You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் மலைப்பகுதியில் அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு எப்படி நடந்தது?
இரான் நிலப்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 ரக போர் விமானத்திலிருந்து குதித்து, 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தனிமையில் மறைந்திருந்த அமெரிக்க அதிகாரி, ஒரு துணிச்சலான தேடுதல் நடவடிக்கை மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ஒரு வீரர் காணாமல் போனார். அவரைப் பிடித்துக் கொடுக்கும் குடிமக்களுக்குச் சுமார் 66,100 அமெரிக்க டாலர் சன்மானம் வழங்கப்படும் என இரான் அரசு அறிவித்திருந்தது. இரு நாடுகளுமே அந்த வீரரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA) ஒரு நுணுக்கமான ஏமாற்றும் உத்தியைக் கையாண்டது. அந்த அதிகாரி ஏற்கனவே மீட்கப்பட்டு தரைவழியாக வெளியேற்றப்பட்டுவிட்டார் என்ற பொய்ச் செய்தியை இரான் நாட்டுக்குள் பரப்பி, அந்நாட்டுப் படைகளைத் திசைதிருப்பியது.
அதே சமயம், மலை இடுக்குகளில் ஒரு கைத்துப்பாக்கியுடன் மறைந்திருந்த அதிகாரியின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிந்து பென்டகனுக்குத் தெரிவித்தது. டஜன் கணக்கான போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன், அமெரிக்க வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான ஒரு மீட்புப் பணி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மீது இரான் பழங்குடியினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை பிபிசி வெரிஃபை உறுதி செய்துள்ளது. அதேபோல், தேடுதல் பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் மற்றொரு ட்ரோன் மற்றும் விமானத்தையும் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக இரான் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரான், ஹெஸ்பொலா, மற்றும் ஹூத்தி அமைப்புகள் இணைந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக, இரான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பெட்ரோகெமிக்கல் மண்டலம் மற்றும் தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல இரான் ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு