சர்க்கரையே சாப்பிடாமல் 6 வாரம் இருந்தால் எத்தகைய மாற்றம் ஏற்படும்?

பட மூலாதாரம், BBC/ Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் உணவுமுறை வழிகாட்டுதல்கள், உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் சேர்க்கப்படும் சர்க்கரையை 12 தேக்கரண்டிக்கும் குறைவாக (சுமார் 50 கிராம்) உட்கொள்ளப் பரிந்துரைக்கின்றன.
    • எழுதியவர், மெலிசா ஹோகன்பூம்
    • பதவி,
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. நாம் எதிர்பாராத சில இடங்களிலும்கூட உள்ளன.

அப்படிப்பட்ட நிலையில், சர்க்கரை இல்லாமல் இருப்பது எளிதானதா? அது உங்கள் ஆரோக்கியத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்?

நான் பொதுவாக வீட்டில் சமைக்கப்பட்ட சத்தான உணவுகளையே சாப்பிட்டாலும், எனக்கு இனிப்புப் பண்டங்கள் மீது அதிக விருப்பம் உண்டு. அதனால் தினமும் ஒன்று அல்லது இரண்டு சாக்லேட்டுகளை சாப்பிடும் பழக்கம் எனக்கு இருக்கிறது.

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நமது நவீன உணவு முறையில் சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது மிகவும் பொதுவான பழக்கமாக உள்ளது.

இது நமது பற்களுக்குக் கேடு விளைவிப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. அதிகப்படியான சர்க்கரை நீண்ட கால அறிவாற்றல் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கான சில சான்றுகளும் உள்ளன.

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்து செய்தி வழங்குவதே எனது பணி என்பதால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் சேர்க்கப்பட்ட பல கூடுதல் பொருட்களையும் கொண்ட இனிப்புகளைச் சாப்பிடுவது குறித்து எனக்கு கவலை ஏற்படத் தொடங்கியது.

உண்மையில், நான் வழக்கமாகச் சாப்பிடும் ஒரு இனிப்பிலேயே, ஒரு நாளைக்குப் பரிந்துரைக்கப்படும் சர்க்கரையின் அளவில் பாதிக்கும் மேல் உள்ளது.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

அமெரிக்காவின் உணவுமுறை வழிகாட்டுதல்கள், உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் சேர்க்கப்படும் சர்க்கரையை 12 தேக்கரண்டிக்கும் குறைவாக (சுமார் 50 கிராம்) உட்கொள்ளப் பரிந்துரைக்கின்றன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, ஒரு நாளைக்கு ஏழு தேக்கரண்டிக்கும் (30 கிராம்) குறைவாகவே சர்க்கரையை உட்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.

அமெரிக்காவில் உள்ள மக்கள், ஒரு நாளைக்கு 16-17 தேக்கரண்டிக்கும் (65-70 கிராம்) அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதாக அமெரிக்க தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு தெரிவிக்கிறது.

அதாவது, 4 கிராம் என்பது ஒரு தேக்கரண்டி சர்க்கரைக்குச் சமம். அவ்வளவு சர்க்கரையையும் கைவிடுவது எளிதான காரியமல்ல.

ஆனால், தினமும் சர்க்கரை உண்ணும் எனது பழக்கத்தில் இருந்து விடுபடுவது உண்மையிலேயே சாத்தியமா என்று தெரிந்துகொள்ள நான் முடிவு செய்தேன்.

ஆறு வாரங்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த உணவையும் சாப்பிடுவதில்லை என்ற சவாலை எனக்கு நானே வகுத்துக் கொண்டேன்.

தேன் மற்றும் பழச்சாறுகளையும் நான் தவிர்த்தேன். ஆனால் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரையைத் தொடர்ந்து சாப்பிட்டேன்.

இவற்றை உண்ணும்போது, நம் உடல் குளுக்கோஸ் என்ற சர்க்கரையாக உடைக்கிறது. இதுவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான முக்கிய ஆற்றல் மூலத்தை வழங்குகிறது.

ஆரம்பத்தில் இருந்தே, என் ஆற்றல் நிலைகளிலும் நான் உணரும் விதத்திலும் சில ஆச்சரியமான மாற்றங்களைக் கவனித்தேன்.

மதிய உணவுக்குப் பிந்தைய சோர்வு நீங்கியது. ஆனால் அடிக்கடி ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வுடன், ஏதாவது (இனிப்பாக) சாப்பிடக் கிடைக்காதா என்று எனது குளிர்சாதனப் பெட்டியைப் பரிதாபமாகத் தேடிக் கொண்டிருப்பேன்.

பட மூலாதாரம், Getty Images

சர்க்கரை எங்கும் நிறைந்திருக்கிறது

முதலில், நமது உணவில் எவ்வளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சிந்திப்பது அவசியம்.

அதைத் தவிர்ப்பது ஆச்சரியப்படும் அளவுக்குக் கடினமாக இருப்பதை நான் கண்டறிந்தேன். என் உள்ளூர் சூப்பர் மார்க்கெட் அலமாரிகளை ஆராய்ந்தபோது, நான் எதிர்பார்க்காத உணவுகளிலும் சர்க்கரை இருப்பதைக் கவனித்தேன். அதில் 5.7 கிராம் சர்க்கரை கொண்ட ஒரு புளிப்பு மாவு சாண்ட்விச் மற்றும் 9 கிராம் சர்க்கரை கொண்ட போலோக்னீஸ் உணவும் அடங்கும்.

காலை உணவுக்கு நாம் பயன்படுத்தும் தானியங்களில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக வாங்கப்படும் சூப்பர் மார்க்கெட் ரொட்டியின் ஒரு துண்டில் சுமார் 1.2 கிராம் சர்க்கரை இருந்தது.

அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட பல உணவுகளிலும் சர்க்கரை ஏராளமாக உள்ளது. இவை ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற முழு உணவுகளைவிடக் குறைவான ஊட்டச்சத்துகளையே கொண்டிருக்கின்றன.

நமது உணவுகளில் பலவிதமான சர்க்கரைகள் உள்ளன. குளுக்கோஸ் என்பது மிகவும் பொதுவானது, ஆனால் பழங்கள் மற்றும் பல சிரப்களில் பிரக்டோஸையும், பாலில் லாக்டோஸையும், சுக்ரோஸையும் காணலாம்.

இந்த சுக்ரோஸ்தான் நமது உணவு முறையில் சேர்க்கப்படும் முக்கிய "ஃப்ரீ சுகர்" ஆகும். பழச்சாறுகள், சிரப்கள் மற்றும் தேனிலும் ஃப்ரீ சுகர்கள் காணப்படுகின்றன, ஏனெனில் அவை உணவின் செல்களுக்குள் பிணைக்கப்படவில்லை. இந்தச் சுத்திகரிக்கப்பட்ட ஃப்ரீ சுகர்கள்தான் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

"பிறக்கும்போதே நாம் இனிப்பு சுவையை விரும்புகிறோம், இது தாய்ப்பாலின் ஒரு பகுதியாகும். ஆரம்ப நாட்களில் நீங்கள் அதிக எடையைப் பெற வேண்டியிருக்கும் போது இது அவசியமாகிறது," என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ஆஷ்லே கியர்ஹார்ட் கூறுகிறார்.

"இனிப்பை மிக மலிவாக வழங்குவதில் நாம் இப்போது மிகவும் கைதேர்ந்தவர்களாகிவிட்டோம்" என்பதுதான் பிரச்னை என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

சர்க்கரை உடலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

நாம் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது, அது நமது ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சாப்பிட்ட பிறகு இதுவொரு சாதாரண நிகழ்வு என்றாலும், இது அடிக்கடி நடந்தால் நாம் இன்சுலின் எதிர்ப்பை பெறக்கூடும். டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் பல் சொத்தை, வீக்கம், உடல் பருமன், அல்சைமர் நோய், புற்றுநோய் ஆகியவற்றுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

"நீரிழிவு போன்ற உணவு தொடர்பான நோய்கள் இப்போது மது மற்றும் ஓபியேட் போதைப்பொருட்களைவிட அதிகமான மக்களைக் கொன்று வருகின்றன. ஆரோக்கியமற்ற உணவுகள் உலகிலேயே மிகவும் ஆபத்தான பொருளாக இருப்பதில் புகையிலையுடன் போட்டியிடுகின்றன" என்று கியர்ஹார்ட் கூறுகிறார்.

உதாரணமாக, சர்க்கரை கல்லீரலில் கொழுப்பை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையில், பல வாரங்களுக்கு அதிக சர்க்கரை கொண்ட பானங்களை உட்கொண்டவர்கள், ஒட்டுமொத்தமாக அதே அளவு கலோரிகளை உட்கொண்டாலும், அவர்களின் கல்லீரலில் கொழுப்பின் அளவு இருமடங்காக இருந்தது.

சோள சிரப்பில் காணப்படுவது போன்ற பிரக்டோஸ், நமது உடலை இயங்க வைக்கும் மைட்டோகாண்ட்ரியா எனும் செல்லின் பாகத்துக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது என்று அந்தச் சோதனையின் இணை ஆசிரியரும் சர்க்கரையின் தீமைகள் குறித்த முன்னணி நிபுணருமான ராபர்ட் லஸ்டிக் விளக்குகிறார்.

"இது அடிப்படையில் மைட்டோகாண்ட்ரியாவை செயலிழக்கச் செய்கிறது. அதனால் நீங்கள் புதியவற்றை உருவாக்க வேண்டியுள்ளது." இது உங்களுக்கு உடல்நலக் குறைவு, சோர்வு, எரிச்சல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி, மூளை மந்தநிலையை அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

சர்க்கரையைத் தவிர்த்த பிறகு, வாரங்கள் செல்லச் செல்ல, பகல் நேரங்களில் என் ஆற்றல் சீராக இருந்ததை நான் கவனித்தேன்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்பிள் போன்ற முழு பழங்களில் உள்ள சர்க்கரைகள் செல்களுக்குள் பிணைக்கப்பட்டுள்ளன.

அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட அதிகப்படியான மன உளைச்சலுடன் தொடர்புடையவை என்று வளர்ந்து வரும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் அச்சமூட்டுவதாகத் தோன்றினாலும், ஓர் ஆரோக்கியமான உணவு முறையில் சர்க்கரையை மிதமான அளவில் உட்கொள்வது தவறில்லை. ஆனால், சர்க்கரையை மிக அதிகமாகச் சாப்பிடும் மில்லியன்கணக்கான மக்கள் அதை முடிந்த வரை குறைப்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அடிமையாக்கும் பண்புகள்

சர்க்கரையைத் தவிர்த்த முதல் சில நாட்களில், குறிப்பாக சமூக நிகழ்வுகளில் சுவையான இனிப்புகள் வழங்கப்படும்போது, எனக்கு அதன் மீது அதீத ஏக்கம் ஏற்பட்டது.

இது இப்படி இருப்பதற்கு ஓர் உயிரியல் காரணம் உள்ளது.

நாம் சர்க்கரையை உண்ணும்போது, அது நமது மூளையின் வேதியியலை மாற்றியமைக்கிறது. இது ஓபியாய்டு போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களிடம் காணப்படும் மாற்றங்களைப் போன்றது என அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் பதிவு செய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரும், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுத் துறை இணை பேராசிரியருமான லினா பெக்டாச்சே விளக்குகிறார்.

இனிப்பு உணவுகளை உண்பது மூளையின் வெகுமதி அமைப்பையும் தூண்டுகிறது. இனிப்பு உணவுகள் மீது அதிக ஏக்கம் கொண்டவர்களுக்கு, அவற்றை உட்கொள்ளும்போது "மகிழ்ச்சி தரும்" ஹார்மோனான டோபமைன் அதிக அளவில் சுரக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது நாம் இனிப்பு உணவுகளை உண்ணும்போது இன்பத்தையும் ஒரு வெகுமதியையும் உணர்கிறோம்.

எனவே, ஏராளமான நிபுணர்கள் சர்க்கரைக்கு, அடிமையாக்கும் பண்புகள் இருப்பதாகக் கருதுகின்றனர். இருப்பினும் இது தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகவே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பழங்கள் போன்ற இயற்கையாகவே இனிப்பான உணவுகள் நமது டோபமைன் அமைப்பிற்கு சுவாரஸ்யம் குறைந்தவையாக மாறக்கூடும் என்று கியர்ஹார்ட் கூறுகிறார்.

உண்மையில், சர்க்கரை மீதான ஆசை எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் உணரும் வெகுமதியும் அதிகமாக இருக்கும். இது அந்த சுழற்சியை வலுப்படுத்துவதோடு, இன்னும் அதிகமாக சர்க்கரைக்கு ஏங்கும்படி மூளையை மாற்றியமைக்கக்கூடும்.

உதாரணமாக, எட்டு வாரங்களுக்கு தினமும் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு உட்கொண்டவர்களின் மூளை, இனிப்பு உணவுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிக உணர்திறன் கொண்டதாக மாறியது.

சர்க்கரையைக் குறைப்பது ஏன் இவ்வளவு கடினமாகத் தெரிகிறது என்பதை இந்த டோபமைன் பின்னூட்டச் சுழற்சி விளக்க உதவுகிறது.

"நீங்கள் உங்கள் உயிர் வேதியியலுக்குப் பணயக்கைதியாக இருக்கிறீர்கள்" என்று கூறும் லஸ்டிக், "அதுதான் அடிமைத்தனத்தின் வரையறை. [அமெரிக்க] மக்கள் தொகையில் 20% பேர் சர்க்கரைக்கு அடிமையாக உள்ளனர்" என்றும் குறிப்பிட்டார்.

ஆசையைக் கட்டுப்படுத்த, ஒரு ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்த வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி ஷேக் போன்ற திருப்திகரமான மாற்று வழிகளை நான் கண்டறிந்தேன்.

திராட்சையும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தியது. ஆப்பிள்கள்கூட இனிப்பாகத் தெரிந்தன, எனவே எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தினமும் ஒன்றைச் சாப்பிட்டேன், இது சர்க்கரை மீதான ஏக்கத்தைக் குறைக்க உதவியது.

ரத்த சர்க்கரை அளவு வேகமாகச் சரிந்த பிறகு தனிநபர்கள் அதிக பசியை உணர்வதாகச் சான்றுகள் காட்டுகின்றன. இது அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உண்ட பிறகு ஏற்படும் ஒரு பொதுவான முறையாகும்.

ஓர் ஆய்வின்படி, அதிக செறிவூட்டப்பட்ட சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஸ்டார்ச் கொண்ட மில்க் ஷேக்கை (அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட ஷேக்) உட்கொண்டவர்கள், குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட ஷேக்கை உட்கொண்டவர்களைவிட நான்கு மணிநேரம் கழித்து அதிக பசியை உணர்ந்ததுடன், அவர்களுடைய மூளையின் வெகுமதி மையத்தில் அதிகச் செயல்பாடு இருந்தது கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

இனிப்பு உண்பதைக் கைவிடும்போது என்ன நடக்கிறது?

சர்க்கரையைத் தவிர்த்த சில நாட்களிலேயே, உடல் அதைக் குறைவாக எதிர்பார்க்கத் தொடங்குகிறது என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு மருத்துவப் பள்ளியின் உணவியல் நிபுணர் டாலியா பெரல்மேன் என்னிடம் கூறினார்.

எனது சுவை மொட்டுகள் மாறத் தொடங்கி, இனிப்பு சுவைகளுக்கு அதிக உணர்திறன் கொண்டவையாக மாறியிருக்கும்.

தொழில்துறை ரீதியாக இனிப்பூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, சுவை அமைப்பை "இயற்கையான இனிப்பின் தீவிரத்திற்கு மீண்டும் அளவீடு செய்ய" அனுமதிப்பதாக கியர்ஹார்ட் கூறுகிறார்.

நான் சோதனையைத் தொடங்கி சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு விநோதமான விஷயம் நடக்கத் தொடங்கியது.

எனக்கு வழக்கமாக இனிப்புப் பண்டங்களின் மீது ஏற்படும் ஆசை நின்றுவிட்டது. மதிய வேளையில் எனக்கு லேசான பசி ஏற்பட்டால், ஆலிவ், நட்ஸ், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான மாற்று உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினேன்.

இனிப்பு உண்ண வேண்டும் என்ற ஆசைகள் குறைந்ததற்கு ஒரு காரணம், சர்க்கரை உணவுகளின் தாக்கம் குறைந்ததுதான். இது எனது சுவை உணர்வை மாற்றி, எனது வளர்சிதை மாற்றத்தை மீட்டமைத்தது என்று பெக்டாச்சே கூறுகிறார்.

"சர்க்கரையின் சுவையை உணரும் உங்கள் திறன் வெகுவாகக் குறைந்துவிடுவதால், உங்களுக்கு அதிக சர்க்கரை தேவைப்படாது என்பதை நீங்கள் காண்பீர்கள்" என்று பெரல்மேன் மேலும் கூறுகிறார்.

இப்போது அவர் குறைந்த சர்க்கரை கொண்ட, வீட்டில் செய்த கேக்குகளை மட்டுமே சாப்பிடுகிறார், ஏனெனில் கடையில் வாங்குவது "ஒரு சர்க்கரைக் கட்டியைச் சாப்பிடுவது" போல் இருப்பதாக அவர் உணர்கிறார்.

நாம் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்ளும்போது உடலில் அதிகரிக்கும் ட்ரைகிளிசரைடு (ஒரு பொதுவான கொழுப்பு வகை) அளவும் குறைந்திருக்கும் என்று பெக்டாச்சே விளக்குகிறார்.

சர்க்கரை உணவுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஏற்படும் இன்சுலின் ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருப்பதால், எனது இன்சுலின் உணர்திறனும் மேம்பட்டிருக்கும். "இது இயல்பு நிலைக்குத் திரும்புவது போன்றது" என்று அவர் கூறுகிறார்.

அதே நேரம், குடும்ப நிகழ்வுகளிலும், எனது பிறந்தநாள் விழாவிலும் ஒரு சிறிய துண்டு கேக் கூட சாப்பிடாமல் இருப்பது சவாலாகவே இருந்தது. எனது வாழ்வில் சர்க்கரை உணவுகள் அதிகமாக இருந்ததால், அதற்கான ஏக்கங்கள் என்னிடமிருந்து விலகிச் செல்லவே இல்லை.

இருப்பினும், நான் சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறைந்ததால், டோபமைன் வெளியீட்டுடன் தொடர்புடைய வெகுமதி உணர்வு குறைந்திருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல இனிப்புப் பண்டங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை, நம்மை ஒரு 'போதைச் சுழலுக்குள்' இழுத்துச் செல்லக்கூடும்.

குறைவான சர்க்கரை கொண்ட உணவுகள் பிற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன.

ஒரு சிறிய பரிசோதனையில், 41 குழந்தைகள் கொண்ட குழுவை வெறும் 10 நாட்களுக்கு சர்க்கரையைத் தவிர்க்குமாறு ஒரு குழு கேட்டுக் கொண்டது.

அதன் முடிவில், அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் உடல் கொழுப்பு குறைந்ததுடன், இன்சுலின் எதிர்ப்பும் குறைந்து, நடத்தையும் மேம்பட்டிருந்தது.

அதிதீவிரமாகப் பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் குறித்த மற்ற ஆராய்ச்சிகள், மக்கள் மிகக் குறைவாகப் பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடும்போது, அவர்களுக்கு அதன் மீதான ஆசை குறைந்து, அதிக ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்தன.

சர்க்கரை எனது உடலுக்கு என்ன செய்கிறது என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் ஏற்பட்டதால், எனது பழக்கங்களை மாற்றுவது எளிதாகிவிட்டது. இனிப்புப் பண்டங்கள் மீதான ஆர்வம் குறைந்தது.

வீட்டிலும் இனிப்புப் பண்டங்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான தின்பண்டங்கள் கையில் இருப்பதை உறுதி செய்யவும் முடிந்தது. பழச்சாறுகளுக்குப் பதிலாக ஒரு துளி எலுமிச்சைச் சாறு கலந்த சோடா நீரை அருந்தினேன், அது எனது தாகத்தைத் தணித்தது.

பட மூலாதாரம், Getty Images

மீண்டும் சர்க்கரை உண்ணுதல்

ஆறு வாரங்களின் முடிவில், எனது உணவில் மீண்டும் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் எனக்கு ஏற்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எனது மூளையில் இருந்த "அடிமையாக்கும் சுழற்சி" அமைதியாகி இருக்கலாம் என்று பெக்டாச்சே கூறினார்.

எனக்கு இப்போது தினமும் சர்க்கரை நிறைந்த தின்பண்டங்களின் மீது ஆசை ஏற்படுவதில்லை. சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் குறைந்த சர்க்கரை கொண்ட காலை உணவு தானியங்கள்கூட இப்போது எனக்கு மிகவும் இனிப்பாகத் தெரிகின்றன.

இந்த மாற்றம், தினசரி இனிப்பு உண்ணும் பழக்கத்திற்கு மீண்டும் திரும்புவதைத் தவிர்க்க உதவும் என்று பெரல்மேன் கூறுகிறார்.

எனது ஆறு வார கால சோதனை இப்போது முடிந்துவிட்டது, நான் மீண்டும் சர்க்கரை தின்பண்டங்களை உண்ணத் தொடங்குவேனா?

இல்லை. ஆனால் சில மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

முற்றிலுமாக சர்க்கரையைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, வார நாட்களில் மட்டும் அந்தப் பழக்கத்தைத் தொடர்வேன். வார இறுதி நாட்களில் எனக்குப் பிடித்த இனிப்புகளைச் சாப்பிடத் திட்டமிடுவேன்.

சர்க்கரை உணவுகளைப் பற்றி நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த எண்ணத்தையும் இப்போது மாற்றிக் கொண்டுள்ளேன்.

இறுதியாக ஒரு ட்ரிபிள் சாக்லேட் சிப் குக்கீ (ஒரு குக்கீயில் 28 கிராம் சர்க்கரை) வடிவில் நான் சர்க்கரையை மீண்டும் உட்கொண்டபோது, அதைச் சாப்பிட எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இந்தக் கட்டுரைக்காக, என் உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்க என்னை நானே கட்டாயப்படுத்தி அதைச் சாப்பிட்டேன்.

அது மிகவும் இனிப்பாக இருந்தது, சாக்லேட்டைவிட சர்க்கரையின் சுவையே அதிகம் தெரிந்தது. அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே என் ஆற்றல் குறைவதை நான் உணர்ந்தேன். மதிய வேளையில் சிறு தூக்கமும் போட்டேன். நான் விடுமுறையில் இருந்ததால் மட்டுமே அது சாத்தியமானது.

நான் வழக்கமாகச் சாப்பிட்டு வந்த அந்த இனிப்புப் பண்டம், இப்போது எனக்குப் பிடித்த ஒன்றாக இல்லை. சிறிதளவு சாப்பிட்டுவிட்டு நிறுத்திவிட்டேன்.

குறிப்பு: மெலிசா ஹோகன்பூம் பிபிசியின் மூத்த சுகாதார செய்தியாளராகப் பணிபுரிகிறார். பிரட்வின்னர்ஸ், தி மதர்ஹுட் காம்ப்ளக்ஸ் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு