நேரலை, "வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க ரூ.8,000 கூப்பன்" - திமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது?
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் தவெக தலைவர் வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார்.
"வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க ரூ.8,000 கூப்பன்" - திமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது?
பட மூலாதாரம், MK Stalin/X page
திமுக 2026 தேர்தல் அறிக்கையில் பல சமூக நல மற்றும் பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை ஆகியவை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், 10 லட்சம் வீடுகள் கட்டுதல், விவசாயிகளுக்கு ஆதரவு, உரம் மற்றும் பயிர் விலை உயர்வு போன்றவை இடம்பெற்றுள்ளன. மருத்துவ காப்பீடு மற்றும் கல்வி தொடர்பான நலன்களும் அதிகரிக்கப்படுகின்றன.
மேலும், பெண்கள் சுயஉதவி குழுக்கள், மீனவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஆதரவும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை ஜனாதிபதி
பட மூலாதாரம், ISHARA S. KODIKARA/AFP via Getty
இந்தியாவிலிருந்து எரிபொருள் உதவி வழங்கப்பட்டதற்காக, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனது அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சில நாட்களுக்கு முன்பு, நான் பிரதமர் நரேந்திர மோதியுடன் தொலைபேசியில் உரையாடினேன்; மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக இலங்கைக்கு ஏற்படும் எரிபொருள் விநியோகத் தடங்கல்கள் குறித்து நாங்கள் கலந்தாலோசித்தோம்," என்று இலங்கை ஜனாதிபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்தியாவிலிருந்து உடனடியாகக் கிடைத்த உதவிக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 38 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் நேற்று கொழும்பை வந்தடைந்தது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கும் எனது நன்றிகள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜயுடன் மோதும் வேட்பாளர்கள் யார்?
பட மூலாதாரம், TVK
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான ஆர்.டி.சேகரும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெற்றி தமிழனும் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கப்படவில்லை.
விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ.வான இனிகோ இருதயராஜும், அதிமுக சார்பில் ராஜசேகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
படக்குறிப்பு, சிபிஐ மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன்
திமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் இம்முறை 5 இடங்களில் களம் காண்கிறது. இந்த 5 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டார்.
தொகுதி - வேட்பாளர் பட்டியல்:
தளி - ராமச்சந்திரன்
திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து
திருப்பூர் வடக்கு - ரவி
ஶ்ரீவில்லிபுத்தூர் - மகாலிங்கம்
பவானி சாகர் - சுந்தரம்
இளைஞர்களுக்கான உத்தரவாதம் - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்
பட மூலாதாரம், TVK
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்து வருகிறார்.
தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த விஜய், தவெகவின் மற்ற மூத்த நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்தார்.
முன்னதாக இளைஞர்களுக்கான தேர்தல் உத்தரவாதங்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை விஜய் வெளியிட்டார். அதில் சில முக்கிய அறிவிப்புகளை குறிப்பிட்டிருந்தார்.
விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்.
20 லட்சம் வரை பிணையம் இல்லா கடன் உத்தரவாதம் கொடுக்கப்படும்.
அனைத்து மாநில அரசு பணியிடங்களுக்கும் ஆட்சேர்ப்பு கால அட்டவணை வெளியிடப்படும்.
அனைத்து ஆட்சேர்ப்பு பணிகளும் 365 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதி - பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும்.
ஆண்டுதோறும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் உருவாக்கப்படும்.
வெற்றி தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 75% பணியாளர்களை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு
தமிழ்நாடு படைப்பாளர் தொழில்முனைவு திட்டம் - 1,50,000 படைப்பாளர்களுக்கு தொடக்க மூலதனம் வழங்கப்படும், 500 படைப்பாளர் பள்ளிகள் நிறுவப்படும்.
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு - விஜய் 2 தொகுதிகளில் போட்டி
பட மூலாதாரம், TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
அதற்கு முன்பாக மேடையில் பேசிய விஜய், "தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி எல்லாம் இல்லை, இந்த தேர்தலில் இருமுனை போட்டி தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் தான் போட்டி. திமுகவுக்கு தவெகவுக்கும் தான் போட்டி." என்றார்
பின்னர் வேட்பாளர் பட்டியலை அறிவித்த விஜய், தான் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
இதர தவெக நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள்:
தியாகராயர் நகர் - என்.ஆனந்த்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜூனா
கோபிசெட்டிபாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
திருச்செந்தூர் - அருண் ராஜ்
எழும்பூர் - ராஜ்மோகன்
திருப்பரங்குன்றம் - சிடிஆர் நிர்மல்குமார்
இஸ்ரேலை நோக்கி ஹூத்தி ஆயுதக்குழு ஏவுகணை தாக்குதல்
பட மூலாதாரம், Getty Images
ஏமனின் ஹூத்தி ஆயுதக்குழுவினர் இஸ்ரேலை நோக்கி இரண்டாவது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தகவலை சிஎன்என் மற்றும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியாக வெளியிட்டுள்ளன. எனினும் ஏமனிலிருந்து வந்த ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இரான் ஆதரவு பெற்ற இந்தக் குழுவினர் இஸ்ரேலை நோக்கி செலுத்திய ஏவுகணை சுட்டுவீழ்த்தப்பட்டது. முன்னதாக ஹூத்தி கிளர்ச்சி குழு இஸ்ரேலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியிருந்தது.
தெற்கு இஸ்ரேலின் எய்லட் நகரில் நிகழ்ந்த டிரோன் தாக்குதல் ஏமனால் மேற்கொள்ளப்பட்டது இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 மற்றும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 'முக்கியமான இஸ்ரேலிய ராணுவ நிலைகளை' இலக்கு வைத்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியதாக ஹூத்தி குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இதனை 'பதிலடி தாக்குதல்' எனக் குறிப்பிட்ட ஹூத்திக்கள், "முதலில் இரான், லெபனான், இராக் மற்றும் பாலத்தீன பிரதேசங்களை இஸ்ரேல் இலக்கு வைத்தது. அதற்குப் பதிலடியாக தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் அதிக தாக்குதல்களைச் சந்தித்த இரான்
பட மூலாதாரம், Getty Images
இரான் உடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து அதிக அளவிலான தாக்குதல்களை சனிக்கிழமை இரான் சந்தித்துள்ளது.
மார்ச் 28 அன்று மட்டும் குறைந்தபட்சம் 701 தாக்குதல்கள் பதிவானதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செய்தி முகமை தெரிவிக்கிறது.
போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக அளவிலான தாக்குதல்கள் பதிவானது சனிக்கிழமை தான் என அந்த முகமை குறிப்பிட்டுள்ளது.
அதன் அறிக்கைப்படி, இந்த தாக்குதல்களில் 74% இரான் தலைநகர் தெஹ்ரானில் நிகழ்ந்துள்ளன. இந்த மோதலில் தற்போது வரை 236 குழந்தைகள் உட்பட 1,551 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, இஸ்ரேலியப் படைகள் தனது அணுசக்தி நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது. (சித்தரிப்புப் படம்)
அமெரிக்காவும் இஸ்ரேலும் பொதுமக்களுக்கான கட்டமைப்புகள் மற்றும் மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.
இரானின் இரண்டு மிகப்பெரிய எஃகு ஆலைகள், ஒரு மின் நிலையம் மற்றும் சிவில் பயன்பாட்டுக்கான அணுசக்தி தளங்கள் உள்ளிட்ட பிற கட்டமைப்புகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளதாகத் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவுடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபரால் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு எதிரானது” என அப்பாஸ் அராக்சி ஒரு எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
"தனது குற்றங்களுக்காக இஸ்ரேல் கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும், அதை இரான் உறுதி செய்யும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த 10 நாட்களுக்கு இரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலையும் தடுப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் டிரம்ப் இவ்வாறு கூறி 24 மணி நேரத்திற்குள்ளேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கூடுதலாக, இஸ்ரேலிய படைகள் இரானின் அரக் கனநீர் அணு உலையைத் தாக்கியுள்ளன. அந்த தளத்திற்கு அருகில் தீ மற்றும் புகை எழுவதைக் காட்டும் படங்களை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது.
அரக் அணு உலை இன்று (மார்ச் 28) இரண்டு முறை தாக்கப்பட்டதாக இரானின் அணுசக்தி முகமை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், "இரானுடன் இந்த வாரம் ஒரு சந்திப்பு நடக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் நேயர்களே!
இன்று (29-03-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது மோகன்
‘தோனி 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார்’- சிஎஸ்கே நிர்வாகம்
பட மூலாதாரம், CSK /X
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இன்று (மார்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, முதல் இரண்டு வாரங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனிக்கு ஏற்பட்டுள்ள கால் தசைப்பிடிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தள பதிவு மூலம் தெரிவித்துள்ளது.
"எம்.எஸ். தோனி தற்போது கால் தசைப்பிடிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதன் விளைவாக, அவர் ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளது. அவர் விரைவில் குணமடைய விரும்புகிறோம்" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூறியுள்ளது.
2026 ஐபிஎல் தொடரில், சென்னை அணி மார்ச் 30ஆம் தேதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
வணக்கம் நேயர்களே!
இன்று (28-03-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது சிராஜ்.
இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் இந்தியா
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, இரான் போருக்கு நடுவே இந்தியாவுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு எரிபொருள் எடுத்து வந்த நந்தாதேவி கப்பல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தியாவினால் எரிபொருள் வழங்கப்படுகிறது.
இதன்படி, எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று நாளைய தினம் (மார்ச் 28) கொழும்பை வந்தடையவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையம் அறிவித்துள்ளது.20000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18000 மெட்ரிக் டன் பெட்ரோல் என 38000 மெட்ரிக் டன் எடையுடைய எரிபொருளுடன் இந்த கப்பல் மார்ச் 28-ஆம் தேதி இலங்கை சென்றடைய உள்ளது.
இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்த போரால், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து ஏற்பட்ட நெரிசலை குறைப்பதற்காக இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வாராந்திர கோட்டா அடிப்படையில் கியூஆர் (QR) முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த செவ்வாய்கிழமை தொலைபேசி வழியே பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையை அடுத்தே, இலங்கையின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையம் குறிப்பிடுகின்றது.
போர் காரணமாக வளைகுடாவிலிருந்து எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்மூஸ் நீரிணையை இரான் மூடியது. எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த நீரிணை வழியே எரிபொருள் போக்குவரத்தை அனுமதிப்பதாக இரான் கூறியுள்ளது.
நேபாளத்தின் புதிய பிரதமர் பாலேன் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் மோதி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நேபாள பிரதமர் பாலேன் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோதி
நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேன் ஷாவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேன் ஷாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
"உங்களது நியமனம், நேபாள நாட்டு மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நமது இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உங்களுடன் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவின் மேயராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஷா தேசிய சுதந்திரக் கட்சியுடன் (National Independent Party) கைகோர்த்து, இம்மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணையில் 3 கப்பல்களை திருப்பி அனுப்பிய இரான்
பட மூலாதாரம், Getty Images
ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற மூன்று கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாக இரான் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கப்பல்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு வழித்தடம் வழியாக, இன்று காலை மூன்று கப்பல்கள் செல்ல முயன்றதாக இரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியுள்ளது.
"வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று சரக்குக் கப்பல்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஐஆர்ஜிசி கடற்படை அவற்றுக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவை திருப்பி அனுப்பப்பட்டன," என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அதை மீறி ஏதேனும் கப்பல் உள்ளே நுழைந்தால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டிருந்தது.
"அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளிலுள்ள துறைமுகங்களிலிருந்து வரும் அல்லது அங்கு செல்லும் எந்தவொரு கப்பலும்,அனுமதிக்கப்படாது," என்று ஐஆர்ஜிசி கூறியுள்ளது.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இராக் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களை இதுவரை ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்துள்ளதாக, இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு அந்நாட்டுத் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.
இரானின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த நீரிணை முழுமையாக மூடப்படவில்லை என்றும், மாறாக அது "எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் - ஓ.பன்னீர் செல்வத்தின் போடி தொகுதி யாருக்கு?
பட மூலாதாரம், X/EDAPPADI PALANISAMY
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்னர்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐஜேகே (2), தமமுக (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் 25 வெளியிடப்பட்ட நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 27) அறிவித்துள்ளார்.
அதிமுகவின் இந்த இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் போடி நாயக்கனூர் தொகுதியில் வி.டி. நாராயணசாமியும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வி.பி. பிரபுவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் திமுகவிலும், செங்கோட்டையன் த.வெ.கவிலும் உள்ளனர்.
இந்த அறிவிப்பில் இருந்து, சில முக்கிய தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.
மாதவரம்- வி. மூர்த்தி, முன்னாள் அமைச்சர்
காஞ்சிபுரம்- வி. சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர்
ஓசூர்- பி. பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் அமைச்சர்
கீழ்பென்னாத்தூர்- எஸ். இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்
செய்யார்- முக்கூர் என். சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்
திருப்பூர் (வடக்கு)- எம்.எஸ்.எம். ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்
கிணத்துக்கடவு- செ. தாமோதரன், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்
பொள்ளாச்சி- பொள்ளாச்சி வி. ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்
கடலூர்- எம்.சி. சம்பத், முன்னாள் அமைச்சர்
விளாத்திகுளம்- ஆர். சத்யா
தூத்துக்குடி- சி.த. செல்லப்பாண்டியன், முன்னாள் அமைச்சர்
அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சர்
‘நேட்டோவிடமிருந்து அமெரிக்காவிற்கு எதுவும் தேவையில்லை’: டொனால்ட் டிரம்ப்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையை திறக்க உதவுவதற்காகத் தங்களது கடற்படைகளை அனுப்புமாறு உலக நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவின் மூலம் நேட்டோ அமைப்பை (NATO) விமர்சித்துள்ளார்.
அவர் அந்தப் பதிவில், "தற்போது ராணுவ ரீதியாக முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள ஒரு 'பித்துப்பிடித்த நாடான' இரானின் விஷயத்தில் நேட்டோ நாடுகள் நமக்கு சிறிதும் உதவவில்லை. அமெரிக்காவிற்கு நேட்டோவிடமிருந்து எதுவும் தேவையில்லை, ஆனால் இந்த முக்கியமான விஷயத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
'ஹோர்மூஸ் நீரிணையை' திறக்க கடற்படையை அனுப்புமாறு உலக நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
டொனால்ட் டிரம்ப் மார்ச் 14 அன்று ட்ரூத் சோஷியலில், "சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளும் இப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறேன், இதன் மூலம் முற்றிலும் அழிக்கப்பட்ட ஒரு நாட்டினால் ஹோர்மூஸ் நீரிணைக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது. எவ்வாறாயினும், நாம் விரைவில் ஹோர்மூஸ் நீரிணையை பாதுகாப்பானதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவோம்" என்று தெரிவித்தார்.
இரானின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல்
பட மூலாதாரம், Tasnim
படக்குறிப்பு, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "ஹோர்மூஸ் நீரிணையில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் நீரிணையைத் தடுத்தது போன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு டங்சிரி நேரடியாகப் பொறுப்பானவர்" என்றும், “டங்சிரி, குண்டு வீசி கொல்லப்பட்டார்" என்றும் தெரிவித்தார்.
மேலும், இரானின் பல மூத்த கடற்படைத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.
இரான் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அலிரேசா டங்சிரி 2018ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் 2010 முதல் ஐஆர்ஜிசி கடற்படையின் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
அவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு எக்ஸ் தள கணக்கு இந்த ஆண்டு மார்ச் 10 முதல் செயல்பாட்டில் உள்ளது, அதில் உள்ள பதிவுகளை இரானிய ஊடகங்கள் மேற்கோள் காட்டி வருகின்றன.
அந்தப் பதிவுகளில், அவர் ஹோர்மூஸ் நீரிணை பற்றி பலமுறை குறிப்பிட்டுள்ளார். "இரானுக்கு எதிராக போர் புரியும் நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலுக்கும் இதைக் கடந்து செல்ல உரிமை இல்லை" என்று அந்த கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டங்சிரி, வெளிப்படையாகப் பேசக்கூடிய ஓர் இரானிய தளபதி ஆவார். கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில், இரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டால் ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல சுங்க கட்டணம் வசூலிக்குமா இரான்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இரான் எவ்வளவு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு இரான் சுங்க வரி வசூலிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
இரானிய ஊடகங்களின்படி, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிப்பதற்கான சட்டத்தை அங்கீகரிப்பது குறித்து இரானிய நாடாளுமன்றம் (மஜ்லிஸ்) பரிசீலித்து வருகிறது.
இதன் பொருள், இந்த நீர்வழிப் பாதை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு இரான் இனி கட்டணம் வசூலிக்கக்கூடும்.
இரானிய நாடாளுமன்றத்தின் கட்டுமானக் குழுவின் தலைவர், "ஒரு வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அது இன்னும் மசோதாவாக மாறவில்லை" என்றார். இந்தப் பகுதியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே இந்த முன்மொழிவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், எவ்வளவு சுங்க வரி வசூலிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அரசு தொலைக்காட்சியின் நேர்காணலில் பேசுகையில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இராக் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கப்பல்களை இரான் இதுவரை கடந்து செல்ல அனுமதித்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இரானின் கண்ணோட்டத்தில், ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை, ஆனால் ‘எதிரிகளுக்கு மூடப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்களால் இருவர் உயிரிழப்பு
பட மூலாதாரம், Issam Rimawi/Anadolu via Getty Images
படக்குறிப்பு, புதன்கிழமை இரவு மேற்குக் கரைக்கு மேலே காணப்பட்ட ஒரு இரானிய ஏவுகணை. பல வளைகுடா நாடுகள், இரானின் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் குறித்துத் தெரிவித்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வானத்திலிருந்து விழுந்த பாகங்களால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அபுதாபி ஊடக அலுவலகத்தின்படி, வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல கார்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரான் தரப்பிலிருந்து புதிய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்திருந்ததுடன், இந்தத் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கூறியிருந்தது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (மார்ச் 25) இரவு முதல் தற்போது வரை, நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குறைந்தது மூன்று முறை தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட்டது.
அபுதாபியிலிருந்து பிபிசி தெற்காசிய செய்தியாளர் ஆசாதே மோஷிரி, “வளைகுடா பிராந்தியத்தில் இரான் 2,100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கிறார்.
பெரும்பாலான தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறினாலும், அரசாங்கம் இன்னும் தகவல்கள் பரிமாற்றம் மீது கடுமையான கட்டுப்பாட்டைப் பேணி வருகிறது.
ஆசாதே மோஷிரியின் கூற்றுப்படி, தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுத்ததால் ஏற்பட்ட சேதங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததற்காக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
இரானுடன் ஏதேனும் பேச்சுவார்த்தைகள் நடந்தால், அதன் ஏவுகணை மற்றும் டிரோன் கையிருப்புகள் மீது நீண்டகால கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தொடர்பான விதிகள் வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.