You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Knives Out: சினிமா விமர்சனம்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அகாதா கிரிஸ்டி பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு த்ரில்லர் கதைதான் Knives Out. படத்தின் இயக்குனர் ரயான் ஜான்சன், Star Wars: The Last Jedi படத்தை இயக்கியவர். அதை மறந்துவிட்டு இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.
ஹர்லான் த்ராம்பே (கிரிஸ்டோஃபர் ப்ளம்மர்) ஒரு புகழ்பெற்ற க்ரைம் நாவலாசிரியர். தன்னுடைய 85வது பிறந்த நாளுக்கு தன் குடும்பத்தினர் அனைவரையும் தன் மாளிகைக்கு வரவைக்கிறார். தன் மகன், மகள், பேரன் என எல்லோர் மீதும் அவருக்கு அதிருப்தி இருக்கிறது. விருந்து முடிந்த இரவில், தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு இறந்து போயிருக்கிறார் ஹர்லான். இது தற்கொலை என பலரும் முடிவுகட்டிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்கச் சொல்லி அமெச்சூர் துப்பறிவாளரான போனி ப்ளாங்கிற்கு (டேனியல் க்ரெய்க்) யாரோ பணம் அனுப்பி வைக்கிறார்கள்.
அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஹர்லானை கொலை செய்ய காரணம் இருக்கிறது. ஹர்லானின் நர்ஸ் மார்ட்டாவை (ஆனா தர்மாஸ்) விசாரித்தால், அவள் ஒரு புதுக் கதை சொல்கிறாள். ஹர்லான் சாவதற்கு முன்பாக தன் சொத்து முழுவதையும் மார்ட்டாவுக்கே எழுதி வைத்திருக்கிறார். ஆகவே, அவள் கொலை செய்திருக்கலாமோ?
ஹாலிவுட்டிலிருந்து நீண்ட காலத்திற்குப் பிறகு வெளியாகியிருக்கும் ஒரு அட்டகாசமான Whodonit த்ரில்லர். அகதா கிரிஸ்டி கதையில் வருவதைப் போல, சந்தேகத்திற்குள்ளாகும் எல்லோருக்குமே கொலை செய்வதற்கான காரணம் இருக்கிறது. பார்வையாளர்கள் ஒருவரை, குற்றவாளி என முடிவுசெய்ய, துப்பறிவாளர் வேறொருவரை அடையாளம் காட்டுகிறார். இந்த மர்மத்தில் இருக்கும் புதிர்களை கிரிஸ்டியின் பொய்ரோவைப் போலவே அட்டகாசமாக அவிழ்க்கிறார் போனி ப்ளாங்க்.
கொலை செய்தது யார் என படம் பார்ப்பவர்களுக்கு முன்பே காட்டிவிட்டு, அவர்கள் எப்படி அந்தக் கொலையைச் செய்யவில்லை என முடிவில் சொல்கிறார் இயக்குனர். 'இவன்தான் செஞ்சிருப்பான்னு ஏற்கனவே தெரியுமே' என சொல்லவே முடியாத திருப்பம் இறுதியில்.
குறிப்பாக போனி ப்ளாங்காக வரும் டேனியல் க்ரெய்க் மற்றும் ஹர்லானாக வரும் கிரிஸ்டோஃபர் ப்ளமர் ஆகியோரின் நடிப்பு அட்டகாசம்.
மர்மக் கதைகளுக்கே உரிய தனித்திருக்கும் மாளிகை, சுருட்டு பிடிக்கும் துப்பறிவாளன், அற்புதமான பின்னணி இசை, தேர்ந்த நடிகர்கள் என ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம்.
Murder on the Orient Express,Murder by Death, Death on the Nile உள்ளிட்ட பல படங்களின் தாக்கம் இந்தப் படத்தில் தென்படுகிறது. இருந்தாலும் மர்மக் கதை விரும்பிகள் தவறவிடக்கூடாத படம்.
கோவாவில் ரஜினி குறித்து ஒளிபரப்பட்ட Video
பிற செய்திகள்:
- "நாங்கள் அச்சப்படுகிறோம்": அமித்ஷா முகத்துக்கு நேரே மோதி ஆட்சியை விமர்சித்த ராகுல் பஜாஜ்
- ஆண் நண்பர் முன்னிலையில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பள்ளி மாணவி
- பெண் ஊழியர்களுக்கு 'மாதவிடாய் பேட்ஜ்' அறிமுகப்படுத்திய ஜப்பான் கடை
- "டைட்டானிக் கதாநாயகன்தான் அமேசான் காட்டுக்கு தீ வைத்தார்": பிரேசில் அதிபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: