இரானில் வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த வீரரை தேடும் போட்டியில் அமெரிக்கா, இரான்

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன (விளக்கப் படம்)
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரானியப் படைகளே அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இரானின் அரசு ஊடகம் உரிமை கோருகிறது.

முன்னதாக, தெற்கு இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) போர் விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்த இரண்டாவது நபருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இரான் பாதுகாப்பு படைகள் காணாமல் போன நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக இரான் அரசு ஊடகம் கூறியுள்ளது.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

இரானால் 'எதுவும் செய்ய முடியாது' என கூறிய டிரம்ப்

எஃப்-15 குழுவினரை மீட்க முயன்றபோது ஏ-10 வார்தாக் (A-10 Warthog) மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உட்பட மேலும் இரண்டு அமெரிக்க விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக சிபிஎஸ் தெரிவிக்கிறது.

இந்தப் போரில், இரான் வான்வெளியில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறியப்படுவதில் இதுவே முதல் சம்பவமாகும். மேலும், அமெரிக்க விமானங்கள் இரானுக்கு மேல் பறக்கும், ஆனால் இரானால் 'எதுவும் செய்ய முடியாது' என்று டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.

அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போரை முடிவுக்குக் கொண்டுவர இரானுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக என்பிசி நியூஸ் தெரிவிக்கிறது.

ஒரு குறுகிய தொலைபேசி நேர்காணலில், இந்த நிகழ்வுகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அமெரிக்க அதிபரிடம் கேட்கப்பட்டதாக என்பிசி நியூஸ் கூறுகிறது. அதற்கு அவர், "இல்லை, இல்லவே இல்லை. இது போர். நாம் போரில் இருக்கிறோம்," என்று பதிலளித்தார்.

பட மூலாதாரம், State media

படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில் காணப்படும் பாகங்கள், அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் ரக விமானத்தைச் சேர்ந்தவை என்பதை நிபுணர்களிடம் பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது.

'விளைவுகள் மோசமாக உள்ளன'

அயோன் வெல்ஸ்

பிபிசி செய்தியாளர்

இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தச் சம்பவத்தின் விளைவுகள் தொடக்கத்தில் நினைத்ததை விட மோசமாக உள்ளன.

எஃப்-15இ (F-15E) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மட்டுமின்றி, வீழ்த்தப்பட்ட விமானத்தைத் தேடும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஏ-10 வார்தாக் விமானமும் சுடப்பட்டு சேதமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

எஃப்-15இ விமானத்திலிருந்து வெளியேறிய ஒரு விமானி வெற்றிகரமாக மீட்கப்பட்டார். மீட்புப் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்களும் பங்கேற்று, வெளியேறிய எஃப்-15இ விமானியை மீட்டன, ஆனால் இரண்டாவது நபரைத் தேடும் பணி தொடர்கிறது.

மீட்கப்பட்ட விமானியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மீது சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அதிலிருந்த குழுவினர் காயமடைந்தனர்.

இரானால் தனது வான்வெளியில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் குறித்து எதுவும் செய்ய முடியாது என்ற டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்துள்ள போதிலும், ஆபத்துகள் இன்னும் அதிகமாகவே உள்ளன என்பதை இவை அனைத்தும் காட்டுகின்றன.

அமெரிக்க 'விமானியை' தேடும் இரான்

கோன்ஷே ஹபிபியாசாத்

மூத்த செய்தியாளர், பிபிசி பாரசீக சேவை

அமெரிக்கா, தனது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தின் 'காணாமல் போன விமானியை' தேடும் பணிகள் இன்னும் முழு வீச்சில் தொடர்வதாக இரானின் தெற்கு கோகிலுயே-போயரஹ்மத் மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இரானின் அரசு ஆதரவு செய்தி முகமையான ஃபார்ஸ் (Fars) செய்தியின்படி, "காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்கான, காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் மக்களின் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன" என்று மாகாண துணை ஆளுநர் கூறியதுடன், 'காணாமல் போன விமானி' பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு அப்பகுதி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

விமானம் சரியாக எங்கே சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், இரானின் அரசு ஊடகங்களில் இதுவரை இரண்டு மாகாணங்களின் பெயர்கள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன - அவை கோகிலுயே-போயரஹ்மத் மற்றும் குசெஸ்தான்.

பட மூலாதாரம், Reuters

'போருக்கு எதிராக அமெரிக்க மக்களை மேலும் தூண்டிவிடக்கூடும்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கிரேஸ் எலிசா குட்வின்

பிபிசி செய்தியாளர், அமெரிக்கா

இரண்டு ராணுவ ஆய்வாளர்களிடம் பேசுகையில், அவர்கள் இரான் வான்வெளியில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது செயல்பாட்டு ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றாலும், இது போருக்கு எதிராக அமெரிக்க மக்களை மேலும் தூண்டிவிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.

"ஆரம்பத்திலிருந்தே இதுவொரு தவறான போர் என்றும், இது அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தேவையற்ற ஆபத்து என்றும், இது அமெரிக்க ராணுவ சக்தியின் தேவையற்ற பயன்பாடு மற்றும் அமெரிக்க ராணுவ வளங்களை இது வீணடிக்கிறது என்று வாதிடுபவர்களுக்கு - இந்தச் சம்பவம் வலு சேர்க்கிறது," என்று டிஃபென்ஸ் பிரையாரிட்டிஸ் சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரும் ராணுவப் பகுப்பாய்வு இயக்குநருமான ஜெனிபர் கவானாக் கூறுகிறார்.

இந்த சிந்தனைக் குழு கட்டுப்பாடுகளுடன் கூடிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறது.

இந்தச் சம்பவம், தற்போதைக்கு, டிரம்ப் போரைக் கைவிடுவதை 'அரசியல் ரீதியாக அடிப்படையில் சாத்தியமற்ற ஒன்றாக மாற்றுகிறது' என்று அவர் கூறுகிறார்.

ஏனென்றால், போர் வெற்றி குறித்த தனது கூற்றுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமெரிக்க அதிபருக்கு வேறு ஏதேனும் தேவைப்படுகிறது, ஆனால் இந்தச் சம்பவம் அத்தகைய ஒன்றல்ல என்று ஜெனிபர் கூறுகிறார்.

'தி வாஷிங்டன் இன்ஸ்டிடியூட்' சிந்தனைக் குழுவின் ராணுவ உத்தி நிபுணரும் ஆய்வாளருமான ஜேம்ஸ் ஜெஃப்ரி பேசுகையில், "இந்தத் துயரச் சம்பவத்தின் விளைவாக, போர் குறித்த தங்களது கோபம் தற்போது மேலும் அதிகரித்துள்ளதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுவார்கள்" என்கிறார்.

"இது உண்மையில் ஒரு கவலைக்குரிய விஷயம், ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் உணர்கிறார்கள்," என்று ஜெஃப்ரி கூறுகிறார்.

"பெரும்பாலான நவீன நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கர்கள் தங்களது ராணுவ வீரர்களை அதிகமாக நேசிக்கிறார்கள்."

ஆனால், ''பொதுமக்களின் கவலை, டிரம்ப் போரை எவ்வாறு கையாள்கிறார் என்பதையோ அல்லது அவர் அடுத்ததாக எடுக்கப்போகும் நடவடிக்கைகளையோ பாதிக்காது'' என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, F-15 போர் விமானம் (விளக்கப் படம்)

அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவங்கள்

கடந்த சில தசாப்தங்களில் எதிரிப் படைகளால் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்து வருகிறது.

மார்ச் தொடக்கத்தில், குவைத்துக்கு மேலே மூன்று அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானங்கள் நட்பு நாட்டுப் படையின் தவறுதலான தாக்குதல் காரணமாக வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CentCom) தெரிவித்தது. இந்தச் சம்பவத்தில் விமானங்களில் இருந்த ஆறு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது.

மார்ச் 12 அன்று மேற்கு இராக்கில் நடந்த மற்றொரு சம்பவத்தில், அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் இருந்த ஆறு பேரும் கொல்லப்பட்டதாக சென்ட்காம் (CentCom) தெரிவித்தது.

7 ஏப்ரல் 2003 அன்று, 'இராக் சுதந்திர நடவடிக்கையின்' (Operation Iraqi Freedom) போது இராக்கிற்கு மேலே பறந்த ஒரு அமெரிக்க எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானி எரிக் தாஸ் மற்றும் ஆயுத அதிகாரி வில்லியம் வாட்கின்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க கடற்படை நினைவு இணையதளத்தின்படி, இராக்கின் டிக்ரிட் அருகே உள்ள இலக்குகளைத் தாக்கும் ஒரு முக்கியமான பணியை மேற்கொள்வதற்காக, அந்த விமானம் கத்தாரில் உள்ள அல் உதைத் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டது.

அமெரிக்க விமானப்படையின் கூற்றுப்படி, 8 ஏப்ரல் 2003 அன்று இராக்கின் பாக்தாத்தில், தரையிலிருந்து வான்நோக்கி பாயும் ஏவுகணை மூலம் அமெரிக்காவின் ஏ-10 தண்டர்போல்ட் II (A-10 Thunderbolt II) விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக விமானி பாதுகாப்பாக வெளியேறினார்.

மற்றொரு எஃப்-15இ (F-15E) போர் விமானம் மார்ச் 2011இல் வடகிழக்கு லிபியாவில் விழுந்து நொறுங்கியது. விமானியை மீட்பதற்காக நான்கு விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டதாக அமெரிக்க கடற்படை அப்போது தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு