You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வங்கதேசத் தேர்தலில் பிஎன்பி வெற்றி - இந்தியாவுடனான உறவு என்னவாகும்?
வங்கதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுத்தேர்தலில், வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 2024 மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், ஜனநாயகப் பாதைக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் இத்தேர்தல் நடைபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், நீண்டகாலமாக லண்டனில் இருந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பிய அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக வாய்ப்புள்ளது. முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகனான தாரிக், கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்.
இந்தத் தேர்தல் முடிவு இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் உறவில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துத் தெரிவித்து, இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிஎன்பி பாரம்பரியமாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டினாலும், பிராந்திய சக்தியான இந்தியாவைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளது. எனவே, தனது வெளியுறவுக் கொள்கையைச் சமநிலைப்படுத்த வேண்டிய சவாலை தாரிக் ரஹ்மான் எதிர்கொள்வார் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு