ஆஸ்திரேலியா மீது ஆதிக்கம் செலுத்தி வென்ற ஜிம்பாப்வே - உயரமான பந்து வீச்சாளர் சாதித்தது என்ன?

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜிம்பாப்வேயின் இந்த வெற்றியின் நாயகன் பிளெசிங் முசரபானி ஆவார்.

29 வயதான பிளெசிங் முசரபானி ஜிம்பாப்வேவுக்கு போட்டியை வென்றெடுக்கும் ஒரு பந்துவீச்சை நிகழ்த்தினார்.

நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார்.

பிளெசிங் முசரபானி சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளார், 2018 இல் டி20 போட்டிகளில் அறிமுகமானார்.

இதுவரை விளையாடிய 84 டி20 சர்வதேச போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிளெசிங் முசரபானி ரன்களை அதிக கொடுக்காத பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர், இதுவரை இந்த 84 போட்டிகளில் 7.14 என்ற எகானமி விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

உயரம் 6 அடி 8 அங்குலம்

முசரபானி 21 வயதில் அறிமுகமானபோது, ​​அவரது உயரம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன.

அவரது உயரம் 6 அடி 8 அங்குலம். முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை விட உயரமானவர்.

டி20 கிரிக்கெட்டைத் தவிர, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முசரபானி அற்புதமாக செயல்பட்டார்.

2025 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளராக முசரபானி இருந்தார்.

கடந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தக் காலகட்டத்தில், ஒரு இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த செயல் திறனாக இருந்தது.

2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடிய அவர், ஆறு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 2022 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு இன்னும் ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு