காணொளி: மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த 2 வீரர்கள்
2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
2013 முதல் 2025 வரை தொடர்ந்து 13 ஐபிஎல் சீசன்களாக தங்களின் முதல் போட்டியைத் தோற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அந்த சோக சாதனைக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இந்த வெற்றியில் ரோஹித் சர்மாவும் ஷார்துல் தாக்கூரும் முக்கிய பங்கு வகித்தார்கள்.
ஷார்துல் பந்துவீச வந்த தருணத்தில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. ஆனால், தான் வீசிய இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார் ஷார்துல்.
புற்கள் அதிகம் இருந்த வான்கெடே மைதானத்தில் போட்டியின் தொடக்கத்தில் 'ஸ்விங் & சீம் மூவ்மென்ட்' இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி பெரிய அளவில் இல்லாததால், பேட்டர்கள் எளிதாக ரன் சேர்த்தனர். இந்நிலையில், மும்பை பௌலர்கள் 'ஸ்லோ பால்கள்' வீசத் தொடங்கினார்கள்.
ஷார்துல் தன்னுடைய முதல் பந்தை வீசிய பிறகு, வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் ஸ்லோயர் பால்கள் வீசுவதுதான் சரியாக இருக்குமென்று முடிவு செய்திருக்கிறார்கள். முந்தைய ஓவரில் (ஆட்டத்தின் 5வது ஓவர்) பும்ரா சுமார் 4 ஸ்லோயர் பால்கள் வீசினார். இப்போது ஷார்துலும் அதையே செய்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஷார்துல் அதையே அடுத்த பந்திலும் செய்து ஆலன் விக்கெட்டைக் கைப்பற்றி கொல்கத்தாவின் அதிரடிக்கு முதல் வேகத்தடையைப் போட்டார்.
ஸ்லோ பால்களை அதிகளவு பயன்படுத்திய ஷார்துல் அதிலும் பல வேரியேஷன்கள் செய்தார். பெரும்பாலும் ஃபுல் லென்த்தில் ஸ்டம்ப் லைனில் வீசிய அவர், அவ்வப்போது ஷார்ட் லென்த்திலும் வீசினார். லைன்களையும் மாற்றினார். ஷார்துலின் இரண்டாவது ஓவரில் அப்படி வீசப்பட்ட ஒரு பந்து தான் கேமரூன் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றியது.
9வது ஓவரில் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றிய ஷார்துல், அதன்பிறகு 14வது ஓவர் மீண்டும் பந்துவீச வந்தார். இம்முறை ஃபுல் லென்த்தில் 'கிராஸ் சீம்' பந்தை வீசினார். சற்று திரும்பிய பந்தை அடிக்க முயற்சித்த ரஹானே அதை சரியாக அடிக்காததால் கேட்சாகி ஆட்டமிழந்தார்.
ஆலன், கிரீன், ரஹானே என்று மூன்று பெரிய விக்கெட்டுகளை முக்கியமான தருணங்களில் வீழ்த்தி ஆட்டத்தில் நைட் ரைடர்ஸின் பிடியைத் தளர்த்தினார் ஷார்துல்.
சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸ் துரத்துகையில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரோஹித் சர்மா, கடினமான பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படும் வருண் சக்கர்வர்த்தியைக் கூட அநாயசமாகக் கையாண்டார். பவர்பிளே முடியும்போதே அரைசதம் கடந்திருந்தார் அவர்.
வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என அனைவரையும் பதம் பார்த்த ரோஹித், புல், டிரைவ், ஸ்கூப் என பலவகையான ஷாட்களையும் ஆடினார். அவருடைய முதல் பவுண்டரி ஒரு எட்ஜ் மூலம் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு ஒவ்வொரு ஷாட்டும் மிகத் துல்லியமாக, அவரது பேட்டின் நடுப்பகுதியில் பட்டே பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் மாறியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு