காணொளி: இரானின் எண்ணெய் வளத்துக்கு குறிவைக்கும் டிரம்ப்

காணொளி: இரானின் எண்ணெய் வளத்துக்கு குறிவைக்கும் டிரம்ப்

இரானில் உள்ள எண்ணெயை கைப்பற்றுவதுதான் தனக்கு மிக பிடித்தமான விஷயம் என கூறி உள்ள டிரம்ப், ஒருவேளை அமெரிக்கா கார்க் (Kharg) தீவை கைப்பற்றலாம் என்றும் கூறி உள்ளார். இரான் அனுமதி இல்லாமல் எந்தவொரு கப்பலும் ஹோர்மூஸை கடக்க முடியாத வகையில் புதிய சிஸ்டத்தை நடைமுறைப்படுத்த இரான் முயன்று வருவதாக இரான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே குவைத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது. என்ன நடக்கிறது? இரான் போரின் சமீபத்திய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுடன் நடத்தி வரும் போர் இரண்டாவது மாதமாக தொடர்கிறது. Financial Times ஊடகத்திடம் பேசிய டிரம்ப், இரானின் எண்ணெயை தன்னால் கைப்பற்ற முடியும் என கூறினார்.

நாங்கள் கார்க் தீவைக் கைப்பற்றலாம் அல்லது கைப்பற்றாமலும் இருக்கலாம். எங்களிடம் பல தேர்வுகள் உள்ளன என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

இதற்கிடையே இரான் நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக புதிய சிஸ்டத்தை கொண்டு வரும் வகையிலான திட்டம் விரைவில் ஒப்புதல் பெற உள்ளதாக கூறினார்.

முன்மொழியப்பட்ட அந்த சிஸ்டத்தின்படி, இரான் அனுமதி இன்றி எந்தவொரு போக்குவரத்தும் ஹோர்மூஸ் வழியாக அனுமதிக்கப்படாது என்றும் போரூஜெர்டி கூறினார்.

மேலும், அந்த நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்திற்கு சுங்கக் கட்டணங்களை வசூலிக்க இரான் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படை தளபதி அலிரெஸா டங்ஸிரி ( Alireza Tangsiri) கொல்லப்பட்டதை இரான் உறுதிப்படுத்தி இருக்கிறது. தங்கள் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறிய 4 நாட்களுக்குப் பிறகு இரான் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை IRGC-ன் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், படைகளை ஒருங்கிணைப்பதிலும், தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு அரணை வலுப்படுத்துவதிலும் டங்ஸிரி ஈடுபட்டிருந்ததாகவும், தீவிர காயத்தின் காரணமாக உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், டங்ஸிரி இல்லாத போதும், IRGC-ன் கடற்படை பிரிவுகள் எதிரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுத்ததாகவும், ஹோர்மூஸ் நீரிணை மீதான தங்கள் உறுதியான கட்டுப்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

IRGC-ன் மிக மூத்த தளபதிகளில் ஒருவரான டங்ஸிரி, சமீபமாக ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் கடந்து செல்வதை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தபடி உள்ளன. இரானில் நடந்து வரும் தாக்குதல் குறித்து ட்ரூத் சோசியல் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இரானில் இது முக்கிய நாள். நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பல இலக்குகள் அமெரிக்க ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக US Central Command

கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

அதேபோல, இஸ்ரேல் மீதான தாக்குதலும் தொடர்கின்றன. திங்கட்கிழமை ஹைஃபாவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இந்த ஏவுகணை இரானில் இருந்து ஏவப்பட்டதா அல்லது ஹெஸ்பொலா குழு ஏவியதா என்பது தெளிவாக தெரியவில்லை என ராய்ட்டர்ஸ் கூறி உள்ளது.

எனினும், ஹைஃபாவில் மற்றொரு இடத்தில் இரான் தாக்குதல் சம்பவம் உறுதியாகி உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இடத்தை பார்வையிட்ட இஸ்ரேலின் அவசரக்கால மீட்புக் குழு, இதில் எந்த உயிரிழப்பும் இல்லை என கூறியது.

லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல் தொடர்கிறது. ஹெஸ்பொலா குழுவின் உட்கட்டமைப்புகளை குறிவைப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன. பெய்ரூட்டின் தெற்கே இஸ்ரேல் புதிய தாக்குதல் நடத்தியதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானில் நடந்த தனித்தனி சம்பவங்களில் தங்கள் ஆறு வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரம், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

ஹெஸ்பொலாவுக்கு எதிரான தரைவழி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

குவைத்தில் உள்ள மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இரான் நடத்திய தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்ததாக குவைத் மின் மற்றும் நீர் அமைச்சகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்பவர் தான் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர். 36 வயதான சந்தான செல்வத்திற்கு திருமணமாகி ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு