டிரம்பின் அழுத்தம் ஹோஸ்மூஸில் இரானின் பிடியை மேலும் அதிகரித்துள்ளதா?
பட மூலாதாரம், EPA
- எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
- பதவி, பாதுகாப்பு செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் இல்லை என இரான் கூறியுள்ளது.
அமெரிக்கா–இரான் பேச்சுவார்த்தை நடந்தாலும் கூட, அதில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
எட்டு நாட்களுக்கு முன்பு இஸ்லாமாபாத் நகரில் இருந்த சிறிய நம்பிக்கை கூட இப்போது மேலும் குறைந்துவிட்டது.
ஏனெனில், அமெரிக்கா தனது கடற்படை மூலம் பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள இரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிட்டு
போர்நிறுத்தத்தை மீறியதாக இரான் குற்றம் சாட்டுகிறது.
அதே போல முற்றுகையை கடந்து செல்ல முயன்ற இரான் கொடி ஏந்திய கப்பலை அமெரிக்க படைகள் தடுத்து கைப்பற்றிய சம்பவத்தை இரான் கண்டித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகள், இரு தரப்பும் ஒரே நிலைப்பாட்டுக்கு வந்து இந்த மோதலை முடிக்க உதவும் சூழலை உருவாக்குவதற்கு சாதகமாக இல்லை.
டிரம்பின் நோக்கம், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் இரானின் பொருளாதாரத்துக்கு மேலும் அழுத்தம் கொடுத்து, அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இரான் இணங்கும் வகையில் கட்டாயப்படுத்துவதாகும்.
இதில் அணு பிரச்னையும், ஹோஸ்மூஸ் நீரிணை பற்றிய கட்டுப்பாடும் அடங்கும்.
சில ஆய்வாளர்கள் இது அமெரிக்காவுக்கு சாதகமாக வேலை செய்யலாம் என்று நம்புகிறார்கள். ஆனால், இவ்வாறு வெளிப்படையான அழுத்தத்திற்கு இரான் பொதுவாக எதிர்பார்க்கப்படும் விதத்தில் பதிலளிப்பது அரிது.
மாறாக, அது தனது நிலைப்பாட்டை மேலும் கடினப்படுத்தி, ஹோஸ்மூஸ் நீரிணை மீது கட்டுப்பாடு செலுத்துவது தனது "இறையாண்மை உரிமை" என்று வலியுறுத்துகிறது.
பட மூலாதாரம், Centcom
ஹோர்மூஸ் நீரிணை ஸ்தம்பித்துள்ளது
ஹோர்மூஸ் நீரிணையில் நடைமுறையில் ஒரு இரட்டை முற்றுகை நிலவுகிறது.
அந்த முக்கிய நீர்வழிப்பாதையை கடக்க முயலும் எந்தவொரு கப்பலையும் தாங்கள் குறிவைப்பதாக இரானியர்கள் கூறுகின்றனர்; அதே நேரத்தில் அமெரிக்கர்கள் இரானின் அனைத்து வளைகுடா துறைமுகங்கள் மீதும் தங்கள் கடற்படை முற்றுகையை நடத்தி வருகின்றனர்.
சாதாரண காலங்களில், எண்ணெய், எரிவாயு, உரம் மற்றும் பிற பொருட்களைச் சேகரிக்க சுமார் 140 கப்பல்கள் இரு வழிகளிலும் இந்த நீரிணை வழியாகச் செல்லும்.
ஆனால் மோதல் தொடங்கியதில் இருந்து மிகக் குறைந்த அளவிலான கப்பல்களே கடந்து செல்கின்றன. அனைத்து கடல்சார் போக்குவரத்தும் தாங்கள் நிர்ணயித்த ஒரு புதிய பாதையில் செல்ல வேண்டும் என்றும், அதை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை ஆய்வு செய்யும் என்றும், சில சந்தர்ப்பங்களில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இரான் வலியுறுத்துகிறது.
சர்வதேச கப்பல் போக்குவரத்து சமூகத்திற்கு இது ஏற்புடையதாக இல்லை. அமெரிக்காவும் இரானும் பேச்சுவார்த்தைக்கு உடன்படும் வரை அனைத்தும் ஸ்தம்பித்து இருக்கும்,
அமெரிக்க கடற்படை முற்றுகைக்கும் இரானின் நீரிணை மூடுதலுக்கும் இடையிலான வேறுபாடு
இரான்
நாட்டின் உயரிய பாதுகாப்பு அமைப்பான இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில், சனிக்கிழமை, "போர் திட்டவட்டமாக முடிவுக்கு வரும் வரை மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்படும் வரை ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை கண்காணிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இரான் உறுதியாக உள்ளது" என்று அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தது.
கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து முழுமையான தகவல்களைச் சேகரித்தல், போக்குவரத்துச் சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் "பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவைகளுக்காக" சேவை கட்டணங்களைச் செலுத்துமாறு கோருதல் ஆகியவற்றின் மூலம் இது செய்யப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா
டொனால்ட் டிரம்ப் முதலில் அமெரிக்க முற்றுகையை அறிவித்தபோது, "ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழைய அல்லது வெளியேற முயற்சிக்கும் அனைத்து கப்பல்களுக்கும்" இது பொருந்தும் என்று கூறினார்.
நீரிணையைக் கடக்க இரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தும் சர்வதேச கடல் பகுதியில் உள்ள "ஒவ்வொரு கப்பலையும் இடைமறிக்க" கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் அமெரிக்க முற்றுகை குறித்த அமெரிக்க ராணுவத்தின் விளக்கம் வேறு விதமாக இருந்தது. அது இரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதில் கவனம் செலுத்தியது, மற்றவர்கள் நீரிணை வழியாக செல்வதைக் கட்டுப்படுத்தவில்லை.
இரான் அல்லாத துறைமுகங்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் அல்லது திரும்புக் கப்பல்களின் "போக்குவரத்து சுதந்திரத்தை அது தடுக்காது" என்று அது கூறியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை