You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தி கேரளா ஸ்டோரி 2' படத்துக்கு இடைக்கால தடை - நீதிமன்றம் கூறியது என்ன?
எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.
இஸ்லாமிய மதமாற்றத்தை கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள 'தி கேரளா ஸ்டோரி 2' (The Kerala Story-2 Goes Beyond) படம், பிப்ரவரி 27 அன்று வெளியாகவிருந்த நிலையில், இந்த படத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லரில் உள்ள காட்சிகளின் அடிப்படையில், அந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழை எதிர்த்தும், படத்தின் தலைப்பை மாற்றக்கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த படம் கேரள மக்களிடம் விஷத்தைப் பரப்பும் முயற்சி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
ஆனால் படத்தைப் பற்றி தவறாக முன் முடிவு எடுத்திருப்பதாகவும், பணம் பறிக்கும் நோக்கத்துடனும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் படத்தயாரிப்பாளர் விபுல் ஷா தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கலான பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று முதல் பாகத்தின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.
படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) உரிய கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்கள் வாரியத்திடம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
அத்துடன் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் புதிய உத்தரவை பிறப்பிக்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் படம் பிப்ரவரி 27 ல் வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுளளது.
படத்தின் டிரெய்லரில் இருக்கும் காட்சிகள் என்னென்ன?
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி –2' இந்திப்படம், பிப்ரவரி 27 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்துக்கான டிரெய்லர், சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள், கேரளாவில் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த டிரெய்லரின் ஆரம்பமே, சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்ற கருத்தை முன்மொழிகிறது. டிரெய்லர் துவங்கியதும், 'இன்ஷா அல்லாஹ். பாரதம் முழுவதும் இஸ்லாமிய தேசமாக மாறவேண்டும்' என்று ஒருவர் சொல்வதுதான் முதல் வசனமாக இடம் பெற்றுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், இந்துப்பெண்கள் இஸ்லாமியப் பெண்களாக மாற்றப்பட்டு பெற்றோரின் கதறலையும் மீறி பதிவுத்திருமணமும், இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொள்வதாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கேரளா என்று குறிப்பிட்டுள்ள காட்சியில் இடம் பெறும் காதலர்களில் காதலியாக வரும் இந்துப்பெண், ''நான் மதம் மாறமாட்டேன்.'' என்கிறார்.
ஒரு காட்சியில் ''நமது வேலை இந்துப்பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது.'' என்று ஒரு வசனம் இடம் பெறுகிறது. மற்றொரு காட்சியில் ஒரு பெண் மகிழ்ச்சியோடு ஆடும்போது, ''நமது கலாசாரத்தில் இப்படி ஆடுவது பாடுவது எல்லாம் தடை செய்யப்பட்டது. அதெல்லாம் செய்யக்கூடாது. நான் உனக்கு ரீல்ஸ் போடவேண்டுமென்று நினைக்கிறாயா'' என்று கூறி அடிக்கிறார் அப்பெண்ணின் கணவன்.
ஒரு காட்சியில் இஸ்லாமியரை திருமணம் செய்த இந்துப்பெண், மாட்டிறைச்சியை உண்ணுவதற்கு கட்டாயப் படுத்தப்படுகிறார். அந்தப் பெண் வாயை மூடிக்கொண்டு ''என் உயிரே போனாலும் (பீஃப்) மாட்டிறைச்சியை உண்ண மாட்டேன் என்று கூறி, அதை ஊட்டும் பெண்ணின் முகத்தில் அதைத் துப்பி, காலால் தட்டை உதைக்கிறார். அப்போது ஒரு ஆண் மற்றும் 3 பெண்கள் அவரை இறுகப்பிடித்துக் கொண்டு மாட்டிறைச்சியை கட்டாயப்படுத்தி வாயில் திணிக்கின்றனர்.
'அவர்களின் அடுத்த இலக்கு உங்கள் மகளாக இருப்பதற்கு முன்...!' என்ற வார்த்தைகளுடன் டிரெய்லர் முடிகிறது.
அந்த டிரெய்லரில் மதமாற்றம் செய்து திருமணம் செய்வது, பெண்ணை அறைக்குள் பூட்டி வைப்பது, பெண்களை ஆண்கள் கொடூரமாகத் தாக்குவது போன்ற காட்சிகளே இடம் பெற்றுள்ளன.
படம் பிப்ரவரி 27 அன்று இந்தியாவில் 1800 திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் திரையிடப்பட இருப்பதாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சன்ஷைன் பிக்சர்ஸ் நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆனால் டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும், பல்வேறு மாநிலங்களிலும் குறிப்பாக கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த டிரெய்லர் காட்சிகளை வைத்து, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களும், ஊடகங்களில் அரசியல்ரீதியான விவாதங்களும் கிளம்பியுள்ளன. கேரளாவை ஆளும் இடது சாரி முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், இதைத் தீவிரமாக எதிர்த்துள்ளன.
'கேரளாவுக்கு எதிரான பரப்புரை'- பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த படம் கேரளாவுக்கு எதிரான விஷமப் பரப்புரை என்று கூறியுள்ளார்.
அவருடைய சமூக ஊடகப்பதிவில், ''வெறுப்பை விதைத்து, மாநிலத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை அவமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியீடு குறித்த செய்தியை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். இத்தகைய அவதூறு பரப்புரைகளுக்கு எதிராக கேரள மக்கள் வலுவாக நின்று, வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற, ஒற்றுமையின் பாதையில் முன்னேறிச் செல்லவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
''தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, கேரள மக்களை தவறாக திசை திருப்பும் நோக்கத்துடன் இப்போது இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். இந்த படம், கேரள மக்களிடம் விஷத்தை, பொய்களை, வெறுப்பை விதைக்கிறது. இதை கேரள மக்கள் நிச்சயமாக புறம்தள்ளுவார்கள்'' என்று கேரள அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இந்த படத்துக்கு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் சசிதரூர் ஆகியோரும், வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் நோக்கில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசனிடம் இதுபற்றி பிபிசி தமிழ் பேச முயன்றது. அவர் தரப்பில் பதிலளித்த ஊடக செயலாளர் சீஜி, ''கேரளா ஸ்டோரி முதல் பாகத்தை எதிர்த்ததைப் போலவே இந்த படத்தையும் காங்கிரஸ் மட்டுமின்றி, ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கடுமையாக எதிர்க்கிறது.'' என்றார்.
''ஏனெனில் அந்த படம் முழுக்க முழுக்க மக்களைப் பிரிக்கும் திட்டத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையாக இருக்கும் கேரள மக்களிடம் வெறுப்பை விதைத்துப் பிரிப்பதுதான் அந்த படத்தின் ஒரே நோக்கமாக உள்ளது. அதனால் அந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்பதுதான் கேரள காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.'' என்றார் சீஜி.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம், 2023 -ல் வெளியானது. கேரளாவில் அந்த படத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் எழுந்தன.
கேரளத்துடன் எந்த தொடர்பும் இல்லாத விஷயங்கள் படத்தின் ஒரு பகுதியாக பரப்புரை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் ஐ.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக படத்தின் டிரெய்லரில் காட்டப்பட்டது. பரவலான எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து அது வெறும் மூன்று பேர் மட்டும் என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகவுள்ள 'தி கேரளா ஸ்டோரி–2' படத்தை, இடது சாரி முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய 2 கூட்டணிகளிலும் உள்ள கட்சிகளும் எதிர்த்துள்ள நிலையில், பாஜக மட்டும் இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுபற்றி கேரளா பாஜகவின் மூத்த தலைவர் சுரேந்திரனிடம் பிபிசி பேசியபோது, அந்தப் படத்தை வரவேற்பதாகவும், கட்சியின் நிலைப்பாடு பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசிவருவதாகவும் தெரிவித்தார்.
கேரள பாஜக தலைவர் சந்திரசேகர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ''பாஜகவுக்கு எதிரான எந்த திரைப்படத்தையும் நாங்கள் எதிர்த்ததில்லை. இன்னும் 45 நாட்கள் மட்டுமே முதல்வராக இருக்கப்போகும் பினராயி விஜயன், இந்தப் படத்தை எதிர்ப்பது பாசாங்குத்தனமானது மற்றும் பிரச்னையை திசை திருப்புவது. அவர் தன்னை சமூகத்தின் பாதுகாவலராக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.'' என்று கூறியுள்ளார்.
தலைப்பிலுள்ள 'கேரளாவை' நீக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு!
அரசியல்ரீதியான எதிர்ப்புகள், போராட்டங்கள் ஒரு புறமிருக்க, இந்தப் படத்துக்கு எதிராக, கேரள உயர்நீதி மன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீதேவ் நம்பூதிரி, ஃப்ரெடி வி பிரான்சிஸ் மற்றும் வழக்கறிஞர் அதுல்ராய் ஆகிய 3 பேரும் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர்.
இவற்றில் ஸ்ரீதேவ் நம்பூதிரியின் மனு, இந்தப் படத்துக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) வழங்கிய சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்துவதையும் அந்த மனு எதிர்த்தது. மற்ற இருவரின் மனுக்களும், டீசர் மற்றும் டிரெய்லரில் உள்ள பல்வேறு காட்சிகளையும், தலைப்பையும் குறிப்பிட்டு இதே கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தன.
படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கிய கதைகளை சித்தரித்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு 'தி கேரளா ஸ்டோரி' என்று இருப்பதால், அதில் இடம் பெற்றுள்ள பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பான சம்பவங்கள் கேரளாவை தொடர்பு படுத்துவது போலிருப்பதாக ஸ்ரீதேவ் நம்பூதிரியின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான அமர்வு, கேரளாவை மதச்சார்பற்ற மாநிலம் என்று கூறியதுடன், இந்தப் படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியிருப்பதால் இந்த வழக்குகள் நியாயமானவை என்று குறிப்பிட்டது. கேரள மக்கள் நல்லிணக்கமாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த படம் கேரள மக்களை தவறாகச் சித்தரிக்கிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த மனுக்களுக்கு எதிராக தயாரிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை உள்ளடக்கியதாகக் கூறியிருந்தாலும் தலைப்பில் 'கேரளா'வைப் பயன்படுத்தியதால், கேரள மக்களின் அச்சத்தை புறக்கணிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும் இது வகுப்புவாத பதற்றத்திற்கும் வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்தப் படத்தை எதிர்க்கும் மனுக்கள், படம் வெளியாவதற்கு முன்பே 2 நிமிட டீசரை வைத்து தவறாகக் கருதி தாக்கல் செய்யப்பட்டவை என்றும் தயாரிப்பாளர் தரப்பு கருத்தை முன் வைத்துள்ளது. ஸ்ரீதேவ் நம்பூதிரியின் மனுவைப் பற்றி, தயாரிப்பாளர் தரப்பு அளித்துள்ள பதில் மனுவில் ''தவறான நோக்கத்துடனும், நிதி ஆதாயம் பெறுவதற்கான நோக்கத்துடனும் தாக்கல் செய்யப்பட்டதாக'' கூறப்பட்டிருந்தது.
ஆனால் மாநிலத்தின் பெயர் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால் விஷயம் மிகக்கவனிக்கத்தக்கது என்று கூறிய நீதிமன்றம், ''உண்மை சம்பவங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படம் மாநிலத்தின் புகழுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.'' என்று கூறியது.
திரைப்படத்தில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் பொருந்தாதவை என்றால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தை வெளிப்படுத்திய நீதிமன்றம், படம் வெளியாகும் முன் கொச்சியில் திரைப்படத்தை பார்க்கவும் முடிவு செய்தது.
நீதிபதிகள் படத்தைப் பார்க்கும் நேரம் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்த தயாரிப்பாளர் தரப்பு, திரைப்படங்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் அதிகாரம், மத்திய திரைப்படச்சான்றிதழ் வாரியத்துக்கு மட்டுமே உள்ளது என்றும், படத்தைப் பார்க்கவும் மதிப்பீடு செய்யவும் கேரள உயர்நீதிமன்றம் தனது மேற்பார்வை அதிகாரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் வாதிட்டது.
நிபுணர்களால் படம் ஏற்கனவே மதிப்பாய்வு செய்யப்பட்டு, கதையில் அவர்கள் திருப்தி அடைந்ததால்தான் CBFC-யிடமிருந்து அனுமதியைப் பெறமுடிந்தது என்றும், அதன் முடிவில் பெரிய தவறு இல்லாவிட்டால் படத்தைத் தடை செய்ய முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்ட தயாரிப்பாளர் தரப்பு, படம் வெளியாவதை நிறுத்துவது பெரும் நிதியிழப்புக்கு வழிவகுக்கும் என்று கூறியது.
தி கேரளா ஸ்டோரி 2 என்பது 2023 இல் வெளியிடப்பட்ட தேசிய விருது பெற்ற தி கேரளா ஸ்டோரியின் தொடர்ச்சி என்றும், ஏமாற்றும் திருமணங்களில் விழுந்து கட்டாய மத மாற்றத்தை எதிர்கொள்ளும் 3 இளம் பெண்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டது என்றும் பதில் மனுவில் கூறியுள்ளது.
''பல மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய அளவிலான நிகழ்வைத்தான் டீசர் காட்டுகிறது; அது கேரளத்தில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தலைப்பில் வரும் "Goes Beyond" என்பது அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்டதல்ல'' என்றும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
திரைப்படத்தின் டீசர் அகற்றப்பட்டதா?
படத்தில் இல்லாததை டீசர் தெரிவித்ததாகவும், இது சட்டம்–ஒழுங்கு பிரச்னைகளைத் தூண்டக்கூடும் என்றும் படத்தை எதிர்க்கும் மனுதாரர்கள் தரப்பு வாதிட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான அமர்வு, இந்த படத்துக்கு சான்றிதழ் வழங்கும்போது வாரியம் சரியாக செயல்படாதது, முதல் பார்வையிலேயே தெரியவருகிறது என்று கூறியுள்ளது. எனவே மனுதாரர்கள் வாரியத்தின் முன் தாக்கல் செய்த மனுக்களை இரு வாரங்களுக்குள் CBFC பரிசீலிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
வாரியம் சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, படத்தை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் அகற்றப்பட்டதாக வந்த தகவலை மறுத்துள்ள படத்தயாரிப்பு நிறுவனமான சன்ஷைன் பிக்சர்ஸ், "தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியாண்ட் படத்தின் டீசர் அகற்றப்பட்டது குறித்து தற்போது பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை. இந்த விஷயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. எந்த உள்ளடக்கத்தையும் நீக்க எந்த நீதிமன்றமும் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. நாங்கள் எந்த உள்ளடக்கத்தையும் நீக்கவில்லை." என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டரீதியான இந்த மோதல்கள் ஒரு புறமிருக்க, கேரளாவில் இந்த படத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வாதங்கள் வலுத்து வருகின்றன.
அரசியல் கட்சிகளைத் தவிர சில பொது அமைப்புகளும், பெண்ணிய அமைப்புகளும் படத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றன. கேரளாவின் முக்கியமான பெண்ணிய செயற்பாட்டாளரான தேவகி, இதுபற்றி பிபிசியிடம் பேசினார். அவர், ''இந்த படம் ஒரு படுபயங்கரமான பொய்.'' என்றார்.
''அந்த பொய்யை இந்துத்துவ சக்திகள் மீண்டும் மீண்டும் இங்கே பரப்ப முயற்சி செய்கின்றன. ஏனெனில் கேரளாவின் பாரம்பரியத்தில், இந்துப் பெண்கள் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டது என்பது எப்போதுமே நடந்ததில்லை. ஜாமுரின் என்ற மன்னரின் மகள் நீரில் மூழ்கியபோது அவளை ஒரு முஸ்லீம் இளைஞர் காப்பாற்றுகிறார். மதம் மாறி அந்த இளைஞரை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். அவருக்கு ஒரு சாம்ராஜ்யத்தையே அவளுடைய தந்தை ஏற்படுத்தித் தந்ததாக இங்கே வரலாறு உண்டு.'' என்றார் தேவகி.
''இத்தகைய அன்புப் பரிமாற்றங்கள் நடப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல்தான், இத்தகைய வெறுப்பைத் தூண்டும் படங்களைத் தொடர்ந்து தயாரிக்கின்றனர்'' என்கிறார் தேவகி.
தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பு கூறும் விளக்கம் என்ன?
இந்த படத்தில் இடம் பெறும் மாட்டிறைச்சி காட்சியை வைத்து, அதுபற்றி மறைமுகமாக எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்திருந்த நடிகர் பிரகாஷ்ராஜ், ''சைவம் உண்போர், பலவித அசைவம் உண்போர் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றாக ஒரு சமூகமாக தொடர்ந்து வாழ்வோம். இயல்பாக நடப்பதை ஏன் கடினமாக்கிக் கொள்ள வேண்டும்.'' என்று கூறியிருந்தார்.
மறைமுகமாக அவர் தெரிவித்திருந்த கருத்து பற்றி, ஏஎன்ஐ ஊடகத்திடம் கருத்துத் தெரிவித்த படத்தின் இயக்குநர் காமாக்யா நாராயண் சிங், ''நான் அவரை ஓர் உயர்ந்த நடிகர் என்று நினைத்தேன். ஆனால் அவர் அறிவுபூர்வமாக திவாலாகிவிட்டார்." என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
படம் தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வாதங்களை வைத்துள்ள தயாரிப்பாளர் விபுல் ஷா, இந்த படத்தில் காட்டப்படும் அனைத்தும் உண்மை என்று ஊடகங்களில் பேசியுள்ளார். கேரளாவில் 32 ஆயிரம் இந்துப் பெண்கள் மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவது, கேரள சட்டப்பேரவையில் பதிவு செய்யப்பட்ட தகவல் என்றார்.
படத்தின் இயக்குநர் காமாக்யா நாராயண் சிங், ''கட்டாயப்படுத்தப்பட்டு தனக்கு மாட்டிறைச்சி ஊட்டப்பட்டதாக, மதம் மாற்றப்பட்ட பல இந்துப்பெண்கள் என்னிடமே கூறியுள்ளனர். படத்தில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கை ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோல ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.'' என்று கூறியுள்ளார்.
மேலே கூறப்பட்டுள்ள இரண்டு கூற்றுகளும் போதிய ஆதாரமில்லாத தவறான கூற்றுகள் என பல முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சுதிப்டோ சென்னிடம், இந்தப் படத்தைக் குறித்து பிபிசி தமிழ் கருத்து கேட்டபோது, '' படத்தில் என்னுடைய பங்களிப்பு எதுவுமே இல்லை என்பதால் அதுபற்றி கருத்துத் தெரிவிக்க முடியாது.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு