You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் 2026: சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்
2026 ஐபிஎல் சீசனின் 7வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 3) மோதுகின்றன.
இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த சீசனில் சென்னை அணியின் முதல் 'ஹோம்' போட்டி இதுதான்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி எம்எஸ் தோனி அல்லது சுரேஷ் ரெய்னா இல்லாமல் சேப்பாக்கத்தில் சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் முதல் போட்டி இதுவாகவே இருக்கும்.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
டாஸில் என்ன நடந்தது?
முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், "இது அவர்களுடைய சொந்த மைதானத்தில் நடக்கும் முதல் போட்டி என்பதால் நான் முதலில் பந்துவீசப் போகிறோம். ஆடுகளம் புதியதாக இருப்பதாக உணர்கிறேன். ஆடுகளம் எப்படிச் செயல்படப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது ஒரு நல்ல விஷயமாக இருக்கும். எனவே, அவற்றின் அடிப்படையில் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்." என்றார்.
சிஎஸ்கே-விற்கு எதிரான சமீபத்திய சாதனை பற்றி கேட்கப்பட்டதற்கு, "எங்களிடம் உள்ள வீரர்களைக் கருத்தில் கொள்ளும்போது இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. மேலும், கடந்த போட்டியில் இருந்து எங்களுக்குக் கிடைத்த உத்வேகம் நிச்சயம் இன்றைய போட்டியிலும் எதிரொலிக்கும். அவர்களிடமும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஒரு பிரம்மாண்டமான அணி உள்ளது. எனவே, நாங்கள் எங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, இன்று எங்களின் சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க விரும்புகிறோம்." என்று ஷ்ரேயஸ் ஐயர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "எனக்குத் தெரிந்து, இந்த ஆடுகளம் சற்று காய்ந்த நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இதில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பெரும்பாலும் இது அப்படியேதான் இருக்கும். ஏப்ரல் மாதத்தின் தொடக்கக் காலம் என்பதால், இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று நான் கருதவில்லை. அதனால், முதலில் ரன்களைக் குவித்துவிட்டு, இந்த ஆடுகளத்தை தாராளமாக நம்பலாம் என்று நினைக்கிறேன்." என்றார்.
களமிறங்கும் வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்
பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர், மேட் ஹென்றி, நூர் அஹமது, கலீல் அஹமது, அன்ஷுல் கம்போஜ்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், மேத்யூ ஷார்ட், ராகுல் சஹர், குர்ஜப்னீத் சிங்
பஞ்சாப் கிங்ஸ்
பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, சஷாங்க் சிங், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ யான்சன், ஜேவியர் பார்ட்லட், அர்ஷ்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யுஸ்வேந்திர சஹல்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: பிரியான்ஷ் ஆர்யா, மிட்ச் ஓவன், சூர்யான்ஷ் ஷெட்கே, ஹர்ப்ரீத் பிரார்.
நேருக்கு நேர்
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 16 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன.
அதேசமயம் 2023ம் ஆண்டுக்குப் பிறகு விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2024ம் ஆண்டு தரம்சாலாவில் விளையாடிய போட்டியில் மட்டுமே சூப்பர் கிங்ஸ் வென்றது.
இந்தக் காலகட்டத்தில் சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டிகளிலுமே சிஎஸ்கே தோற்றிருக்கிறது. 2023ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 210 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ், கடந்த ஆண்டு 190 ரன்களை சேஸ் செய்தது.
சேப்பாக்கம் கைகொடுக்குமா?
ஒருகட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக விளங்கிய சேப்பாக்கத்தில் கடந்த சீசன் அந்த அணியால் வெற்றிகள் பெற முடியவில்லை. 2025 சீசனில் சேப்பாக்கத்தில் ஆடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. சீசனின் முதல் போட்டியில் அந்த வெற்றி வந்த பிறகு, 6 தோல்விகளுமே தொடர்ச்சியாக வந்தன. அந்தத் தோல்வி பயணத்தை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியில் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
போட்டிக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சேப்பாக்கம் ஆடுகளம் பற்றிப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "பொதுவாக, சென்னை ஆடுகளம் விளையாடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இரவு நேரங்களில் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தால், குறிப்பாக இன்னிங்ஸின் இரண்டாம் பாதியில் ஆடுகளத்தின் தன்மை சற்று மாறக்கூடும். எனவே, இந்த ஆண்டு ஆடுகளம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை." என்று கூறினார்.