'கற்காலத்துக்கு அனுப்பிவிடுவோம்' - டிரம்ப் மிரட்டலுக்கு இரான் தளபதியின் பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இரானை கடுமையாக தாக்கி அந்நாட்டை 'கற்காலத்திற்கே' அனுப்பிவிடுவோம் என்று டொனால்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார்.
தனது ட்ரூத் சோசியல் பதிவில், இரானின் 'புதிய ஆட்சியின் அதிபர்' போர்நிறுத்தம் கோரியதாக டிரம்ப் தெரிவித்தார்.
''ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டு மிகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தால் மட்டுமே நாங்கள் பரிசீலிப்போம் (போர் நிறுத்தத்தை). அது நடக்கின்றவரை நாங்கள் இரானை முழுமையாக அழித்து அவர்களை 'கற்காலத்திற்கே' அனுப்பிவிடுவோம்," எனத் தெரிவித்தார் டிரம்ப்.

பட மூலாதாரம், Getty Images
இரான் மக்கள் நினைப்பது என்ன?
பிபிசி பாரசீக சேவையின் கோன்சே ஹபீபியாசாத்திடம் பேசிய தெஹ்ரானில் வசிக்கும் தனது 20 வயதுகளில் உள்ள ஒரு பெண், '' என்னை பொறுத்தவரை கூற்று முற்றிலும் சாத்தியமற்றது. தற்போதைய கலாசாரம், மக்கள் தொகை, பொருளாதார அமைப்புகள், மேலும் வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டால், இரானுக்கு மீண்டும் கட்டியெழுப்பும் வலுவான திறன் உள்ளது'' என கூறுகிறார்.
அதே நேரத்தில், தெஹ்ரானில் உள்ள தனது 40 வயதுகளில் உள்ள மற்றொரு பெண், ''அவர் அப்படி செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். ஆனால் அவர் எண்ணெய், ஆற்றல் துறைகள், உட்கட்டமைப்புகள் எல்லாவற்றையும் தாக்கி முற்றிலும் அழித்துவிடக் கூடும் என்ற பயம் எனக்கு உள்ளது. அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மிகவும் நீண்ட நேரம் ஆகும்'' என்கிறார்.


பட மூலாதாரம், Getty Images
இந்தநிலையில் இரானில் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் தளபதி ஒருவர் டிரம்புக்கு பதிலளித்துள்ளார்.
''நீங்கள்தான் உங்கள் வீரர்களைக் கல்லறைகளுக்கு அனுப்புகிறீர்கள். நீங்கள் கற்காலத்துக்கு தள்ள விரும்பும் இரான் இதை செய்யவில்லை'' என இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் வான்படை தளபதி மஜித் மௌஸவி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
''ஹாலிவுட்டில் உள்ள கற்பனை கதைகள் உங்கள் மனதை மிக அதிகமாக பாதித்துள்ளன. வெறும் 250 ஆண்டுகள் வரலாறு கொண்ட நீங்கள், 6000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தை மிரட்டுகிறீர்கள்'' எனவும் அவர் கூறியுள்ளார்.
இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால், இரானில் உள்ள மக்களை தொடர்புகொள்வது இன்னும் மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சிலர் ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணைய வசதிகளையும், பிற வழிகளையும் பயன்படுத்தி தொடர்புகொள்கின்றனர்.ஆனால் அதற்கு அதிக செலவு ஆகிறது.
ஸ்டார்லிங்க் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது கூட, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கலாம்.

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































