You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெற்ற மகள்களின் கை, கால்களை கட்டி விடியவிடிய கூரையில் தொங்கவிட்ட தந்தை - என்ன நடந்தது? தாய் கண்ணீர்
மகாராஷ்டிராவில், ஒரு திருட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தந்தை தனது மகள்களை கயிற்றால் கட்டி வீட்டில் தொங்கவிட்டதில் ஒரு சிறுமி உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தாது ஹைபத் யம்கர் (51) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தின் சாங்லி மாவட்டத்தின் அட்பாடி தாலுகாவில் உள்ள பன்புரியில் நடந்துள்ளது.
பன்புரி கிராமவாசியும் இரு சிறுமிகளின் தந்தையுமான தாது ஹைபத் யம்கர் என்பவரை அட்பாடி போலீசார் கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமிகள் அடிக்கடி சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணையில் தெரியவந்தது என்ன?
தாது ஹைபத் யம்கரின் மகள்களான, 11 வயது அனுஜா மற்றும் 9 வயது ரிதுஜா ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் படித்து வந்தனர். அனுஜா ஐந்தாம் வகுப்பும், ரிதுஜா நான்காம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த இரு சிறுமிகளும் கடந்த சில மாதங்களாக பள்ளி, வீடு மற்றும் பிற இடங்களில் சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
புதன்கிழமை (மார்ச் 25), சகோதரிகள் அனுஜா மற்றும் ரிதுஜா தங்களது வீட்டில் பணத்தை திருடியதாக அண்டை வீட்டினர், ரிதுஜா மற்றும் அனுஜாவின் குடும்பத்திடம் தெரிவித்துள்ளனர்.
அன்று மாலை மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமிகளின் தந்தை தாது யம்கரு இந்த விஷயம் தெரியவந்துள்ளது.
திருட்டைப் பற்றி கேள்விப்பட்டதும், ஆத்திரத்தில் அனுஜா மற்றும் ரிதுஜா ஆகிய இரு சிறுமிகளின் கை கால்களையும் கட்டி, வீட்டின் கூரையில் இருந்த ஒரு இரும்பு கம்பியில் அவர் தொங்கவிட்டுள்ளார்.
தாது யம்கரின் மனைவி, தாய் மற்றும் தந்தை ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஆத்திரமடைந்த தாது யம்கர், யாராவது குறுக்கிட்டால் அனைவரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இரு சிறுமிகளும் இரவு முழுவதும் அங்கேயே தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அவர்களுக்கு தாகமும் அதிகமாக இருந்துள்ளது. அவர்களின் தந்தை தாது யம்கர் அவர்களுக்கு இரண்டு முறை தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சிறுமிகளைக் கீழே இறக்கவில்லை.
இரு சிறுமிகளும் இரவு முழுவதும் தொங்கியபடியே இருந்துள்ளனர். காலையில், சிறுமிகள் கீழே இறக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பந்தர்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ரிதுஜா ஆம்புலன்சிலேயே உயிரிழந்தார். அனுஜாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் தற்போது அட்பாடியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
தாய் கூறியது என்ன?
சிறுமிகளின் தாயார் ராணி யம்கர், "பள்ளியிலோ அல்லது வேறு இடங்களிலோ சிறுசிறு திருட்டுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களின் தந்தை கோபப்படுவார். அன்று அவர் குடித்திருந்தார். சிறுமிகளின் கை கால்களைக் கட்டி அவர்களைத் தொங்கவிட்டார்." என்கிறார்.
"அன்று இருவரும் அண்டை வீட்டில் பணம் திருடியுள்ளனர். அந்த பணத்தில் 500 ரூபாயை அவர்கள் செலவு செய்துவிட்டதால், மீதமிருந்த 1450 ரூபாயை நாங்கள் கண்டுபிடித்தோம். பின்னர் அண்டை வீட்டாரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்தோம்."
"சிறுமிகள் செலவழித்துவிட்ட பணத்தையும் சேர்த்தே அவர்களுக்கு திருப்பிக் கொடுத்தோம். அவர் அன்றைய தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார். ஆத்திரத்தில் மகள்களை இவ்வாறு செய்துவிட்டார்" என்று ராணி கூறினார்.
"'அவர்கள் தினமும் திருடுகிறார்கள். இதற்கு எங்கிருந்து பணம் கட்டுவது?' என்று என் கணவர் கேட்பார். அந்த நேரத்தில் நாங்கள் இங்கேதான் இருந்தோம். ஆனால் அவர் எங்களை சிறுமிகளின் அருகில் வரவிடவில்லை," என்றும் அவர் கூறினார்.
சிறுமிகள் இரவு முழுவதும் தொங்கவிடப்பட்டனர். காலையில், சிறுமிகளின் தாத்தா அவர்களை விடுவித்தார். அந்த நேரத்தில் அனுஜா பேசிக் கொண்டிருந்தார், ஆனால் ரிதுஜா பேசவில்லை.
"நாங்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நாங்கள் அவள் தந்தையைத் தடுக்க முயன்றோம். ஆனால் அவர் எங்கள் மீது கோபப்பட்டு எங்களை அருகில் வரவிடவில்லை. மகள்கள் எப்போதும் திருடுவதால் அவர் கோபமாக இருந்தார்." என்று ராணி கூறினார்.
சிறுமிகளின் தாத்தா கூறியது என்ன?
சிறுமிகள் தொங்கவிடப்பட்டபோது தான் வீட்டில் இல்லை என்று சிறுமிகளின் தாத்தா தெரிவித்தார். தாத்தா யம்கர் வியாழக்கிழமை (மார்ச் 26) அதிகாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தார், அதன் பிறகு அவர் சிறுமிகளைத் தொங்கிய நிலையிலிருந்து கீழே இறக்கியுள்ளார்.
இரு சிறுமிகளுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரிதுஜாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இரு சிறுமிகளையும் பந்தர்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இரு சிறுமிகளும் ஆம்புலன்ஸில் பந்தர்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ரிதுஜா வழியிலேயே இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அனுஜா மயக்கத்தில் இருந்ததால் அட்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், இறந்த ரிதுஜாவை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையில், சிகிச்சை பெற்று வந்த அனுஜாவுக்கு நினைவு திரும்பியது. நடந்த அனைத்தையும் அவர் மருத்துவர்களிடம் கூறினார். அதன் பிறகு, அட்பாடி போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க அட்பாடி போலீசார் பன்புரிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த ரிதுஜாவின் உடலை அவர்கள் மீட்டனர். அதன் பிறகு போலீசார் ரிதுஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமிகளின் தந்தையான தாது யம்கர் காவலில் எடுக்கப்பட்டார்.
"சிறுமிகள் திருடுவதால், 'பெண்களை இப்படியா வளர்ப்பது?' என்று பிறர் எங்களைத் திட்டுவார்கள். இரவில் கூட அவர்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள், வெளியே தூங்குவார்கள்." என்று சிறுமிகளின் பாட்டி கூறினார்.
"அன்றும் திருட்டுப் புகார் காரணமாகத்தான் இது நடந்தது. நாங்கள் வந்து அவர்களை மீட்கச் சென்றபோது, குறுக்கே வருபவர்களைக் கொன்றுவிடுவதாக தாது யம்கர் மிரட்டினார். பின்னர் நாங்கள் அனைவரும் மௌனமாக அமர்ந்தோம். சிறுமிகள் இரவு முழுவதும் எங்களை அழைத்துக் கொண்டிருந்தனர். பின்னர் சிறுமிகள் தந்தையை அழைத்தனர். அவர் இரண்டு முறை தண்ணீர் கொடுத்தார்," என்றும் அவர் கூறினார்.
காவல்துறை கூறியது என்ன?
அட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினய் பஹிர் பேசுகையில், "ரிதுஜா என்ற சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவமனையிலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலதிக விசாரணையில், அட்பாடி தாலுகாவின் பன்புரியைச் சேர்ந்த தாது ஹைபத் யம்கர் தனது இரண்டு மகள்களான அனுஜா (11 வயது) மற்றும் ரிதுஜா (9 வயது) ஆகியோரை கை கால்களைக் கட்டி நேற்றிரவு (மார்ச் 27) தொங்கவிட்டது தெரியவந்தது."
"அனுஜா கவலைக்கிடமான நிலையில் அட்பாடியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதால், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரிதுஜா கை கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டுக் கொல்லப்பட்டதால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்," என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு