You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடல் புற்றுநோய் பாதிப்பு இளைஞர்களிடையே அதிகரிப்பது ஏன்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்
அமெரிக்காவின் பதின்ம வயதினருக்கான 'டாசன்ஸ் கிரீக்' (Dawson's Creek) தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக், குடல் புற்றுநோயால் தனது 48 வயதில் காலமானார்.
"நமது அன்பிற்குரிய ஜேம்ஸ் டேவிட் வான் டெர் பீக் இன்று காலை காலமானார்" என்று அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
"அவர் தனது இறுதி நாட்களை தைரியம், நம்பிக்கை மற்றும் கண்ணியத்துடன் எதிர்கொண்டார்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நவம்பர் 2024-இல் அவர் இந்தச் செய்தியைப் வெளிப்படுத்தினார்.
'பிசினஸ் இன்சைடர்' இதழுக்கு அளித்த பேட்டியில், தனது குடல் இயக்கங்களில் மாற்றங்களை முதன்முதலில் கவனித்ததாக அவர் கூறினார். இது குடல் புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு, அவர் ஆரம்பத்தில் காபி குடிப்பதை நிறுத்தினார்.
அந்தச் சோதனை அவருக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பதைக் காட்டியது, அதாவது அது அருகிலுள்ள நிணநீர் மண்டலத்திற்கும் பரவியிருந்தது.
இதனால் பாதிக்கப்பட்டது வான் டெர் பீக் மட்டுமல்ல. குடல் புற்றுநோய் (பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது) பாதிப்பு இளைஞர்களிடையே அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
குடல் புற்றுநோய் என்றால் என்ன?
குடல் புற்றுநோய் பெருங்குடல் அல்லது மலக்குடலின் உட்புறத்தில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சியில் இருந்து உருவாகிறது. அது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பரவக்கூடும்.
பரிசோதனை முறைகள் ஆரம்பகால கண்டறிதலை மேம்படுத்தி மரணங்களைக் குறைத்துள்ளன. ஆனால் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இடையே பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்:
- உங்கள் மலத்தில் ரத்தம் வருதல்
- அடிக்கடி கழிவறைக்குச் செல்வது அல்லது உங்கள் மலம் அதிக திரவமாகவோ அல்லது கடினமாகவோ மாறுவது
- தொடர்ச்சியான வயிற்று வலி அல்லது வீக்கம்
பிற அறிகுறிகளில் விவரிக்க முடியாத எடை இழப்பு, சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் உங்கள் குடல் முழுமையாக காலியாகாதது போன்ற உணர்வு ஆகியவை அடங்கும்.
இந்த அறிகுறிகள் இருப்பதனால் மட்டுமே புற்றுநோய் என்று அர்த்தமல்ல. இருப்பினும், நிபுணர்கள் இந்த அறிகுறிகள் மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடித்தால் அல்லது ஏதேனும் சரியாக இல்லை என்று தோன்றினால் மருத்துவ உதவியை நாட அறிவுறுத்துகிறார்கள்.
தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு குடல் அடைப்பு ஏற்படலாம், இது கடுமையான வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது.
குடல் புற்றுநோய் பெரும்பாலும் குணப்படுத்தக் கூடியது. குறிப்பாக, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக் கூடியது.
சிகிச்சை மாறுபடும். ஆனால், அது தனிப்பட்ட பாதிப்பைப் பொறுத்து அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கியிருக்கலாம்.
'பிரிட்டன் புற்றுநோய் ஆய்வு' (Cancer Research UK) அமைப்பின் படி, ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உயிர்வாழ்கின்றனர். இதுவே கடைசி கட்டத்தில் கண்டறியப்படும் போது 44 சதவிகிதமாக உள்ளது.
இளம் வயதினரிடையே பாதிப்பு அதிகரிப்பு
"பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இடையே குடல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது, இது மென்மேலும் ஒரு பிரச்னையாக மாறி வருகிறது," என்று பிரிட்டனின் புனித மார்க்ஸ் மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவரும் ஆலோசகருமான பேராசிரியர் கெவின் மொனாஹன் பிபிசிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
"புற்றுநோய்களை நாம் திறம்பட தடுப்பதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
2017 வரையிலான உலக சுகாதார அமைப்பின் தரவுகளைப் பயன்படுத்தி அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தலைமையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, சமீபத்தில் 'தி லான்செட்' இதழில் வெளியிடப்பட்டது. இது ஆய்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் 27 நாடுகளில் இளம் வயதினரிடையே குடல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதைக் கண்டறிந்துள்ளது. முதல் முறையாக, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இவை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், இளைஞர்களிடையே இந்த நோய் இன்னும் அரிதாகவே உள்ளது.
இந்த அதிகரிப்புக்குத் தெளிவான விளக்கம் எதுவும் இல்லை. உடல் பருமன், அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், குடல் நுண்ணுயிரிகளில் ஏற்படும் மாற்றங்கள், காற்று மாசுபாடு மற்றும் நுண் நெகிழிகள் ஆகியவை சாத்தியமான காரணிகளாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், பல காரணிகள் நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்:
- வயது (பெரும்பாலான பாதிப்புகள் இன்னும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடமே கண்டறியப்படுகின்றன)
- சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் உட்கொள்ளுதல்
- புகைபிடித்தல்
- அதிகப்படியான மது பயன்பாடு
- உடல் பருமன்
- குடல் பாலிப்கள்(bowel polyps) பாதிப்பு இருந்த வரலாறு
பெரும்பாலான குடல் புற்றுநோய்கள் பரம்பரையாக வருவதில்லை. இருப்பினும், லிஞ்ச் சிண்ட்ரோம் போன்ற சில மரபணு நிலைகள் ஆபத்தைக் கணிசமாக அதிகரிக்கின்றன.
வழக்கமான உடற்பயிற்சி, அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவு, ஒரு நாளைக்கு ஆறிலிருந்து எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது மற்றும் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகளை தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பாதிப்பு அதிகரிப்பதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள, புனித மார்க்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு நூற்றாண்டு வரை சேமித்து வைக்கப்பட்ட குடல் புற்றுநோய் மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட திசுக்கள், இப்போது மேம்பட்ட மூலக்கூறு நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுகின்றன. இது ஏன் அதிகமான இளைஞர்களுக்குப் பாதிப்பு கண்டறியப்படுகிறது என்பதை விளக்க உதவக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு