You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓ.பன்னீர் செல்வம் எடுத்த திமுக ஆதரவு நிலைப்பாட்டால் யாருக்கு பலன்?
"வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வரவேண்டும் என எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு கூறுகிறேன்" என வெள்ளிக்கிழமையன்று சட்டமன்றத்தில் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான அய்யப்பன் பேசினார்.
இந்தக் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதையே அய்யப்பன் பேசியதாக செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆனால், 'இந்தக் கருத்தால் அ.தி.மு.கவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை' என அக்கட்சியின் நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் கூறினர்.
தி.மு.க ஆதரவு நிலையை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பது ஏன்? இதனால் தென்மாவட்டங்களில் ஏதேனும் தாக்கம் ஏற்படுமா?
'மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர்'
வெள்ளிக்கிழமை சட்டமன்றம் தொடங்கிய பிறகு பன்னீர்செல்வம் ஆதரவாளரும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏவுமான அய்யப்பன் பேசினார்.
அப்போது, "வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வரவேண்டும் என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடனும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாழ்த்துகளுடன் இதைக் கூறுகிறேன்" என அய்யப்பன் பேசினார்.
இதற்கிடையே சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் - ஓ.பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்பும் நடந்தது.
ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன?
சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
"சிறப்பாக ஆட்சிக்கு அவரை (மு.க.ஸ்டாலின்) சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன்" எனக் கூறினார்.
அய்யப்பனின் பேச்சு குறித்துப் பதில் அளித்த அவர், "தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதை அவர் கூறியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் நிலை, இந்த நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் எல்லாம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
"மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு தி.மு.கவுக்கு உள்ளது" எனக் கூறிய பன்னீர்செல்வத்திடம், "தை பிறந்தால் வழிபிறக்கும் என கூறினீர்களே?" எனக் கேட்டபோது, "தமிழகத்துக்கே வழிபிறந்துள்ளது" என்று மட்டும் பதில் அளித்தார்.
'ஜூலை சந்திப்பு'
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உடன் சென்று ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது இந்த சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டது.
சுமார் அரைமணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நீடித்தது. ஆனால், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" என செய்தியாளர்களிடம் அவர் விளக்கம் அளித்தார்.
"முதலமைச்சர் ஸ்டாலின் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை" எனவும் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
'தி.மு.கவுடன் கூட்டணி வைப்பீர்களா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை. நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்" எனப் பதில் கொடுத்தார்.
இந்தச் சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தான் விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
"கூட்டணியில் இருந்து விலகிய பிறகு என்னிடம் பா.ஜ.கவினர் பேசவில்லை. அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உள்ளது" எனவும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
நிராகரிக்கப்பட்ட ஓ.பி.எஸ் கோரிக்கை
இதன்பிறகு, 'அ.தி.மு.கவில் பிரிந்துகிடக்கும் சக்திகள் எல்லாம் ஒன்று சேர வேண்டும்' எனத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். கடந்த ஜனவரி மாதம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை வலியுறுத்தினார்.
அ.தி.மு.கவும் அ.ம.மு.கவும் கூட்டணி வைத்துள்ளதை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், "அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் தினகரனும் ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள் நினைத்தால் நான் இணையலாம்" எனப் பேசினார்.
"இந்த வேலையைச் செய்தால் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றியடையும். எனது கோரிக்கையில் இருந்து தினகரன் மாறுபட மாட்டார்" எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்பதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான்கு வருடங்களாக அவர் கேட்டு வருகிறார். அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார்" எனக் கூறினார்.
இது கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவு எனத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, "அவரைக் கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. கட்சிக்கு துரோகம் இழைத்த காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
எச்சரித்த தினகரன்
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதியன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக எச்சரித்தார்.
"அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள். அப்படி இல்லையென்றால் அவர்களின் முகத்திரை கிழிந்துவிடும்" என தினகரன் தெரிவித்தார்.
"கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என யார் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் எனப் பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டை பன்னீர்செல்வம் எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தென்மண்டலத்தில் தாக்கம் ஏற்படுமா?
"இந்த நிலைப்பாட்டின் மூலம் அரசியல் ரீதியாக பன்னீர்செல்வத்துக்கு எழுச்சியைக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
"அவரது இந்த முடிவால் தென்மாவட்டங்களில் தி.மு.கவின் பலம் அதிகரிக்கலாம். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுக்கும் வகையில் இப்படியொரு முடிவை பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"தென்மண்டலத்தில் இதனால் எந்தவித சலனமும் ஏற்படப் போவதில்லை" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "இதனால் களத்தில் எந்தவித விளைவுகளும் ஏற்படாது. பன்னீர்செல்வத்தால் தி.மு.கவுக்கு எந்தவித லாபமும் இல்லை" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக பன்னீர்செல்வம் கூறியுள்ளதை மேற்கோள் காட்டிய குபேந்திரன், "அப்படியானால் தி.மு.கவில் அவர் பேசி முடித்துவிட்டதாகக் கருத வேண்டியுள்ளது. அவருக்கு கட்சியிலும் சட்டமன்றத்திலும் ஒரு பதவி தேவைப்படுவதாகவே பார்க்கிறேன்" என்கிறார்.
"அரசியலில் பன்னீர்செல்வம் அடைந்துள்ள உயரமும் பதவிகளும் அ.தி.மு.க என்ற கட்சியால் வந்தது" எனக் கூறும் குபேந்திரன், "தனது ஆதரவாளர்களுடன் மொத்தமாக தி.மு.கவில் சேர்ந்தால் சீட் கிடைக்காது என்பதால் முதலில் மனோஜ் பாண்டியனையும் பிறகு வைத்திலிங்கத்தையும் அனுப்பி வைத்ததாக இதைப் பார்க்க வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார்.
'அ.தி.மு.கவுக்கு பாதிப்பு இல்லை'
பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு குறித்து அ.தி.மு.க நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் பேசியது.
"கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டுவிட்டார். அவர் அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இல்லை. அவருடன் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் இணைந்து பயணம் செய்கிறார். அவருக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை" எனக் கூறுகிறார்.
"ஒருங்கிணைப்பாளர் பதவியில் பன்னீர்செல்வம் இருந்தபோதும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. தி.மு.க ஆட்சியைப் பாராட்டி அவர் கூறும் கருத்துகளால் அ.தி.மு.கவுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை" எனவும் பாபு முருகவேல் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு