இந்தியா பற்றி டிரம்ப் பகிர்ந்த கருத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு - இரான் கூறியது என்ன?

பட மூலாதாரம், Will Oliver/EPA/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை பற்றி பழமைவாத எழுத்தாளரும் வானொலி தொகுப்பாளருமான மைக்கேல் சாவேஜ் எழுதிய ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியாவையும் சீனாவையும் 'பூமியில் உள்ள நரகம்' என்று குறிப்பிடும் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்ததைத் தொடர்ந்து எதிர்வினைகள் எழுந்துள்ளன.

டிரம்பின் இந்த அறிக்கையை இந்தியாவில் எதிர்க் கட்சியான காங்கிரஸ் விமர்சித்துள்ளதுடன், இதற்கு மோதி அரசாங்கத்தின் எதிர்வினை "மிகவும் பலவீனமானது" என்றும் கூறியுள்ளது.

பல நிபுணர்கள் டிரம்பின் இந்த அறிக்கை 'இனவெறி' சார்ந்தது என்று கூறியுள்ளனர்.

இந்த அறிக்கைக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இரான் இந்தியாவை ஒரு அற்புதமான நாடு என்று கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை பற்றி பழமைவாத எழுத்தாளரும் வானொலி தொகுப்பாளருமான மைக்கேல் சாவேஜ் எழுதிய ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பதிவு

அதில், புலம்பெயர்ந்தோர் கர்ப்பத்தின் "ஒன்பதாவது மாதத்தில்" அமெரிக்காவிற்கு வருவதன் மூலம் உள்ளூர் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, தற்போதைய சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று சாவேஜ் விமர்சித்துள்ளார்.

டிரம்ப் பகிர்ந்த மைக்கேல் சாவேஜின் அறிக்கையில், "இங்கே ஒரு குழந்தை பிறந்ததும் குடிமகனாகிறது. பின்னர் அவர்கள் சீனா அல்லது இந்தியா அல்லது உலகின் ஏதோ ஒரு நரகக் குழியிலிருந்து முழு குடும்பத்தையும் அழைத்து வருகிறார்கள். அதைக் காண நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. இங்கே இப்போது ஆங்கிலம் பேசப்படுவதில்லை"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த செயலுக்கு இந்தியாவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகமும் வியாழக்கிழமை இரவு இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நாங்கள் அந்த அறிக்கையையும், அதைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகத்தின் பதிலையும் பார்த்தோம். இந்தக் கருத்துகள் தெளிவாகத் தவறான தகவல்களைக் கொண்டவை மற்றும் பொருத்தமற்றவை. நீண்டகாலமாகப் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்திய-அமெரிக்க உறவுகளின் உண்மையான தன்மையை அவை நிச்சயமாகப் பிரதிபலிக்கவில்லை" என்றார்.

முன்னதாக, தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட போது, "நாங்கள் சில செய்திகளைப் பார்த்தோம்... நான் சொல்ல விரும்புவது அவ்வளவுதான்" என்று மட்டும் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.

பின்னர், அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பகிர்வால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க அமெரிக்கா முயற்சித்தது. பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "இந்தியா ஒரு சிறந்த நாடு என்றும், அங்கு உயர் பதவிகளில் எனக்கு மிகச் சிறந்த நண்பர்கள் உள்ளனர் என்றும் அதிபர் கூறினார்" எனத் தெரிவித்தார்.

இந்திய ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் செய்தித் தொடர்பாளரின் அறிக்கை வெளியானது. இந்தியா ஒரு "சிறந்த நாடு" என்று டிரம்ப் எப்போது அல்லது எங்கே குறிப்பிட்டார் என்பதை அந்தச் செய்தித் தொடர்பாளர் விளக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புலம்பெயர்ந்தோர் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள் என டொனால்ட் டிரம்ப் நம்புகிறார் (குறியீட்டுப் புகைப்படம்)

இரான் என்ன கூறியது?

டிரம்பின் பதிவைத் தொடர்ந்து, மும்பையில் அமைந்துள்ள இரான் துணைத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் மும்பையின் புகழ்பெற்ற கணேசா உத்சவத்தின் பல்வேறு காட்சிகளைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவுடன் பகிரப்பட்ட செய்தியில், "யாராவது டிரம்பிற்கு கலாசார ரீதியாகத் தெளிவுபெற ஒரு பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும். அது ஒருவேளை அவரது அறியாமையை கொஞ்சம் குறைக்கக் கூடும்" என்று கூறப்பட்டிருந்தது.

ஹைதராபாத்தில் உள்ள இரானிய துணை தூதரகம், மும்பை தூதரகத்தின் பதிவைப் பகிர்ந்து, "மும்பையில் எங்களுக்குப் பிடித்தவை என்ன? டீயுடன் பன் மஸ்கா, வடை பாவ் மற்றும் பாவ் பாஜி போன்ற இவை மூன்றும் ஒரு மோசமான நாளை சரிசெய்யக் கூடியவை. நாங்கள் ரொட்டியையும் மரியாதையையும் நம்புகிறோம், ஆனால் தென்னிந்தியாவிற்குள் நுழைந்துவிட்டால்... அது ஒரு தனி ரகம். இந்தியா தனது 'சொர்க்க நிலையை' அடைந்தது போல இருக்கும். அது இன்னும் அழகானது"என்று பதிவிட்டுள்ளது.

இரானிய துணைத் தூதரகம் மற்றொரு பதிவிட்டுள்ளது.

அதில், "சீனாவும் இந்தியாவும் நாகரிகத்தின் தொட்டில்களாக இருந்துள்ளன. உண்மையில், நரகம் என்பது போர்-குற்றவாளியான அதிபர், இரானின் நாகரிகத்தை அழிப்பதாக அச்சுறுத்தும் இடமாகும்"என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது .

இந்தியாவில் எழுந்த எதிர்வினைகள்

டிரம்பின் அறிக்கையைக் குறிப்பிட்டு, சிவசேனா (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை மிகவும் மென்மையானதாக இருந்தது, ஆனால் மும்பையில் உள்ள இரான் துணைத் தூதரகம் எவ்வளவு வலிமையான பதிலை அளித்துள்ளது" என்று எழுதியுள்ளார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. "நரேந்திர மோதியின் நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ஒரு நரகம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களை லேப்டாப் ஏந்திய கும்பல் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் நரேந்திர மோதியும் அவரது அரசாங்கமும் இது குறித்து முழுமையாக மௌனம் காக்கின்றனர். 'நாட்டை அவமதிக்கும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது?' என்று டிரம்பிடம் ஒருமுறை கூட யாரும் கேட்கவில்லை. பிரதமர் பயந்தவராகவும், பலவீனமாகவும், அழுத்தத்திலும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவதால் தான் இந்தியாவிற்குத் தொடர்ச்சியான இந்த அவமதிப்பு நடக்கிறது"என்று அப்பதிவு கூறுகிறது.

ராஜ்ஜீய நிபுணர் பிரம்மா செலானி இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், "டிரம்பின் மொழி படிப்படியாக இனப் பாகுபாட்டை இயல்பானதாக மாற்றிவிட்டது. முன்னதாக, அமெரிக்க அரசியலில் இன ரீதியான சமிக்ஞைகள் மறைமுகமான மொழி மூலம் வழங்கப்பட்டன, ஆனால் டிரம்ப் அதை வெளிப்படையாகக் கூறத் தொடங்கிவிட்டார்"எனத் தெரிவித்துள்ளார்.

"தற்போது டிரம்ப், மைக்கேல் சாவேஜின் பாட்காஸ்டில் இருந்து ஒரு பகுதியை விளம்பரப்படுத்தியுள்ளார், அதில் அந்தத் தொகுப்பாளர் சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளை நரகக் குழிகள் என்று குறிப்பிடுகிறார். அத்தகைய கருத்துகளைத் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், தனது சொந்த பெயரில் மீண்டும் பகிர்வது என்பது இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இழைக்கப்படும் நேரடி அவமதிப்பாகும் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் மறைமுக அவமதிப்பாகும்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலேயே எதிர்ப்பு

இதற்கிடையில், கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இருக்கும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ரோ கன்னா, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அதில், "சீனா அல்லது இந்தியா அல்லது உலகில் நரகம் போன்ற வேறு ஏதேனும் நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோரை அதிபர் அவமதித்தது குறித்து உங்களிடம் ஏதேனும் கருத்து உள்ளதா? இந்தியா ஒரு நரகம் என்றும், சீன அல்லது இந்தியப் புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவின் தரத்தைக் குறைக்கிறார்கள் என்றும் நீங்களும் நம்புகிறீர்களா?"எனக் கூறியுள்ளார்.

ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Kamil Krzaczynski/Getty Images

படக்குறிப்பு, ராஜா கிருஷ்ணமூர்த்தி

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இது 'டிரம்ப் வகிக்கும் பதவியின் கண்ணியத்திற்கு எதிரானது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆவார். "இந்தியா மற்றும் குடியேறிகள் குறித்த இனவெறிக் கருத்துகளைப் பரப்பும் டொனால்ட் டிரம்பின் பதிவு கண்டிக்கத்தக்கது மற்றும் அவரது பதவியின் கண்ணியத்திற்குக் குறைவானது" என்று அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.

"அவரது மொழி, லட்சக்கணக்கான இந்திய அமெரிக்கர்களையும் நமது மிக முக்கியமான உலகளாவிய கூட்டாளிகளில் ஒருவரையும் அவமதிப்பது மட்டுமல்லாமல், அமெரிக்காவை வாய்ப்புகள் மற்றும் புதுமைகளின் பூமியாக மாற்றிய விழுமியங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது."

"அரசியல் ஆதாயத்திற்காக" பிளவுகளைத் தூண்டுவதற்குப் பதிலாக, அமெரிக்கா இந்தியாவுடனான தனது கூட்டாண்மையை வலுப்படுத்தி, அதன் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும் என்று ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு