You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் சாதனைகள்
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, சிறந்த வீராங்கனைகளில் ஒருவராகத் திகழ்கிறார். 29 வயதான இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்களையும், தற்போதைய வீராங்கனைகளில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக உள்ளார்.
மகாராஷ்டிராவின் சாங்லி நகரில் பிறந்த மந்தனா, மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடிய தனது தந்தை மற்றும் சகோதரரால் ஊக்கம் பெற்றார்.
2013-ஆம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான போட்டியில் விளையாடிய போது, உள்ளூர் அளவிலான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்தார் . இது 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இந்தியரின் அதிவேக சதமாகும். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார்.
அவர் 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து மதிப்புமிக்க அர்ஜுனா விருதை அவர் பெற்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு