You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என்.சங்கரய்யா காலமானார்: சுதந்திரப் போராட்ட வீரர், முதுபெரும் இடதுசாரி தலைவரின் வரலாறு
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 102.
என். சங்கரய்யா 102 வயதைத் தொட்டபோதிலும் ஆரோக்கியமாகவே இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திங்கட்கிழமையன்று சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.
இருந்தபோதும் அவரது உடல்நிலை மெல்ல மெல்ல பின்னடைவைச் சந்தித்தது. புதன்கிழமையன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது.
சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு
இந்திய சுதந்திர போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் சங்கரய்யா.
தூத்துக்குடியில் உள்ள ஆத்தூரைச் சேர்ந்தது சங்கரய்யாவின் குடும்பம். சங்கரய்யாவின் தாத்தா எல். சங்கரய்யா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் நரசிம்முலு பம்பாயில் பொறியியல் படிப்பை முடித்த பிறகு, கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த ஜப்பானிய நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
அங்கு அவருக்கும் அவருடைய மனைவி ராமானுஜத்திற்கும் 1922 ஜூலை 15ஆம் தேதி சங்கரய்யா பிறந்தார். அவருக்கு எட்டு சகோதர - சகோதரிகள். சங்கரய்யாவுக்கு பெற்றோர் இட்டபெயர் பிரதாபசந்திரன்.
ஆனால், தனது பெயரையே தன் பேரனுக்கு வைக்க வேண்டுமென தாத்தா வலியுறுத்தியதால், அவரது பெயர் சங்கரய்யா என மாற்றப்பட்டது.
நரசிம்முலு 1930இல் மதுரை ஹார்வி மில்லில் பணியாற்ற மதுரைக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்தார். புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும் ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்தார் சங்கரய்யா. 1937ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் வகுப்பில் சேர்ந்தார்.
அந்தக் காலத்தில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடமும் மேலோங்கி வந்த அந்த உணர்வை கல்லூரி முதல்வர் பிளிண்ட் விரும்பவில்லை.
இருந்தபோதும் சங்கரய்யா உள்ளிட்ட மாணவர்கள் தேசிய உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டனர். அப்போது சென்னை மாகாண பிரதமராக இருந்த ராஜாஜி, இந்தியை கட்டாயப் பாடமாக்கியபோது அதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் சங்கரய்யா.
இதற்குப் பிறகு சுதந்திர போராட்டத்திற்கென சென்னையில் செயல்பட்ட சென்னை மாணவர் சங்கத்தைப் போலவே மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கரய்யா அதன் செயலாளரானார். மதுரையில் உள்ள மக்கள் பிரச்னைக்காக இந்த சங்கம் தொடர்ந்து ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தியது. இதன் பிறகு பல்வேறு இடங்களில் மாணவர் சங்கங்கள் தொடங்கப்பட்டன.
இதில் கலவரமடைந்த கல்லூரி முதல்வர் பிளின்ட், சங்கரய்யாவை அழைத்து வேறு கல்லூரிக்குச் சென்றுவிடும்படி கூறினார். ஆனால், சங்கரய்யா மறுத்துவிட்டு, அமெரிக்கன் கல்லூரியிலேயே படிப்பைத் தொடர்ந்தார்.
தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த சங்கரய்யா, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேசிய விடுதலை இயக்கத்தின் பக்கம் திரும்பினார். அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே 'பூரண சுதந்திரம்' கோரி தீர்மானம் நிறைவேற்றியிருந்ததால், அந்தக் கட்சியில் இணைவதென முடிவெடுத்தார் சங்கரய்யா. ஆனால், அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் 1941இல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து அமெரிக்கன் கல்லூரியில் கூட்டம் நடத்திப் பேசினார் சங்கரய்யா. முடிவில் பிப்ரவரி 28ஆம் தேதி காலையில் காவல்துறை ஆய்வாளர் தீச்சட்டி கோவிந்தனால் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார்.
பி.ஏ. தேர்வுக்கு 15 நாட்களே இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதால், அவர் படிப்பைத் தொடர முடியாது போயிற்று. மதுரை சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட சங்கரய்யா 1942 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார். ஜூலை மாதம் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் வெளிப்படையாக தன் செயல்பாட்டைத் தொடங்கியது. இதையடுத்து பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக சங்கரய்யா கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து கண்ணணூர் சிறைக்கும், பிறகு தஞ்சாவூர் சிறைக்கும் மாற்றப்பட்ட சங்கரய்யா 1944இல் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையாகி வந்த சில நாட்களிலேயே, கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழுவின் தலைவராக சங்கரய்யா தேர்வானார். இதற்குப் பிறகு, ஆங்கிலேய அரசால் தொடரப்பட்ட மதுரைச் சதி வழிக்கில் சங்கரய்யா சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது பொய் வழக்கு என்பதை நிரூபித்து, 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, அதாவது இந்திய சுதந்திரத்திற்கு முதல் நாள் சங்கரய்யா விடுவிக்கப்பட்டார்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆசிரியையான நவமணியைத் திருமணம் செய்தார் சங்கரய்யா.
இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதற்கு முன்பாகவே கைது நடவடிக்கைகள் துவங்கின. சங்கரய்யா தலைமறைவானார். சுமார் இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்தபடி, மாறுவேடம் பூண்டு கட்சிப் பணியை மேற்கொண்டார் சங்கரய்யா.
மதுரை மாவட்டத்தில் 1948-51இல் கம்யூனிஸ்ட் கட்சி மீதான அடக்குமுறை கடுமையாக இருந்தது, பலர் கொல்லப்பட்டனர். கம்யூனிச கட்சியில் இணைந்து மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த பாலு தூக்கிலிடப்பட்டார். ஐ.வி. சுப்பய்யா சிறையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார்.
உமாநாத் தலைமறைவாக இருந்த மையம் 1950இல் கண்டுபிடிக்கப்பட்டு, உமாநாத் பாப்பா, கல்யாணசுந்தரம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். 1951இல் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட சங்கரய்யா, முதல் பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார் செய்வதில் தீவிரமானார். இந்தத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் பி. ராமமூர்த்தி வெற்றிபெற்றார்.
பிறகு, 1957இல் நடந்த பொதுத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார் சங்கரய்யா. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.
அடுத்து 1962ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் யுத்தம் மூண்டபோது, கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.
மார்க்சிய - லெனினியப் பார்வையோடு 1963இல் தீக்கதிர் நாளேடு வெளியாகத் தொடங்கியது. சங்கரய்யா, பி. ராமமூர்த்தி உள்ளிட்டோரின் கட்டுரைகள் புனைப்பெயரில் வெளியாக ஆரம்பித்தன. இந்தக் கட்டத்தில் கட்சி, தி.மு.கவுக்கு எதிராக காங்கிரசுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது. இதை சங்கரய்யா உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.
கடந்த 1964ஆம் ஆண்டு நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் கட்சி இரண்டாக உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மாநிலக் குழுவில் சங்கரய்யா இடம்பெற்றார். 1965இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை அரசு கைது செய்யத் துவங்கியது. இதில் சங்கரய்யாவும் கைதானார்.
சங்கரய்யா, 16 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு 1966இல் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான பிறகு, தீக்கதிர் நாளிதழ் கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அங்கீகரிக்கப்பட்டது. என். சங்கரய்யா அதன் ஆசிரியரானார்.
அதைத் தொடர்ந்து 1967இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். சட்டமன்ற துணைத் தலைவராகவும் தேர்வானார். 1967இல் திருவாரூரில் நடந்த விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில், சங்கரய்யா மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சங்கரய்யா 1969இல் மாநிலத் தலைவராகவும் தேர்வானார். 1982, 91லும் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார். இந்த காலகட்டங்களில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கூட்டங்களிலும் போராட்டங்களிலும் பங்கேற்றார் சங்கரய்யா.
சங்கரய்யா 1977, 1980இல் நடந்த தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார். கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசிய சங்கரய்யா, மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தினார்.
கல்கத்தாவில் 1986ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார் சங்கரய்யா. அப்போதிருந்து தொடர்ந்து மத்தியக் குழுவில் இருந்து வந்தார் அவர்.
கடலூரில் 1995இல் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என். சங்கரய்யா கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.
என். சங்கரய்யா - நவமணி தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். நான்கு பேரன்களும் மூன்று பேத்திகளும் உள்ளனர்.
"சுதந்திரத்திற்காகப் போராடினோம்; பென்ஷனுக்காக அல்ல"
தமிழ்நாட்டில் 2021இல் தி.மு.க. அரசு பதவியேற்றதும் மாநிலத்தில் உயரிய பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்க 'தகைசால் தமிழர்' என்ற விருதை உருவாக்கியது. முதல் விருது என். சங்கரய்யாவுக்கு அறிவிக்கப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று விருதை வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
விருதை ஏற்றுக்கொண்ட என். சங்கரய்யா, அந்த விருதுடன் அளிக்கப்பட்ட பத்து லட்ச ரூபாயை முதலமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு அளித்துவிட்டார்.
இதைப் போலவே, 1972இல் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான பென்ஷன் வழங்கப்பட்டபோது அதையும் ஏற்க மறுத்தார் சங்கரய்யா. "நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராடினோம், பென்ஷனுக்காக அல்ல" என்று குறிப்பிட்டார் அவர்.
கடந்த 2020ஆம் ஆண்டில் என். சங்கரய்யாவை மூத்த பத்திரிகையாளரான பி. சாய்நாத் சந்தித்து, நீண்ட நேர்காணல் ஒன்றை எடுத்தார். அந்த நேர்காணலின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை, "The Last Heros: Foot Soldiers of Indian Nation" என்ற நூலில் இடம்பெற்றது.
அந்தக் கட்டுரையின் இறுதியில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த என். சங்கரய்யா படிப்பை முடிக்கும் காலகட்டத்தில் சிறைக்குச் சென்றுவிட்டதால் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை; எனவே பட்டமும் வழங்கப்படவில்லை. ஆகவே, அவருக்கு கௌரவ பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையிலேயே மதுரை காமராஜர்ர் பல்கலைக்கழகம் மூலம் என். சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. அந்த டாக்டர் பட்டம் இந்த மாதம் 2ஆம் தேதி வழங்கப்படவிருந்தது. ஆனால், அந்த டாக்டர் பட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்துவிட்டதால் அவருக்கு அந்த டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை. அந்த பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி புறக்கணித்தார்.
இன்று காலமான அவரது உடல் முதலில் அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.
என். சங்கங்கரய்யா இறந்த செய்தி வெளியானதும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)