You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்
ஜனவரி 28, 2026 அன்று, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த தனி விமானம், புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில், அஜித் பவார், இரண்டு பணியாளர்கள் மற்றும் அவரது இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், இந்தியாவில் பிரபலங்களின் உயிரைப் பறித்த பிற விமான விபத்துகளை நினைவுபடுத்துகிறது.
2016 முதல் 2021 வரை குஜராத் முதலமைச்சராக இருந்தவர் விஜய் ரூபானி. ஜூன் 2025 இல் ஆமதாபாத்தில் இருந்து, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் பயணித்த ஏர் இந்தியா விமானம் அருகிலுள்ள பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 171 நபர்களில் ரூபானியும் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
டிசம்பர் 2021 இல், இந்தியாவின் முதல் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவர் பயணித்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதில் அவரது மனைவி மற்றும் 11 பேரும் உயிரிழந்தனர்.
2009 ஆம் ஆண்டு, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, நல்லமலா காடுகளில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இறந்தார். அவரது திடீர் மறைவு மாநிலம் முழுவதும் பரவலான துக்கத்தை ஏற்படுத்தியது.
படையப்பா, அருணாச்சலம், அம்மன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சௌந்தர்யா, 2004 ஆம் ஆண்டு பெங்களூரு அருகே தனது ஒற்றை எஞ்சின் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
மூத்த அரசியல் தலைவரும், ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையுமான மாதவ்ராவ் சிந்தியா, செப்டம்பர் 30, 2001 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள மெயின்புரி அருகே தனது விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
1980 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி, ஒரு விமானத்தில் ஏரோபாட்டிக் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தபோது தனது 33-வது வயதில் உயிரிழந்தார். அவரது விமானம் டெல்லியின் டிப்ளமட்டிக் என்க்ளேவில் விபத்துக்குள்ளானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு