You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "பனிப் போர்வையில் அமெரிக்க நகரங்கள்" - வரலாறு காணாத பனிப்புயலால் என்ன பாதிப்பு?
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை திங்கட்கிழமை தாக்கிய கடும் பனிப்புயல் காரணமாக, வரலாற்றில் இல்லாத அளவிலான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் மிகச்சிறிய மாகாணமான ரோட் தீவு, இந்தப் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரையில்லாத அளவிலான மிக மோசமான பனிப்புயலாக இது பதிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாகாண தலைநகரான பிராவிடன்ஸில் (Providence) 36 அங்குல பனி பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 1978-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதிவான 28.6 அங்குலமே அதிகபட்சமாக இருந்தது.
நியூயார்க்கில் போக்குவரத்து நிலைமை "கிட்டத்தட்ட சாத்தியமற்ற" ஒன்றாக இருப்பதாக மாகாண முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின் தடையைச் சந்தித்துள்ளதால், நியூ ஜெர்சி மற்றும் மசாசூசெட்ஸ் மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க்கில் முதலில் பயணத் தடை விதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேநேரம், தற்போதும் அங்கும் அவசர நிலை அமலில் இருப்பதாக அந்நகர மேயர் மம்தானி கூறியுள்ளார்.
"நியூயார்க்கில் அவசரகால நிலை தொடர்கிறது. பயணத் தடை இன்று நண்பகலில் முடிவடைந்தது, ஆனால் ஆபத்தான பயண எச்சரிக்கை அறிவிப்பு இன்றிரவு வரை அமலில் உள்ளது. அத்தியாவசிய போக்குவரத்து - கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார பைக்குகள் - சாலைகளில் இருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அவசரகால வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் சாலைகளை சுத்தப்படுத்தி, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.
சாலையில் பிற வாகனங்கள் செல்லாமல் இருப்பது இந்தப் பணியை எளிதாக்கும். இவை ஆபத்தான நிலைமைகள். பனி தொடர்ந்து பெய்வதுடன், குவிந்த பனிப்பொழிவும் மற்றும் மீண்டும் உறைபனி ஏற்படுவதும் பயணத்தை ஆபத்தாக மாற்றியுள்ளன.முடிந்தால் வீட்டிற்குள் இருங்கள். வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தால், தயவுசெய்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள்."
பனிப்புயல் எச்சரிக்கையானது நார்த் கரோலினாவிலிருந்து வடக்கு மெய்ன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு கனடாவின் சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலைக்குள் 1 முதல் 2 அடி வரை பனி குவியக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பென்சில்வேனியாவின் மிகப்பெரிய நகரமான பிலடெல்பியாவில் உள்ள விமான சேவை முழுமையாக முடங்கியது. இதனால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்த பனிப்புயலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் அதை கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.
விமானப் போக்குவரத்து கண்காணிப்பு தளமான ஃப்ளைட் அவேர் தகவலின்படி, அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் இயக்கப்படும் 5,706-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நியூயார்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் 98 சதவீத விமானங்களும், ஜேஎஃப்கே (JFK) விமான நிலையத்தில் 91 சதவீத விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு விமான நிலையங்களிலும் தலா 19 அங்குல பனி பதிவாகியுள்ளது.
இதேபோல், பாஸ்டனின் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் 92 சதவீதமும், நியூ ஜெர்சியின் நெவார்க் லிபர்ட்டி விமான நிலையத்தில் 92 சதவீதமும், பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் 80 சதவீதமும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு