33 கேள்விகளுடன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக எவ்வாறு நடக்கும்?
பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
உங்கள் வீடு கான்கிரீட் கூரை கொண்டதா அல்லது ஓலை வேய்ந்ததா?
நீங்கள் முக்கியமாக உண்ணும் தானியம் என்ன?
உங்களுக்கு இணைய வசதி இருக்கிறதா? அல்லது உங்களிடம் சாதாரண மொபைல் போன் மட்டும்தான் உள்ளதா?
உங்கள் வீட்டில் எத்தனை திருமணமான தம்பதிகள் வசிக்கிறார்கள்?
புதன்கிழமை உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா தொடங்கும்போது, 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகளில் இவையும் அடங்கும்.
15 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும்.
உலகின் மிகவும் லட்சியமான திட்டமாக கருதப்படும் இந்த இரண்டு கட்டப் பணியில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரையும் கணக்கிடுவதற்காக 30 லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் ஓராண்டு காலம் செலவிடுவார்கள்.
1947-இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து நடைபெறும் எட்டாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் (ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 16-வது கணக்கெடுப்பு இது) சாதித் தரவுகளும் இடம்பெறும்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் கொள்கை உருவாக்கம், நலத்திட்ட விநியோகம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் கூற்றுப்படி, 140 கோடிக்கும் அதிகமான மக்களுடன் இந்தியா 2023-ல் சீனாவை முந்தியது.
இந்தியா உலகின் இளமையான நாடுகளில் ஒன்றாகத் தொடர்கிறது. அதன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70% பேர் உழைக்கும் வயதைக் கொண்டவர்கள்.
கடைசியாக 2011-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு கோவிட் பெருந்தொற்றினால் தாமதமானது, பின்னர் நிர்வாக மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மேலும் தள்ளிப்போனது.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு நடைமுறை அதன் கால அட்டவணையைத் தவறுவது இதுவே முதல் முறை.
இந்தப் பணி 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 7,000-க்கும் மேற்பட்ட தாலுகாக்கள், 9,700-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் சுமார் 6,40,000 கிராமங்களில் நடைபெறும்.
பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் கணக்கெடுப்பாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் களப்பணியாற்றுவார்கள்.
முதல் முறையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். கணக்கெடுப்பாளர்கள் தரவுகளைச் சேகரிக்கவும் பதிவேற்றவும் மொபைல் செயலிகளைப் பயன்படுத்துவார்கள்.
அதிகாரிகள் சுய-கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் மக்கள் 16 மொழிகளில் உள்ள இணைய தளத்தின் மூலம் தங்களது விவரங்களை சமர்ப்பிக்கலாம்.
அந்த தளம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்குகிறது, அதனை மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கும் பணியாளர்கள் சரிபாரிப்பார்கள்.
நேரடியாக வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
'வீடு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு' எனப்படும் முதல் கட்டம், வீடுகளின் நிலை, வசதிகள் மற்றும் குடும்பச் சொத்துக்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும்.
இரண்டாவது கட்டமான 'மக்கள் தொகை கணக்கெடுப்பு' பிப்ரவரி 2027-இல் திட்டமிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை அமைப்பு, கல்வி, இடம்பெயர்வு மற்றும் மகப்பேறு பற்றிய விரிவான தரவுகளைச் சேகரிக்கும்.
இது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் சாதி வாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கும்.
பட மூலாதாரம், AFP via Getty Images
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், டெல்லி, கோவா, கர்நாடகா, மிசோரம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தொடக்கக்கட்டப் பணிகள் ஆரம்பமாகும்.
இந்தப் பகுதிகளில், ஏப்ரல் 1 முதல் 15 வரை மக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யலாம் . அதைத் தொடர்ந்து ஏப்ரல் 16 முதல் மே 15 வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு நடைபெறும்.
காலனித்துவ ஆட்சியின் கீழ் ஒரு ஆரம்பகட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பாகத் தொடங்கிய இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வினாத்தொகுப்பு, அரசின் மாறிவரும் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கும் வகையில், படிப்படியாக அதன் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.
1872-ல் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியில் 17 கேள்விகள் இருந்தன.
இது அடிப்படையில் ஒரு வீட்டுப் பதிவேடாக மட்டுமே இருந்தது, யார் எங்கு வசிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை வயது, மதம், சாதி மற்றும் தொழில் போன்ற அடிப்படைத் தகவல்களுடன் பதிவு செய்தது.
முதல் முறையாக நாடு தழுவிய அளவில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட 1881 கணக்கெடுப்பின்போது, அடையாளம் (பெயர், பாலினம், திருமண நிலை), சமூக அடையாளங்கள் (சாதி, மதம், மொழி) மற்றும் அடிப்படை கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி வகைகள் என ஒரு நிலையான வடிவத்தைப் பெற்றது.
அதன்பிறகு, மொழி, கல்வியறிவு மற்றும் தொழில் குறித்த கேள்விகள் செம்மைப்படுத்தப்பட்டு, துணைத் தொழில் மற்றும் பிறரைச் சார்ந்து இருக்கும் விவரங்கள் சேர்க்கப்பட்டன.
ஆங்கிலேயர்களின் விருப்பமான ஆங்கிலப் புலமை குறித்த கேள்வி, 1901 கணக்கெடுப்பில் இடம்பெற்ற 16 கேள்விகளில் ஒன்றாக இருந்தது.
1941-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு மாற்றம் தொடங்கியது, அப்போது அதன் 22 கேள்விகள் "நீங்கள் யார்" என்பதிலிருந்து "நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்" என்பதையும் உள்ளடக்கியதாக மாறியது.
மகப்பேறு, வேலைவாய்ப்பு நிலை, பொருளாதார ரீதியாகப் பிறரைச் சார்ந்திருப்பது, இடம்பெயர்வு மற்றும் வேலை தேடுதல் போன்றவை இதில் இடம் பெற்றன.
இது பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்த வளர்ந்து வரும் நிர்வாகக் கவனத்தைச் சுட்டிக்காட்டியது.
சுதந்திரத்திற்குப் பிறகு அது மேலும் விரிவடைந்தது.
1951 மற்றும் 1961 கணக்கெடுப்புகள் குடியுரிமை, இடம்பெயர்வு (தேசப் பிரிவினையின் தாக்கம்), நில உரிமை மற்றும் கூடுதல் பணிப் பிரிவுகளை உள்ளடக்கியது.
பட மூலாதாரம், AFP via Getty Images
1970-களுக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு தனித்துவமான சமூக-பொருளாதாரப் பார்வையைப் பெறத் தொடங்கியது.
இடம்பெயர்வு வரலாறு, வசிக்கும் காலம், மகப்பேறு முறைகள் மற்றும் விரிவான வேலைவாய்ப்பு வகைப்பாடுகள் ஆகியவை தரப்படுத்தப்பட்டன.
சமீபத்திய பத்தாண்டுகளில், குறிப்பாக 2001 மற்றும் 2011-இல், மக்கள் தொகை கணக்கெடுப்பு நவீனமயமாகும் பொருளாதாரத்தைக் கண்காணித்தது.
அதாவது, பயண முறைகள், பகுதி நேர மற்றும் முழு நேர வேலை, கல்வி கற்கும் நிலை மற்றும் பெருகிய முறையில் விரிவான மாற்றுத்திறனாளி மற்றும் மகப்பேறு தரவுகள் இதில் அடங்கும்.
மாறிவரும் அந்தக் கண்ணோட்டம், தற்போது குடும்பங்கள் வரையறுக்கப்படும் விதத்திலும் விரிவடைந்து வருகிறது.
சமீபத்திய கணக்கெடுப்பில், சேர்ந்து வாழும் தம்பதிகள் தங்கள் உறவை ஒரு "நிலையான பந்தமாகக்" கருதினால், அவர்கள் திருமணமானவர்களாகப் பதிவு செய்யப்படலாம். இது மாறிவரும் சமூக நடைமுறைகளை அங்கீகரிப்பதற்கான ஒரு மென்மையான நகர்வைக் குறிக்கிறது.
தரவு சேகரிப்பின் நோக்கம் விரிவடைந்துள்ள நிலையில், அத்தகைய தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.
தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) உள்ளிட்ட தரவுத்தளங்களை உருவாக்குவதற்கான சமீபத்திய முயற்சிகள் மற்றும் வாக்காளர் பட்டியல்களின் தீவிர திருத்தங்கள் ஆகியவை, அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு குறித்த பொதுமக்களின் கவலையை அதிகரித்துள்ளதாகவும், இது பெரும்பாலும் குடியுரிமை மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் தொடர்பான கேள்விகளுடன் இணைக்கப்படுகிறது என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், இது கவலையை உருவாக்கலாம்.
இதனால் சில குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதைத் தவிர்ப்பதற்காக, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களது எண்ணிக்கையை அதிகமாகக் காட்டவோ அல்லது வெளியில் புலம்பெயர்ந்துள்ள குடும்ப உறுப்பினர்களைப் பட்டியலிடவோ தூண்டப்படலாம்" என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் இந்திய மக்கள் தொகையியல் நிபுணர் கே.எஸ். ஜேம்ஸ் கூறுகிறார்.
இந்தக் கவலைகளுக்கு அப்பால், ஒரு மிக அடிப்படையான சிக்கல் உள்ளது.
சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையிலான தரவுகள் இல்லாமல், இந்தியா கொள்கைகளை உருவாக்கி வருகிறது.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாத நிலையில், நுகர்வு செலவுகள் முதல் தொழிலாளர் சக்தி தொடர்பான தரவுகள் வரை மாதிரி ஆய்வுகளையே இந்தியா நம்பியுள்ளது.
புள்ளிவிவர அமைச்சகம் இவற்றை ஓரளவிற்குப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வைத்திருக்க முயற்சிக்கிறது.
அசோகா பல்கலைக்கழகத்தின் அஷ்வினி தேஷ்பாண்டே போன்ற பொருளாதார நிபுணர்களுக்கு, இந்தியாவின் அடிப்படை வரைபடத்தையே, எது கிராமப்புறம், நகர்ப்புறம் அல்லது பெருகிவரும் புறநகர்ப்புறம் என்பதை புதுப்பிக்க இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது.
கொள்கைகளுக்கு அடிப்படையாக விளங்கும் வரையறைகளை மங்கச் செய்து, பல துறைகள் ஏற்கெனவே உருமாற்றம் அடைந்திருந்தபோதிலும், அந்த வகைப்பாட்டின் பெரும்பகுதி இன்னமும் 2011-ஆம் ஆண்டுத் தரவுகளையே சார்ந்துள்ளது.
"இது இந்தியாவின் மிகப்பெரிய நலத்திட்டம் மற்றும் பொதுச் செலவின அமைப்பில் உண்மையான விளைவுகளை ஏற்படுத்துகிறது," என்று தேஷ்பாண்டே கூறுகிறார்.
திட்டங்களுக்கான தகுதி தவறான அல்லது காலாவதியான தரவுகளின் அடிப்படையில் இருந்தால், பயனாளிகளின் எண்ணிக்கை தவறாகக் கணக்கிடப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதத்தில் பாதிப்பு ஏற்படலாம்.
உதாரணமாக, நாடு தழுவிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற திட்டங்கள், எந்தப் பகுதிகள் இன்னும் "கிராமப்புறமாக" உள்ளன என்பது குறித்துத் துல்லியமாக அறிந்துவைத்திருப்பத்தைச் சார்ந்துள்ளன. இந்த வகைப்பாடு 15 ஆண்டுகளில் கணிசமாக மாறியிருக்கக்கூடும்.
தற்போதைய தரவு இல்லாததால், பெரும்பாலும் முறைசாரா வேலைகள் மற்றும் குடியிருப்புகளில் இருக்கும் லட்சக்கணக்கான நகர்ப்புற புலம்பெயர்ந்தோரின் நிலை கொள்கை வடிவமைப்பில் சரியாகப் பதிவாகவில்லை.
இந்த இடைவெளி பெருந்தொற்றுக் காலகட்டத்தின் போது வெளிச்சத்திற்கு வந்தது.
"இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது. இது இந்தியாவின் உறுதியான ஒரு படத்தை அளிக்கிறது. சாதி, மதம், வேலைகள், கல்வி, வசதிகள் என அனைத்தையும் பதிவு செய்து, மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதற்கான மிக முழுமையான கண்ணோட்டத்தை வழங்குகிறது," என்று கூறுகிறார் தேஷ்பாண்டே.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை