யாழ்ப்பாணத்தில் அத்துமீறி மீன் பிடித்ததாக 5 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்து மீறி பிரவேசித்து, மீன்பிடித்த இந்திய மீனவர்கள் ஐந்து பேர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்தாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்

தமிழகத்தில் உள்ள ஜெகதாப்பட்டினத்தில் இருந்து திங்கட்கிழமை தங்களின் மீன்பிடித் தொழிலுக்காக புறப்பட்ட இந்திய இழுவைப் படகு ஒன்றில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஐந்து மீனவர்களும் பூர்வாங்க சோதனைகள், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் கடற்தொழில் நிரீயல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

கடற் தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அவர்களை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

அவர்களை வரும் 17-ஆம் தேதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.