You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி அரேபியா லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க தீர்மானித்தது ஏன்?
- எழுதியவர், சையத் அப்துல்லா நிஜாமி
- பதவி, பிபிசி நியூஸ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்போவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது.
ஒட்டகங்களை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சௌதி அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை ஒட்டக வளர்ப்பின் லாபத்தை அதிகரிக்கும் மற்றும் விலங்குகள் மற்றும் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்கான நம்பகமான தரவுத்தளத்தை உருவாக்கும்.
2024-ஆம் ஆண்டில், சௌதி அரேபியாவில் சுமார் 2.2 மில்லியன் (22 லட்சம்) ஒட்டகங்கள் இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
இந்த ஒட்டகங்கள் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதாரத்திற்கு இரண்டு பில்லியன் ரியாலுக்கும் மேல் பங்களிக்கின்றன.
ஒட்டகம் சௌதி அரேபியாவின் தேசிய சின்னத்தின் ஒரு பகுதியாகும். அந்நாடு ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டிகள் மற்றும் கண்காட்சிகளையும் நடத்துகிறது, அதில் சிறந்த ஒட்டகங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
சௌதி அரேபியாவின் தேசிய விழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தருணங்கள் ஒட்டகங்கள் இன்றி நிறைவடையாது. சௌதி அரேபியா மற்றும் அரபு வளைகுடா நாடுகளில் ஒட்டகங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.
ஒட்டகங்களின் வரலாறு
வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்தால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளின் புகைப்படங்கள், இஸ்லாத்தின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவிற்குப் பயணம் செய்வதற்கு ஒட்டகம் மட்டுமே ஒரே வழியாக இருந்ததைக் காட்டுகின்றன.
ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, தெற்காசியா மற்றும் தொலைதூர கிழக்கிலிருந்து கூட யாத்ரீகக் குழுக்கள் ஒட்டகங்கள் மூலம் சௌதி அரேபியாவிற்கு நீண்ட தூரம் பயணம் செய்வார்கள். வளைகுடாவின் பாலைவனங்கள் முழுவதும் பயணம் செய்ய ஒட்டகங்களைப் பயன்படுத்தும் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது.
சௌதி அரேபியாவில் உள்ள ஒட்டகங்களின் கல் சிற்பங்கள் உலகின் மிகப் பழமையான விலங்கு உருவங்களாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
2018-ஆம் ஆண்டில் அந்த இடங்களில் முதல்முறையாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோது, கல்லில் செதுக்கப்பட்ட இந்த உருவங்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டனர்.
ஜோர்டானின் புகழ்பெற்ற பண்டைய நகரமான பெட்ராவில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்களை இந்தச் சிற்பங்கள் ஒத்திருந்ததால் இந்த அனுமானம் செய்யப்பட்டது. இருப்பினும், பிந்தைய ஆய்வுகள் இந்த ஒட்டக உருவங்களின் வயதை ஏழு முதல் எட்டாயிரம் ஆண்டுகள் வரை என மதிப்பிட்டுள்ளன.
குகை ஓவியங்களைப் போலல்லாமல், இந்த மாதிரிகளில் பெரும்பாலும் கரிமப் பொருட்கள் இல்லாததால், கல் சிற்பங்களின் சரியான வயதைத் தீர்மானிப்பது ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் இந்தத் தரத்திலான பாறை ஓவியங்களைக் கண்டறிவதும் அரிதானது.
2021 செப்டம்பரில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தங்கள் முடிவுகளை 'ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிகல் சயின்ஸ்' இதழில் வெளியிட்டது. இந்தச் சிலைகளுக்கான புதிய காலத்தைத் தீர்மானிக்க அந்தப் பகுதியில் கண்டறியப்பட்ட மண்ணரிப்பு வடிவங்கள், அடையாளங்கள் மற்றும் விலங்கு எலும்புகளை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
இத்தகைய நினைவுச்சின்னங்கள் கற்காலத்திற்கு முந்தையவை என்றும், அவை நான்கரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான எகிப்தின் கீசா பிரமிடுகளை விடவும் பழமையானவையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒட்டகங்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதற்கு முன்பே இத்தகைய நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டன, மேலும் அவை பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியமான அடையாளமாக இருந்தன.
இந்தச் சிலைகள் உருவாக்கப்பட்ட போது, சௌதி அரேபியா இன்றைய காலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இன்றைய பாலைவனங்களுக்குப் பதிலாக, ஏரிகளுடன் கூடிய பல பசுமையான மற்றும் புல்வெளிப் பகுதிகள் இருந்தன.
இந்த ஒட்டகச் சிலைகள் ஏன் செய்யப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது நாடோடி பழங்குடியினரின் சந்திப்பு இடமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
'ஒட்டகங்கள் இன்றி பாலைவனத்தில் பிழைப்பது அரிது'
சௌதி வரலாற்றாசிரியர் மற்றும் ரியாத் செய்தித்தாள் கட்டுரையாளரான பதர் பின் சௌத், அரேபிய தீபகற்பத்தில் பல நூற்றாண்டுகளாக ஒட்டகங்கள் மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன என்று கூறுகிறார்.
"ஒட்டகங்கள் இல்லாமல் இந்தத் தகிக்கும் பாலைவனத்தில் உயிர்வாழ்வது சாத்தியமற்றதாக இருந்திருக்கும்" என்று அவர் கூறுகிறார்.
இந்தப் பண்பின் காரணமாக, அரபு உலகின் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் வாழ்க்கையின் பிற அம்சங்களில் ஒட்டகங்கள் ஓர் அங்கமாக உள்ளன.
பத்ர் பின் சௌத் கூறுவது போல, "இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில், தர்ஃபா இபின் அல்-அப்த் போன்ற கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் ஒட்டகத்தைக் குறிப்பிட்டுள்ளனர்."
"மனித வாழ்க்கையில் ஒட்டகங்கள் புறக்கணிக்க முடியாத அளவிற்குப் பெரும் பங்கு வகித்துள்ளன. இதனால்தான் இஸ்லாமிய இறைத்தூதர் ஹஜ்ரத் முகமதுவிடமும் 'கஸ்வா' (Qaswa) என்ற பெயருடைய ஒட்டகம் இருந்தது." என்கிறார் அவர்.
சவாரி செய்வதற்கோ அல்லது பொருட்களைச் சுமந்து செல்வதற்கோ ஒட்டகங்களின் தேவை குறைந்திருந்தாலும், அவற்றுக்கும் அரபுத் தலைவர்களுக்கும் இடையிலான அன்பும் வரலாற்றுத் தொடர்பும் அப்படியே உள்ளது.
நவீன சௌதி அரேபியாவைத் தோற்றுவித்த மன்னர் அப்துல் அஜீஸ், 'அல்-ரமத்' என்று அழைக்கப்பட்ட ஒட்டக மந்தையையும், 'அல்-துவைலா' என்ற ஒரு சிறப்பு ஒட்டகத்தையும் வைத்திருந்தார்.
ஒட்டகங்களின் ரசிகர்கள்
சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடமும் 'அல்-ஷரஃப்' என்ற பெயருடைய அழகான மற்றும் உயர்ந்த இனத்தைச் சேர்ந்த ஒட்டகம் உள்ளது என்கிறார் பத்ர் பின் சௌத்.
ஒவ்வொரு ஒட்டகமும் நானூறு கிலோகிராம் வரை எடையைச் சுமக்கக் கூடியவை என்பதால் அவை 'பாலைவனக் கப்பல்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
வாகனங்கள் மற்றும் நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில், மெக்காவில் உள்ள குரைஷ் தலைவர்களின் குழுக்கள் இந்த ஒட்டகங்களில் தான் சிரியா மற்றும் ஏமனுக்குப் பயணம் செய்வார்கள்.
நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, 'உகலாத்' என்று அழைக்கப்பட்ட வர்த்தகர்கள் இந்தியா, துருக்கி, மொராக்கோ மற்றும் நைஜீரியா வரை ஒட்டகங்களை வர்த்தகம் செய்தனர். சில தசாப்தங்களுக்கு முன்பு வரை, எண்ணெய் எடுப்பதற்கும் சுத்திகரிப்பதற்கும் ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒட்டகங்கள் நிறத்தின் அடிப்படையில் பல பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒட்டகங்கள் பழுப்பு முதல் சிவப்பு நிறம் வரை உள்ளன. ஓமன் மற்றும் சூடானைச் சேர்ந்த ஒட்டகங்கள் அவற்றின் ஓடும் திறனுக்காக அறியப்பட்டவை என்றும், சௌதி அரேபியாவின் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்தவை பால் உற்பத்திக்காகப் புகழ் பெற்றவை என்றும் ஒட்டக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செல்வந்த நாடான சௌதி அரேபியா இப்போது உலகின் தொழில்நுட்ப மற்றும் நவீன காலத்திற்கு ஏற்ப பெரும் மூலதனத்தை முதலீடு செய்தாலும், ஒட்டகங்களின் வரலாற்று முக்கியத்துவத்தையும் பண்பாட்டு அடையாளத்தையும் அந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சித்து வருகிறது.
தற்போது, சவானி என்ற நிறுவனம் ஒட்டகப் பால் மற்றும் பால் பவுடர் துறையில் முதலீடு செய்து வருகிறது, ஏற்கனவே 25 நாடுகளுக்குத் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது ஒட்டகப் பாலிலிருந்து ஐஸ்கிரீமையும் தயாரிக்கிறது.
அபீல் என்ற பிராண்ட், ஒட்டகத்தின் உரோமம் மற்றும் தோலிலிருந்து ஆடைகள், கைவினைப் பைகள் மற்றும் காலணிகளை உருவாக்குகிறது. ஒட்டகத் தோல் முதலையின் தோலுக்குப் பிறகு இரண்டாவது வலிமையான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய தோலாகக் கருதப்படுகிறது.
சௌதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் கீழ், எண்ணெய் துறைக்குப் பிறகு, ஒட்டகம் சார்ந்த தொழில் நாட்டின் முக்கியமான வருமான ஆதாரமாக மாறும்.
வருமானம் தவிர, ஒட்டகங்கள் வரலாறு, மத மரபுகள் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையவை, இது சௌதி குடிமக்களுக்கு லாபம் சார்ந்தது மட்டுமல்லாமல் பெருமைக்குரிய விஷயமும் கூட.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு