துபை, செளதியை குறி வைக்கும் இரான் ஓமனை ஏன் அதிகம் தாக்கவில்லை?
பட மூலாதாரம், STEP VIDEO GRAPH
- எழுதியவர், ஓம்னேயா எல் நகார்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
புதன்கிழமை (ஏப்ரல் 1) அன்று, தென்னாப்பிரிக்காவில் உள்ள இரானிய தூதரகம் எக்ஸ் தளத்தில், "இரான் மற்றும் ஓமன் மட்டுமே ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" என்று பதிவிட்டது.
அதைப் பகிர்ந்து, இந்தியாவில் உள்ள இரானிய தூதரகம், "எங்கள் இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர். கவலைப்பட வேண்டாம்" என்று பதிவிட்டது.
இரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரைத் தொடர்ந்து பெரும்பாலான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உறுப்பு நாடுகள் இரான் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன, ஆனால் ஓமன் அதற்கு ஒரு விதிவிலக்காக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நீண்டகாலமாக மத்தியஸ்தர் என்ற பங்கை வகித்து வரும் இந்த நாடு, போரின் மத்தியிலும் தனது நடுநிலையைப் பேணி வருகிறது.
மற்ற ஜிசிசி உறுப்பு நாடுகள் இரான் மீது ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், ஓமன் 'அனைவருக்கும் நண்பன், எவருக்கும் எதிரியல்ல' என்ற தனது வெளியுறவு கொள்கையில் உறுதியாக இருந்தது.
இந்த நிலைப்பாடு, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களை விமர்சிக்கும் மிக முக்கியமான ஜிசிசி நாடாக ஓமனை மாற்றியுள்ளது, இதனை ஒரு 'சட்டவிரோதப் போர்' என்று அழைப்பதோடு, அதை உடனடியாக நிறுத்தவும் கோரியுள்ளது.
போரில் இணைய மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்த ஒரே ஜிசிசி நாடும் ஓமன்தான்.
இந்தக் காரணத்தால், இரானுடன் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கு வளைகுடா பிராந்தியத்தில் ஓமன் மட்டுமே கடைசி நம்பகமான ராஜீய இணைப்பாகத் திகழ்கிறது.
பட மூலாதாரம், Getty Images
போரில் ஓமனின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
அமெரிக்க - இரான் பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராக இருந்த ஓமன், பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதலால் பின்னடைவைச் சந்தித்தது.
தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக, வாஷிங்டனில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடனான சந்திப்பின் போது ஓமனின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி, "ஒரு அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் நிலையில் இருப்பதாகக்" கூறினார்.
ஆனால், தாக்குதலுக்குப் பிறகு ஏமாற்றத்தை வெளிப்படுத்திய புசைதி, "செயல்திறன் மிக்க மற்றும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஒருமுறை சீர்குலைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார். அவர் அமெரிக்காவிடம், "இது உங்கள் போர் அல்ல" என்று கூறினார்.
மோதலின் முதல் நாளிலிருந்தே ஓமன் இந்த நிலைப்பாட்டைக் கடைபிடித்து வருகிறது. இரானின் தாக்குதல்களைக் கண்டித்த அதன் வளைகுடா அண்டை நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை ஓமன் விமர்சித்தது.
தனது நிலப்பரப்பு மற்றும் கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், ஓமனின் நிலைப்பாடு மாறாமல் இருந்தது.
அந்நாடு மிகவும் எச்சரிக்கையான மொழியில் தாக்குதல்களைக் கண்டித்தது. ஓமன், இரானின் பெயரைக் குறிப்பிடுவதையோ அல்லது குற்றம் சாட்டுவதையோ தவிர்த்தது.
மார்ச் 18 அன்று சௌத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு இரானிய நிலைகளைக் குறிவைப்பதை அது பகிரங்கமாக விமர்சித்தது.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஓமன் எவ்வாறு பார்க்கிறது?
நடந்து வரும் இந்தப் போரை ஓமன் 'சட்டவிரோதமானது' என்று கருதுகிறது. அதன் வெளியுறவு அமைச்சர் புசைதி மார்ச் 18 அன்று தி எகனாமிஸ்ட் இதழின் கட்டுரையில், "வல்லரசு அதன் வெளியுறவுக் கொள்கையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டது" என்று கூறினார்.
"அமெரிக்காவின் நண்பர்கள் இந்த சட்டவிரோதப் போரிலிருந்து வெளியேற அதற்கு உதவ வேண்டும், ஏனெனில் இது இரானுக்குப் பதிலடி கொடுக்க ஒரு காரணத்தைக் வழங்கியுள்ளது" என்று அவர் கூறினார்.
ஓமனின் இந்த நிலைப்பாடு மற்ற ஜிசிசி நாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
ஓமன் இஸ்ரேலை அதிகமாக விமர்சித்தது. கிராண்ட் முஃப்தி அகமது பின் ஹமத் அல்-கலீலி இதை "இரானுக்கு எதிரான துரோகத்தனமான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்" என்று அழைத்தார்.
பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், "உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் விழிப்புணர்வுள்ள மக்கள் இதற்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டுமென" அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் போலல்லாமல், ஓமன் இஸ்ரேலுடன் முறையான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
இருப்பினும், அது தொடர்பை பேணி வருகிறது. 2018இல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மஸ்கட்டிற்கு பயணம் செய்தார். 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு ராஜீய ரீதியில் குறிப்பிடத்தக்க அளவிலான பயணம் இதுவாகும்.
சில பார்வையாளர்கள் ஆரம்பத்தில் இஸ்ரேலுடனான ஓமனின் உறவை வெளிப்படைத்தன்மையின் அறிகுறியாகக் கருதினர். ஆனால் ஒரு சுதந்திரமான 'பாலத்தீன நாடு' உருவான பின்னரே இத்தகைய நடவடிக்கை சாத்தியமாகும் என்று ஓமன் கூறுகிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
ஓமனின் உத்தி மற்றும் பொருளாதார நிலை
ஓமனில் அமெரிக்காவிற்கு மூன்று ராணுவ தளங்கள் உள்ளன. மசிரா தீவு விமான தளம், ரஃபோ தும்ரைத் விமான தளம் மற்றும் டுக்ம் துறைமுகம்.
மத்தியஸ்தராக ஓமனுக்கு முக்கியப் பங்கு இருந்தபோதிலும், அதனால் இரானின் பதிலடித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
ஓமன் மீதான முதல் தாக்குதல் மார்ச் 1 அன்று நடந்தது. அப்போது இரண்டு டிரோன்கள் டுக்ம் வணிகத் துறைமுகத்தைக் குறிவைத்தன.
ஒரு வெளிநாட்டு தொழிலாளி காயமடைந்தார். ஒரு மத்தியஸ்தர் என்ற வகையில் ஓமனுக்கிருந்த பாதுகாப்பு உடைந்துவிட்டதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மேலும், சலாலா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு தளங்களும் குறிவைக்கப்பட்டன.
இருந்தபோதிலும், போர் தொடங்கியதிலிருந்து மிகக் குறைவாகவே இலக்கு வைக்கப்பட்ட நாடாக ஓமன் உள்ளது, அதே நேரத்தில் அதன் ஜிசிசி அண்டை நாடுகள், குறிப்பாக சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மற்ற வளைகுடா நாடுகளைப் போலல்லாமல், ஓமனின் பங்குச் சந்தை வீழ்ச்சியடையவில்லை. அதன் முக்கிய குறியீடான 'MSM 30' கடந்த ஒரு மாதத்தில் 11.77 சதவீதம் உயர்ந்தது, இந்த நாட்டை வேறுபடுத்திக் காட்டுகிறது.
ஹோர்மூஸ் நீரிணையில் தடை ஏற்பட்ட போதிலும், ஓமனின் புவியியல் இருப்பிடம் அதற்கு சாதகமாக உள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எல்என்ஜி (LNG) விநியோகம் இந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கிறது.
இந்தியப் பெருங்கடலுக்கான நேரடி அணுகல் மற்றும் உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் ஓமனின் பொருளாதாரத்திற்கு ஆதரவளித்துள்ளன.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
பட மூலாதாரம், Getty Images
ஓமன்-இரான் உறவுகளின் எதிர்கால வாய்ப்புகள் என்ன?
தனது வளைகுடா அண்டை நாடுகளைப் போலல்லாமல், ஓமன் இரானுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை வழிகளைப் கடைபிடிப்பதன் மூலம் ஒரு தனித்துவமான பங்கினை உருவாக்கியுள்ளது. இது இருந்தபோதிலும், இரானின் எதிர்ப்பாளர்கள் ஓமன் மீது கோபம் கொள்ளவில்லை.
இந்த காரணத்திற்காக, ஓமன் நீண்ட காலமாக இரான் மற்றும் அதன் வளைகுடா போட்டியாளர்களுக்கு இடையே, குறிப்பாக சௌதி அரேபியாவிற்கு, ஒரு பொதுவான மத்தியஸ்தராகக் கருதப்படுகிறது.
ஜிசிசி உறுப்பினர் பதவி மற்றும் இரானுடனான உறவுகளைச் சமன் செய்யும் ஓமனின் இந்த வெளியுறவுக் கொள்கை தொடர வாய்ப்புள்ளது.
ஏமனில் இரான் ஆதரவு ஹூத்திகளுக்கு எதிராகப் போராடும் கூட்டணியில் இணைய வேண்டாம் என்ற அதன் முடிவே, ஓமன் தொடர்ந்து ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டை எடுத்து வருவதற்குச் சான்றாகும்.
போர் உள்ளபோதிலும், ஓமனுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்கிறது. புதிய இரானிய அதி உயர் தலைவராக மொஜ்தபா காமனெயி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த ஒரே ஜிசிசி நாடு ஓமன் ஆகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை