You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரவில் தூங்குவதற்கு முன் வைஃபை, மொபைல் இன்டர்நெட்டை அணைத்துவிட வேண்டுமா?
- எழுதியவர், பரத் ஷர்மா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"படுடா செல்லமே, மணி இரவு 12 ஆகிறது, இன்னும் எவ்வளவு நேரம் மொபைல் ஃபோன் பார்ப்பாய்?"
"ஒரு படம் மட்டும் முடிச்சிடறேன் , பகலில் வைஃபை கிடைக்காதே!"
"இந்த வைஃபை-க்கு ஏதாவது செய்யணும்!"
டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சரிதாவுக்கும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அக்ஷருக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் ஒரு வழக்கமான நிகழ்வு. வாரத்தில் மூன்று, நான்கு இரவுகள் இது நடக்கும்.
சிலர் வைஃபை (Wi-Fi) என்பதன் முழு வடிவம் 'வயர்லெஸ் ஃபிடலிட்டி' (Wireless Fidelity) என்பார்கள். அதேபோல, ஹை-ஃபை (Hi-Fi) என்பதன் முழு வடிவம் 'ஹை ஃபிடலிட்டி' (High Fidelity) என்பதாகும். ஆனால், வைஃபை அலையன்ஸ் என்ற தொழில் கூட்டமைப்பு வைஃபைக்கு என்று எந்த விரிவாக்கமும் இல்லை என்று கூறுகிறது.
எளிமையாகக் கூறுவதானால் வைஃபை என்பது கேபிள்கள் மற்றும் இணைப்புகளின் சிக்கலில் சிக்காமல், நம்மை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இதன் மூலம் நாம் இணையத்திலிருந்து தகவல்களைப் பெறவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் முடியும்.
இரவில் வைஃபையை இயக்கத்தில் வைப்பதால் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
வைஃபை என்பது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை கேபிள்கள் இல்லாமல் ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது வயர்லெஸ் ரௌட்டரைப் (Router) பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கை (WLAN) உருவாக்குகிறது.
மொபைல் ஃபோன் பழக்கம் நமக்கு எல்லோருக்கும் தெரியும். இப்போது வைஃபை ஒரு புதிய பழக்கமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இதைப்பற்றி அதிகம் விவாதிக்கப்படாத ஒரு அம்சம் இப்போது விவாதத்திற்கு வந்துள்ளது.
யாராவது இரவு தாமதமாக மொபைல் ஃபோன், டேப்லெட், கணினி அல்லது லேப்டாப்பில் பொழுதுபோக்கு அல்லது வேலைக்காகச் செயல்படும்போது, வைஃபை ரூட்டரும் இரவு முழுவதும் அப்படியே இயக்கத்தில் இருக்க வாய்ப்பு அதிகம்.
அப்படியானால், வைஃபை ரூட்டரை அணைக்காமல் வைத்திருப்பதால் நம் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது அதை அணைப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் நன்மைகள் உண்டா?
இந்தக் கேள்வியை இன்னும் கூர்மையாகக் கேட்டால், இரவில் வைஃபை ஆன் செய்து வைப்பதால் மனித உடலின் நரம்பியல் அம்சங்களுக்கு அல்லது மூளைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள யசோதா மெடிசிட்டியில் ஆலோசகராகப் (குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை) பணிபுரியும் மருத்துவர் திவ்ய ஜோதியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, அறிவியல் ரீதியாக இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், நேரடியாக அப்படிச் சொல்ல முடியாது என்று கூறினார்.
"தர்க்கரீதியாகப் பார்த்தால், மூளையின் தூண்டல்கள் மின் தூண்டல்கள் என்பதால், அப்படி நினைக்கலாம். வைஃபை அல்லது பிற சாதனங்கள் மின்காந்த அலைகளை (electromagnetic fields -EMF) சார்ந்துள்ளன," என மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
"எனவே, இது மூளையின் தூண்டல்களுடன் குறுக்கிட வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி யோசிப்பதற்கு எந்தவொரு அறிவியல் காரணமோ, விளக்கமோ அல்லது முடிவோ இதுவரை இல்லை. ஆனால், முடிந்தவரை அதிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்றுதான் தர்க்கம் கூறுகிறது."
மூளைத் தூண்டுதல்கள் என்றால் என்ன?
மூளைத் தூண்டுதல்கள் (Brain impulses) என்பவை, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளவும், தகவல்களைப் பறிமாறவும் உதவும் மின்னணு - வேதியியல் சமிக்ஞைகள் (electrochemical signals) ஆகும். இந்த நரம்புத் தூண்டுதல்கள், செயல் ஆற்றல் (action potential) என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தத் தூண்டுதல்களை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புக்கு உணர்ச்சி நரம்பு (sensory nerve) என்று பெயர். இந்த நரம்புகள் மூளைக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால்தான், நம்மால் தொடு உணர்ச்சி, சுவை, வாசனை ஆகியவற்றை உணர முடிகிறது.
இரவு மற்றும் பகல் நேரங்களில் வைஃபை ரூட்டரின் விளைவு
இரவில் வைஃபை ரூட்டரை அணைத்து வைப்பது அவசியம் என கூறினால் பகலில் ஏன் அணைத்து வைக்க தேவையில்லை?
இந்தக் கேள்விக்கு பிபிசியிடம் பதிலளித்த மருத்துவர் திவ்ய ஜோதி, "பகல் மற்றும் இரவில் உடலின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. இரவில் உடலின் அலைகள் வேறுபட்டவை, அவை தூக்க அலைகள். இரவில் நல்ல தூக்கம் பெறுவது மிகவும் முக்கியமானது. அது தூக்க சுழற்சியால் தீர்மானிக்கப்படுகிறது."
"அதனால்தான், இரவில் அதை அணைத்து வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், மூளைக்கு முழுமையாக ஓய்வு கிடைத்து, நல்ல தூக்கம் கிடைக்கும். ஆனால், பகல் நேரத்தில் நாம் வேலை செய்ய வேண்டும் என்பதால், தூக்கத்தில் குறுக்கீடு இல்லை. ஆனால், இந்த வெளிப்பாடு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது என்பதுதான் தர்க்கம்."
ஆனால், இரவில் வைஃபையை மட்டும் தவிர்ப்பது போதுமா? நாம் அடிக்கடி தலையணைக்கு அருகில் வைத்துத் தூங்கும் மொபைல் ஃபோன்கள் பாதிப்பை ஏற்படுத்தாதா?
இதற்கு மருத்துவர், மொபைல் ஃபோன்களும் மைக்ரோவேவ்களை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறுகிறார். அவையும் ஒரு வகையான கதிர்வீச்சை உருவாக்குகின்றன. ஆனால், அவற்றின் அதிர்வெண் (frequency) வேறுபட்டது. தர்க்கரீதியாகப் பார்த்தால், இவை கூட தூக்கத்தில் குறுக்கிடலாம். நீங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட, மின்காந்த அலைகள் இருந்துகொண்டே இருக்கும்.
"பின்னணிக் கதிர்வீச்சோடு ஒப்பிடும்போது, மொபைல் ஃபோன் மற்றும் வைஃபை ஆகியவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சு மிகக் குறைவு. இவை இரண்டிலிருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு அதிகமாகுமா என்றால், இல்லை. இதற்கு மாறாக, நம் மீதான பின்னணிக் கதிர்வீச்சின் தாக்கம் மிகவும் அதிகம்," என்று மருத்துவர் திவ்ய ஜோதி தெரிவித்தார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, நம் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து வகையான சாதனங்களிலிருந்தும் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. டிவி, பிரிட்ஜ் முதல் ஏசி வரை. எந்த மின் சாதனமாக இருந்தாலும், மின்காந்த அலைகள் அதனுடன் தொடர்புடையவை.
சில நிபுணர்கள், மின்காந்த அலைகள் அளவுக்கு அதிகமாக வெளிப்படுமோ என்று பயந்தால், நீங்கள் தூங்கும் அறையில் ரூட்டரை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அல்லது அது சாத்தியமில்லை என்றால், படுக்கையிலிருந்து ரூட்டரை சற்றுத் தள்ளி வைக்கலாம்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
மருத்துவத் துறை நிபுணர்களைத் தவிர, தொழில்நுட்பத் துறை நிபுணர்களுடனும் நாங்கள் பேசினோம்.
இந்த விஷயம் குறித்து துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை. இதனால், குழப்பம் அதிகமாக உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
தொழில்நுட்ப நிபுணர் முகமது ஃபைசல் அலி, "நல்ல தூக்கத்தைப் பெற இரவில் வைஃபையை அணைக்க வேண்டும் என்பதை நிரூபிக்க எந்த ஆய்வும் இல்லை" என்றார்.
"அல்லது வைஃபையை ஆன் செய்து வைத்திருப்பது நமது நரம்பியல் அல்லது வேறு எந்த அமைப்பையும் பாதிக்கிறது என்பதை நிரூபிக்கவும் ஆய்வு இல்லை. ஆனால், எந்தவொரு அலைகளின் தாக்கமும் நீண்ட காலத்திற்கு ஏற்படும் போது விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறலாம். இது ஒரு பொதுவான விஷயம்."
" கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல் மற்றும் வைஃபையின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது," என அலி பிபிசியிடம், கூறினார்.
"எனவே, எதிர்காலத்தில் ஒரு ஆய்வு நடத்தப்படலாம். அதில், இந்த விஷயங்களால் இந்தந்த பாதிப்புகள் ஏற்படலாம் ஆகவே, அவற்றைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால், இதுவரை அப்படி எதுவும் இல்லை."
மொபைல் ஃபோன்களில் சொந்த இணைய வசதியும் உள்ளது. இந்தத் தர்க்கம் அவற்றுக்கும் பொருந்துமா?
"மின்காந்த அலைகளோ அல்லது ரேடியோ அலைகளோ, எதுவாக இருந்தாலும் அதிகமாக அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாவது நல்லதல்ல என்று ஒரு உணர்வு உள்ளது. இப்போது நம்மிடம் சிறந்த தரவுகள் இருப்பதால் இப்போது இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். எனக்கு தெரிந்தது மற்றும் புரிதலின்படி, பல நேரங்களில் அதைப் பார்த்து பயப்படும் அளவு இவற்றால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது" என்று கூறினார் அலி.
கதிர்வீச்சு, அலைகள் அல்லது மின்காந்த அலைகளால் உடலில் என்னென்ன மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று நிபுணர்களிடம் கேட்கப்பட்டது
"கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், இது நல்ல தூக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம். அப்படி நடந்தால், பகல் நேரத்தில் நமது செயல்திறன் பாதிக்கப்படும். கவனம் குறையும். மேலும், உடலில் கட்டிகள் உருவாகுவதற்கும், வளர்வதற்கும் கதிர்வீச்சுக்கும் தொடர்புள்ளது," என மருத்துவ திவ்ய ஜோதி தெரிவித்தார்.
வைஃபை உடன், மொபைல் ஃபோன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு குறித்தும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் பல மொபைல் ஃபோன்கள் இப்போது 5G நெட்வொர்க்கில் இயங்குகின்றன. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இது ஐரோப்பாவில் வந்தபோது, புதிய தொழில்நுட்பம் தொடர்பான உடல்நல அபாயங்கள் குறித்த கேள்விகள் எழுந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு