You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பிய தாலிபன்கள் - இதற்கு காரணமான தாக்குதலின் பின்னணி
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து, தாலிபன்கள் பாகிஸ்தான் தூதரை சம்மன் செய்து அழைத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் பாகிஸ்தான் தூதரிடம் ஒரு எதிர்ப்பு கடிதம் வழங்கப்பட்டது. பிபிசி பஷ்தூன் சேவை கூற்றுப்படி, தாலிபன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் படைகள் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல்களை நடத்தி டஜன் கணக்கான பொதுமக்களைக் கொன்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சகம் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆப்கானிஸ்தான் சார்பாக ஒரு எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பித்தது." என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இரவில் ஆப்கானிஸ்தானுக்குள் பல வான் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி இருக்கிறது. எல்லை அருகே இருப்பதாக பாகிஸ்தான் குறிப்பிடும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தானுக்குள் சமீபத்தில் நடந்த தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாக தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ். கோரசன் உறுப்பினர்களுக்கு எதிராக உளவுத்தகவல் அடிப்பையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. முன்னர் தற்கொலை தாக்குதல் நடந்த இடங்களில் இஸ்லாமாபாத், பாஜோர் மற்றும் பன்னு அடங்கும்.
ஆனால், நங்கர்ஹார் மற்றும் பக்டிகா மாகாணங்களில் பொதுமக்கள் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசு கூறுகிறது. தாக்குதல்களை கண்டித்துள்ள தாலிபன் அரசு பல பொதுமக்கள் வீடுகளையும், ஒரு மத பள்ளியையும் குறிவைத்ததாக குற்றம்சாட்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பல மாத எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு அக்டோபரில் சண்டை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானை தளமாக கொண்ட தலைமையால் திட்டமிடப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், தீவிரவாதிகளின் புகலிடங்களை அகற்றுமாறு ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பதில் கிடைக்கவில்லை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது இடத்தை பொருட்படுத்தாமல் நடவடிக்கை தொடரும் என பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது. இந்த வான்வழித் தாக்குதல்கள் தங்கள் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தாலிபன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முன்னாள் நல்லிணக்கத் தலைவர் அப்துல்லா அப்துல்லா, இந்தத் தாக்குதல்கள் மிக கவலைக்குரியது என கண்டித்துள்ளார். இது ஆப்கானிஸ்தான் இறையாண்மையை மீறும் செயல் என்றும் இது உறுதியற்ற தன்மையையே தூண்டும் என்றும் கூறினார்.
குண்டுவீச்சு மற்றும் பொதுமக்களை குறிவைப்பது தீர்வாகாது என கூறிய அவர் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முன்னாள் அதிபர் ஹமீத் கர்சய் இந்த தாக்குதலை இறையாண்மையை மீறும் செயல் என கண்டித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தொடர்பான கொள்கையை மறுபரிசீலனை செய்து சிறந்த உறவை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு