ஆர்டெமிஸ் 2: பூமியுடன் 40 நிமிடங்கள் தொடர்பு துண்டிப்பு ஏன்? விண்வெளி வீரர்கள் என்ன செய்தனர்?
பட மூலாதாரம், NASA
- எழுதியவர், ரெபெக்கா மொரெல்
- பதவி, அறிவியல் ஆசிரியர்
- எழுதியவர், அலிசன் பிரான்சிஸ்
- எழுதியவர், கெவின் சர்ச் (ஜான்சன் விண்வெளி மையம்)
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஆர்டெமிஸ் 2-ல் பயணித்த விண்வெளி வீரர்களைத் தவிர வேறு எவருமே இதுவரை பூமியிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை.
இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 11:30 மணியளவில், ஆர்டெமிஸ் 2 குழுவினர் புதிய சாதனையைப் படைத்தனர். மனிதர்கள் பூமியிலிருந்து பயணம் செய்த மிக அதிக தூரம் என்ற சாதனையை அவர்கள் முறியடித்தனர்.
1970-இல் அபோல்லோ 13 குழுவினர் படைத்த 2,48,655 மைல்கள் (4,00,171 கிலோமீட்டர்) தூரம் என்ற சாதனையை ஆர்டெமிஸ் 2 குழுவினர் விஞ்சினர்.
சந்திரனின் பின்புறம் பயணம் செய்தபோது ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து அதிகபட்ச தூரத்தை அடைந்தது. இது 2,52,756 மைல்கள் (4,06,771 கிலோமீட்டர்) என்ற சாதனை தூரத்தை எட்டியது.
ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம் சென்றபோது, பூமியில் உள்ள நாசா மையத்துடனான தொடர்பை இழந்தது. சுமார் 40 நிமிடங்களுக்கு இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
1) பூமியுடனான தொடர்பு ஏன் துண்டிக்கப்பட்டது?
ஆர்டெமிஸ் குழுவினருக்கு பூமி மிகவும் சிறியதாகத் தெரிந்தாலும், டெக்சாஸின் ஹியூஸ்டனில் உள்ள மிஷன் கண்ட்ரோலுடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள்.
நாசா குழுவினர் பேசும் வார்த்தைகள், விண்வெளி வீரர்களுக்குத் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் உணர்வைத் தருகின்றன.
ஆனால், அந்தத் தொடர்பையும் அவர்கள் சில நிமிடங்கள் இழந்தனர்.
விண்வெளி வீரர்கள் நிலவின் பின்புறம் சென்றபோது, இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 11:30 மணியளவில் நிலவு இந்தத் தொடர்பிற்கு இடையூறு ஏற்படுத்தியது.
விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் செய்யும் ரேடியோ மற்றும் லேசர் சிக்னல்களை நிலவு தடுத்தது.
சுமார் 40 நிமிடங்களுக்கு அந்த நான்கு விண்வெளி வீரர்களும் பூமியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனிமையில் இருந்தனர்.
பூமியுடன் மீண்டும் தொடர்பு கிடைத்த பிறகு, ஆர்டெமிஸ் மிஷன் நிபுணர் கிறிஸ்டினா கோச் முதலில் பேசினார்.
மீண்டும் பூமியிலிருந்து உங்கள் குரலைக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார்.
அதன்பின் விண்வெளி வீரர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு முழு சூரிய கிரகணத்தைக் கவனித்தனர்.
இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும், இது ஒரு அற்புதமான அனுபவம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
2) இதற்கு முன்பு எப்போதாவது இப்படி நடந்துள்ளதா?
கடந்த காலத்தில் அபோல்லோ விண்வெளி வீரர்களும் நிலவுப் பயணங்களின் போது சிக்னல்களை இழந்துள்ளனர். அபோல்லோ 11-இல் பயணம் செய்த மைக்கேல் காலின்ஸுக்கு இந்த அனுபவம் அதிகம்.
1969-இல் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவின் மேற்பரப்பில் முதல் தடம் பதித்து வரலாறு படைத்தபோது, நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த விண்கலனில் காலின்ஸ் தனியாக இருந்தார்.
விண்கலன் தள்ளிச் செல்லச் செல்ல, நிலவில் இருந்த குழுவினருடனும், பூமியில் உள்ளவர்களுடனும் இருந்த தொடர்பு 48 நிமிடங்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.
தனது புத்தகத்தில் அவர் இந்த அனுபவத்தை விவரித்துள்ளார். தான் மட்டும் தனியாக இருப்பது போன்ற உணர்வு இருந்ததாகவும், வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டது போலத் தோன்றியதாகவும், ஆனால் தனிமை என்ற உணர்வு வரவில்லை என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Nasa/Reid Wiseman
3) எதிர்கால நிலவுப் பயணங்களிலும் இந்தத் தடை ஏற்படுமா?
பூமியிலிருந்து விண்கலத்தின் தொடர்பைப் பராமரிப்பவர்களுக்கு இந்த 'பிளாக் அவுட்' நேரம் மிகுந்த பதற்றத்தை அளிக்கும்.
பிரிட்டனின் கார்ன்வாலில் இருக்கும் கூன்ஹில்லி எர்த் ஸ்டேஷனின் பிரம்மாண்ட ஆன்டெனா, ஓரியன் விண்கலத்திலிருந்து சிக்னல்களைச் சேகரித்தது. அதன் பயணத்தைக் கவனமாக கண்காணித்து, அது எங்கே இருக்கிறது என்பது குறித்த தகவலை நாசா தலைமையகத்திற்கு அனுப்பியது.
"மனிதர்கள் இருக்கும் விண்கலத்தை நாங்கள் பின்தொடர்வது இதுவே முதல் முறை," என்று கூன்ஹில்லியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மேட் காஸ்பி பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், எதிர்காலத்தில் இப்படித் தகவல் தொடர்பு இல்லாமல் போகாது என்று நம்பப்படுகிறது. நாசா மற்றும் பிற விண்வெளி நிறுவனங்கள் நிலவில் தளம் அமைக்கவும், பிற ஆராய்ச்சிகளுக்கும் இது அவசியம் என்று காஸ்பி கூறினார்.
"நிலவில் நிலையான ஆராய்ச்சிகள் நடக்க வேண்டுமானால், தகவல் தொடர்பு முழுமையாக இருக்க வேண்டும். நாள் முழுவதும் தொடர்பு இருக்க வேண்டும். நிலவின் பின்புறத்தில் இருந்தாலும் தொடர்பு இருக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், NASA
4) பூமியுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டபோது விண்வெளி வீரர்கள் என்ன செய்தார்கள்?
ஐரோப்பிய விண்வெளி முகமையின் 'மூன்லைட்' போன்ற திட்டங்கள், எதிர்காலத்தில் தடையற்ற மற்றும் நம்பகமான தகவல் தொடர்பிற்காக நிலவைச் சுற்றி செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.
ஆர்டெமிஸ் விண்வெளி வீரர்களைப் பொறுத்தவரை, பூமியுடன் தொடர்பில் இல்லாத நேரத்தில் அவர்கள் தங்கள் முழு கவனத்தையும் நிலவின் மீது செலுத்தினர்.
நிலவை உற்று நோக்கவும், ஆய்வு செய்யவும் அவர்கள் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். புகைப்படங்களை எடுத்தனர். நிலவின் மேற்பரப்பைப் ஆய்வு செய்தனர். அதன் அழகை ரசித்தனர்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை