அவர், வங்கத்தை மீன் உற்பத்தியில் சுயசார்புடையதாக மாற்றுவதில் பானர்ஜியின் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

"15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், மீன் போன்ற ஒரு அடிப்படை விஷயத்தைக் கூட உங்களுக்கு வழங்க திரிணாமுல் காங்கிரஸ் தவறிவிட்டது. மீனைக்கூட மாநிலத்திற்கு வெளியிலிருந்துதான் கொண்டு வர வேண்டியுள்ளது" என்று மோதி கூறினார்.

இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த பானர்ஜி, வங்கத்தின் மீன் தேவையில் 80% மேற்கு வங்கத்தாலே பூர்த்தி செய்யப்படுவதாகக் கூறினார்.

"நீங்கள் [பாஜக] ஆட்சி செய்யும் பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மீன் நுகர்வை அனுமதிப்பதில்லை. டெல்லியில் மீன் கடைகள் மீது தாக்குதல்களை நடத்துகிறீர்கள்."என்று பானர்ஜி ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

கலாசாரப் பதற்றம் மற்றும் பொருளாதார விமர்சனங்களுக்கு இடையே, மீன் ஒரு பிரதான உணவு என்பதைத் தாண்டி ஒரு விஷயமாக மாறியுள்ளது.

எதிர்தரப்பினர் எதையெல்லாம் ஆபத்தில் இருப்பதாகக் கூறுகிறார்களோ, அவற்றுக்கான ஒரு சுருக்க அடையாளமாகவே மீன் இப்போது பார்க்கப்படுகிறது.

 பாஜக தொண்டர்கள்.
படக்குறிப்பு, மேற்கு வங்கத்தில் மீன்களுடன் பிரச்சாரம் செய்யும் பாஜக தொண்டர்கள்.

மக்களின் அடையாளம்

இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளராகவும், மீன் வளர்ப்பில் இரண்டாவது இடத்திலும் இருந்தபோதிலும், தனிநபர் மீன் நுகர்வில் உலகளவில் 129-வது இடத்தில்தான் உள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில், மீன் என்பது வெறும் உணவு மட்டுமல்ல. அது அனைவருக்குமான ஒன்றாக இருக்கிறது.

ஐசிஏஆர் மற்றும் வேர்ல்ட்ஃபிஷ் இணைந்து 2024-ல் நடத்திய ஆய்வில், மேற்கு வங்கத்தில் சுமார் 65.7% மக்கள் வாரந்தோறும் மீன் சாப்பிடுவது கண்டறியப்பட்டது. 90%-க்கும் அதிகமான மக்கள் மீன் சாப்பிடும் கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் வரிசையில் மேற்கு வங்கமும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் நுகர்வு படிப்படியாக அதிகரித்து, இப்போது மக்கள் தொகையில் 70%-க்கும் அதிகமானோரை எட்டியுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வங்கத்தில், மீன் எப்போதும் உணவுத்தட்டைத் தாண்டிய பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது, அதன் அரசியல் நுழைவு தவிர்க்க முடியாத ஒன்றாகவே உணரப்படுகிறது.

மாணிக் பந்தோபாத்யாய் தனது புகழ்பெற்ற வங்க நாவலான 'பத்மா நதிர் மாஜியில்' (பத்மா நதியின் படகோட்டி), மீனை ஒரு அமைதியற்ற நதியின் ஓரத்தில் மக்களின் விதி மற்றும் உயிர்வாழ்வின் அடையாளமாக சித்தரிக்கிறார்.

நாவலாசிரியர் அமிதவ் கோஷ் தனது 'தி ஹங்ரி டைட்' நாவலில், வங்காள விரிகுடாவில் உள்ள சுந்தரவன டெல்டா பகுதியின் சூழலியல் மற்றும் பாதுகாப்பற்ற தன்மையுடன் அதனைப் பிணைக்கிறார்.

சமந்த் சுப்ரமணியன் தனது 'ஃபாலோயிங் ஃபிஷ்' புத்தகத்தில், 'ஹில்சா' மீன் பற்றி எழுதும்போது, "வங்க சமையல் ஒரு விம்பிள்டன் போட்டியாக இருந்தால், ஹில்சா எப்போதும் அதன் மைய ஆடுகளத்தில் விளையாடும்" என்று குறிப்பிடுகிறார்.

அதைச் சரியாக உண்பது, அதாவது வாய்க்குள் அதன் முட்களை லாவகமாக நீக்குவது என்பது ஒருவரது கலாசார அடையாளத்தை வெளிப்படுத்தும் சடங்கு போன்றது என்று அவர் கூறுகிறார்.

வங்கத்தில், மீன் என்பது உணவையும் தாண்டிய பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

இது நிலவியல் (கங்கை நதி மற்றும் பத்மா நதி போன்ற நதி அமைப்புகள்), வரலாறு (கிழக்கு மற்றும் மேற்கு வங்கத்தைப் பிரித்த இந்தியப் பிரிவினையின் தாக்கம்) மற்றும் வர்க்கம் - அதாவது யாரால் விலையுயர்ந்த வகைகளை வாங்க முடிகிறது, யார் அவற்றைச் சமைக்கிறார்கள் மற்றும் அதைச் செய்வதற்கான கலாசார அறிவு யாரிடம் உள்ளது ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது.

வங்கத்தின் மிகக் கடுமையான கால்பந்துப் போட்டிப் பகைமையிலும் மீன் கலந்திருக்கிறது. இப்போது வங்கதேசமாக உள்ள பகுதியிலிருந்து வந்த பல 'ஈஸ்ட் பெங்கால் எஃப்சி' ரசிகர்கள் வழக்கமாக ஹில்சா மீனை விரும்புபவர்களாகக் கருதப்படுகின்றனர்.

அதேசமயம் 'மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட்' ஆதரவாளர்கள் இறாலை விரும்புவதாகக் கூறப்படுகிறது. இது, இடம்பெயர்வு, வர்க்கம் மற்றும் சுவை ஆகியவற்றின் ஆழமான வரலாற்றைக் குறிக்கும் அடையாளமாகும்.

வங்காளத்தில், மீன் என்பது உணவையும் தாண்டிய பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, மேற்கு வங்கத்தில் சுமார் 65.7% மக்கள் வாரந்தோறும் மீன் உட்கொள்கின்றனர்.

அரசியல் கட்சிகள் அதை வெறும் பேச்சளவில் மட்டும் பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல், எதிரிகளைச் சிக்க வைப்பதற்காகத் தங்கள் தேர்தல் பிரச்சார வியூகத்தோடு அதனை இணைத்துக் கொள்கின்றன.

மீன் என்பது "வங்க சமையலில் இருந்து பிரிக்க முடியாதது, இது நிலவியல் அமைப்பாலும், மலிவான புரத ஆதாரமாக அதன் நீண்டகால பங்களிப்பாலும் வடிவமைக்கப்பட்டது" என்கிறார் வரலாற்றாசிரியர் ஜெயந்தா சென்குப்தா.

"பாஜக சில நேரங்களில் சைவ உணவு முறைகளை நோக்கிய உந்துதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதால், வங்கத்தின் ஆளும் கட்சி உணவை ஒரு விரிவான கலாசார பெருமையாக மாற்றியுள்ளது" என்று சென்குப்தா கூறுகிறார்.

"மீனின் அடையாள முக்கியத்துவத்தை அறிந்திருப்பதால், பாஜகவால் இந்த விவகாரத்தை புறக்கணிக்க முடியவில்லை. வங்கத்தின் விருப்பமான உணவுகளில் ஒன்றைக் கொண்டு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தேர்தல் பிரசாரம் செய்வதை நாம் இப்படித்தான் பார்க்கிறோம்."

கடந்த வாரம், பாஜக மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள செய்தியாளர்களுக்கு மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று ஒரு அழைப்பை விடுத்தார். அன்று பொரித்த மீனுடன் கட்சி அவர்களை வரவேற்கும் என்று அவர் கூறினார்.

மற்றொரு நேர்காணலில், அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக, பானர்ஜியின் வீட்டிற்கு "பல்வேறு வகையான சிறிய மீன்களை" அனுப்பும் என்றும், அவருடைய கட்சித் தொண்டர்களை மீன் மற்றும் சோறு சாப்பிட அழைக்கும் என்றும் பட்டாச்சார்யா கூறினார்.

இந்த நகைச்சுவை ஒரு மறைமுகமான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது பாஜக விருந்தளிக்கும் நிலையில் இருக்கும், அதன் போட்டியாளர்களோ அந்த அழைப்பை ஏற்கும் நிலையில் இருப்பார்கள் என்பதே அந்த கருத்து.

அடையாளம், வாழ்வாதாரம் மற்றும் கணிசமான அளவு விளையாட்டுத்தனமான சீண்டல்கள் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட இந்தத் தேர்தலில், மீன் மட்டுமே முடிவைத் தீர்மானிக்காமல் போகலாம். ஆனால் அது ஏற்கனவே போட்டியை வரையறுத்துவிட்டது.

பிரச்சாரக் களத்தில் கலாசாரமும் அரசியலும் எவ்வளவு இயல்பாக ஒன்றோடொன்று கலக்கின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது.

கூடுதல் தகவல்கள் : கொல்கத்தாவில் இருந்து ஸ்நிக்தேந்து பட்டாச்சார்யா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு